ஜெயலலிதா மருத்துவ சிகிச்சை தொடர்பான ஆவணங்கள் மற்றும் ஆதாரங்கள் இருந்தால் தாக்கல் செய்யும் படி சசிகலா, அப்போலோ தலைவர் பிரதாப் ரெட்டி மற்றும் அவரது மகளுக்கு ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்க அமைக்கப்பட்ட ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்கள் உடல் நலக்குறைவு காரணமாக கடந்தாண்டு செப். 22 ஆம் தேதி அப்பாலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து அவருக்கு 75 நாட்கள் சிகிச்சைஅளிக்கப்பட்ட நிலையில், கடந்தாண்டு டிச. 5ம் தேதி திடீரென மரணம் அடைந்தார். மருத்துவமனையில் ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை மிகவும் ரகசியமாக வைக்கப்பட்டது. 75 நாட்கள் மருத்துவமனையில் இருந்த காலக்கட்டத்தில் அவரது புகைப்படமோ, வீடியோவோ வெளியிடப்படவில்லை.
இந்நிலையில், தினகரன் ஆதரவு எம்எல்ஏ வெற்றிவேல், மருத்துவமனையில் ஜெயலலிதா சிகிச்சை பெற்ற காணொளியினை வெளியிட்டதனை தொடர்ந்தே, சசிகலா மற்றும் அப்போலோ நிர்வாகத்திற்கு விசாரணை கமிஷன் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இதனைத் தொடர்ந்து விசாரணை கமிஷனில் ஆஜராக சசிகலா பரோலில் வெளிவருவார் என எதிர்பார்க்கப்படுகிறது.