தென்னிந்தியாவில் பள்ளி மாணவியும் மாணவரும் ஒருவருக்கொருவர் கட்டிப்பிடித்துக் கொண்டதால் பள்ளி நிர்வாகம் ” பொது இடத்தில் அன்பை வெளிப்படுத்தியதாக” கூறி அவர்களை பள்ளியை விட்டு வெளியேற்றிய சம்பவம் தேசிய அளவில் சர்ச்சையை ஏற்படுத்தியள்ளது.
பிபிசியின் அஷ்ரஃப் படன்னா அவர்களிடம் பேசினார்.
கேரளாவில் உள்ள புனித தாமஸ் மத்திய பள்ளியில் நடைபெற்ற ஒரு போட்டியில், 15 வயது மாணவி, தான் பாடி முடித்த பிறகு, எவ்வாறு பாடினேன் என்று தன்னுடைய 16 வயது நண்பனிடம் கேட்டார். அவரைப் பாராட்டும் விதமாக அச்சிறுவன் அவளைக் கட்டி பிடித்தான்.
‘இந்த சம்பவம் சுமார் ஒன்று அல்லது இரண்டு நொடிகள் மட்டுமே நீடித்தது” என்று இதற்காக தான் புகைப்படம் எடுக்கப்படுவதை விரும்பாத அச்சிறுமி பிபிசியிடம் கூறினார்.
”என்னைச் சுற்றி நிறைய ஆசிரியர்களும் மாணவர்களும் இருந்தனர், நான் எந்த தவறும் செய்யவில்லை”
ஆனால், ஒரு ஆசிரியர் இதுபற்றி பள்ளி முதல்வரிடம் புகார் செய்தார்.
அடுத்த நாள், 22 ஜூலை அன்று, இருவரும் பள்ளியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டனர். நான்கு மாதங்களுக்குப் பிறகு, அந்த மாணவன் பள்ளியிலிருந்து வெளியேற்றப்பட்டான். இந்த செய்திகள் எந்த ஊடகத்திலும் வெளிவரவில்லை.
”பள்ளிக்கூடம் என்பது குழந்தைகளை சீர்திருத்துவதற்கான ஓர் இடமும் கூட” என்று பிபிசியிடம் பள்ளி முதல்வர் செபாஸ்டியன் டி ஜோசப் கூறினார்.
”சிறுவன் மன்னிப்புக் கேட்க ஒரு வாய்ப்பு கொடுத்தோம், ஆனால் அவனுக்கும் அவனது பெற்றோருக்கும் இதனால் எந்த வருத்தமும் இல்லை”
ஆனால், அந்த சிறுவன் தான் உடனடியாக மன்னிப்பு கேட்டதாக கூறினான்.
அந்த மாணவியோ, மீண்டும் பள்ளியில் சேரவில்லை. ஆனால், பள்ளிப் பதிவுகளின்படி, அப்படிப்பட்ட ஒரு மாணவி அந்தப் பள்ளியில் பதிவு செய்துகொள்ளவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவரது தந்தை துபாயில் பணியாற்றி வந்ததால், ஜூன் மாதம்தான் இந்தியா வந்தார்கள். அவரது சேர்க்கை நடைமுறைகள் முழுமை பெறாமல் இருந்த நிலையில், இந்தச் சிக்கலும் நடந்துவிட்டது.
குற்றச்சாட்டுகளை விசாரிக்க அந்தப் பள்ளி அமைத்துள்ள ஒழுங்குநடவடிக்கை குழுவிற்கு முன்பு, இரு மாணவர்களும் தோன்றுமாறு கேட்கப்பட்டுள்ளனர்.
அந்த மாணவரும் மாணவியும் பொது இடத்தல் முறைதவறி, ஒழுங்கீனமாக நடந்து கொண்டதாக பள்ளி நிர்வாகம் தயாரித்த குற்றச்சாட்டு ஆவணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அந்தக் குழுவின் உறுப்பினர்கள், அவர்கள் இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட புகைப்படங்களின் பிரதிகளை வைத்திருப்பதாக அந்த மாணவி குற்றம் சாட்டியுள்ளார்.
அந்த மாணவனின் பெற்றோர் கேரள சிறுவர் உரிமைகள் ஆணையத்திடம் முறையிட்டதையடுத்து, அது மாணவனின் இடைநீக்கத்தைத் திரும்பப்பெற பள்ளிக்கு உத்தரவிட்டது.
ஆனால், இதனை மறுத்து பள்ளி நிர்வாகம் கேரள உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது. பள்ளியின் வாதத்தை ஏற்று, பள்ளியின் தரம் மற்றும் நற்பெயரைக் காப்பாற்றுவதற்கு அந்த மாணவரை வெளியேற்றியது சரியான நடவடிக்கை என்று உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துவிட்டது.
தற்போது, அந்த உத்தரவுக்கு எதிராக மேல்முறையீடு செய்ய, கிறிஸ்துமஸ் விடுமுறை முடியும் வரை காத்திருக்க மாணவரின் பெற்றோர் முடிவெடுத்துள்ளனர்.
அந்த மாணவர் வேறு பள்ளிக்கு மாற அனுமதிப்பதாக பள்ளி நிர்வாகம் தரப்பில் பிபிசியிடம் தெரிவிக்கப்பட்டது. ஆனால், மத்திய கல்வி வாரியம்தான், அந்த மாணவர் தேர்வு எழுத முடியுமா என்பதை முடிவு செய்ய வேண்டும் என்றும் நிர்வாகம் கூறியுள்ளது.
ஆனால் அந்த மாணவியின் நிலைமை குறித்து தெளிவாக தெரியவில்லை. நீதிமன்றத்தை அணுகுவார்களா என்பதில் அவரது பெற்றோர் தெளிவாக இல்லை.
“கெளரவமாக நடத்தும் பாதுகாப்பான சூழல் கொண்ட ஒரு நல்ல பள்ளியில் நான் படிக்க விரும்புகிறேன். எனது கல்வியுரிமையையும் தனியுரிமையையும் இந்த பள்ளி மீறிவிட்டது” என்று அந்த மாணவி கூறினார்.
அவர் ஏற்கனவே வேறொரு பள்ளிக்கு விண்ணப்பித்துள்ளார், ஆனால் இந்த சம்பவம் காரணமாக அவருக்கு அங்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.