உடல்நலக் குறைவினால் கொழும்பு தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் குணமடைந்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
திருகோணமலையில் தங்கியிருந்த போது நேற்று முன்தினம் மாலை திடீரென இரா.சம்பந்தனுக்கு உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டது.
இதையடுத்து உடனடியாக அவர், கொழும்புக்கு அழைத்து வரப்பட்டு, தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டார்.
அவரது உடல் நிலை மோசமாக இல்லை என்றும், உடல் நிலை தேறி, நல்ல நிலையில் இருப்பதாகவும், மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
அழுத்தத்துடன் தொடர்புடைய நோயினாலேயே இரா.சம்பந்தன் பாதிக்கப்பட்டதாகவும் அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
அண்மைய நாட்களாக உள்ளூராட்சித் தேர்தல் தொடர்பான பணிகளில் அவர் தீவிரமாக ஈடுபட்டிருந்தார் என்றும், மருத்துவர்களின் ஆலோசனைப்படி உரிய ஓய்வு எடுத்துக் கொள்ளாமல் தொடர் அரசியல் பணிகளை மேற்கொண்டிருந்தார் என்று கூறப்படுகிறது.
இதனிடையே, இரா.சம்பந்தனின் உடல் நிலை தேறியுள்ளதாகவும், இன்னும் இரண்டொரு நாட்களில் அவர் வீடு திரும்பி விடுவார் என்றும் அவரது தனிப்பட்ட செயலர் தெரிவித்துள்ளார்.
உடல் நலக் குறைவினால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதால், இரா.சம்பந்தன் நேற்று இந்தியாவுக்கு மேற்கொள்ளவிருந்த பயணமும் ரத்துச் செய்யப்பட்டுள்ளது.