கொழும்பு, தலங்கம பிரதேசத்தில் விளையாட்டுக்காக மோட்டார் சைக்கிள் ஓட்டிய இரு இளைஞர்கள் விபத்தொன்றில் உயிரிழந்துள்ளனர்.குறித்த சம்பவம் நேற்று முன்தினம் இரவு இடம்பெற்றுள்ளதாக தலங்கம பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.அக்குரேகொடையில் இருந்து டென்சில் கொப்பேகடுவ வீதி வரை மோட்டார் சைக்கிளை ஓட்டிய இருவரும் குறுக்கு வீதி ஒன்றில் மற்றுமொரு வாகனத்தை முந்திச் செல்ல முற்பட்ட போது விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் இருவரும் உயிரிழந்துள்ளனர்.17 வயதான செனவிரத்ன களுத்தர லியனகே புலான் சஞ்சய மற்றும் செனவிரத்ன களுத்தர லியனகே தில்ஷான் ஆகிய இளைஞர்களே மேற்படி சம்பவத்தில் உயிரிழந்தவர்களாவர். உறவினர்களான இந்த சகோதரர்கள் நேற்று முன்தினம் சாதாரண தரப் பரீட்சை நிறைவு பெற்ற மகிழ்ச்சியில் நண்பர்களுடன் மோட்டார் சைக்கிளை ஓட்டிக்கொண்டிருந்துள்ளனர்.இதில் சம்பவ இடத்தில் ஒரு இளைஞர் உயிரிழந்ததுடன் மற்றைய இளைஞர் கொஸ்வத்தை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக தெரிய வந்துள்ளது.
தலங்கம தெற்கு திடீர் மரண விசாரணை அதிகாரி மரண விசாரணைகளை மேற்கொண்டார். சடலங்களை பிரேத பரிசோதனைக்காக தேசிய வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்குமாறு தலங்கம பொலிஸாருக்கு அவர் உத்தரவிட்டுள்ளார்.மேலும் உயிரிழந்த இளைஞர்கள் இராஜ கிரிய ஜனாதிபதி கல்லூரியில் கல்வி கற்று வந்தவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.