இலங்கையின் வடக்கே யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டை கோட்டைக்காடு பகுதியில் இடம்பெற்ற உந்துருளி விபத்தில் இளைஞர் ஒருவர் பலியாகியதோடு மற்றுமொரு இளைஞர் படுகாயமடைந்துள்ளதாக வட்டுக்கோட்டைப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இன்றைதினம் பிற்பகல் இரண்டு மணியளவில் இடம்பெற்ற இந்த அனர்த்தத்தில் உந்துருளியை ஓட்டிவந்த இளைஞர் எரிந்து கருகியுள்ளதாக அவர்கள் மேலும் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து மேலும் தெரியவருவதாவது, மரணவீடு ஒன்றிற்குச் சென்றுவிட்டு வட்டுக்கோட்டை-தெல்லிப்பழை வீதி வழியாகச் சென்றபோது வட்டுக்கோட்டை பிரதேச வைத்தியசாலையின் சந்திக்கு முன்னால் வீதியின் ஓரத்தில் காணப்பட்ட மின் கம்பத்துடன் மோதியுள்ளார். இதனால் படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே நினைவிழந்துள்ளார். இதன்போது உந்துருளியின் எரிபொருள் தாங்கி வெடித்ததனால் திடீரென்று தீப்பிடித்துள்ளது. இதனால் குறித்த இளைஞர் சம்பவ இடத்திலேயே எரிந்து கருகியுள்ளார்.
இதேவேளை இவருடன் பயணமான மற்றுமோர் இளைஞன் படுகாயமடைந்த நிலையில் காணப்பட்டபோது மக்களால் தீயிலிருந்து இழுத்தெடுக்கப்பட்டார். மேலும் மிகுந்த பிரயத்தனத்தின் மத்தியில் மக்கள் தீயை அணைத்துள்ளனர்.
சம்பவ இடத்திற்கு வருகைதந்த யாழ்ப்பாணம் குற்ற தடயவியல் பொலிஸார் வட்டுக்கோட்டை பொலிஸாருடன் இணைந்து சம்பவம் குறித்த விசாரணைகளை மேற்கொண்டதோடு தடயங்களை கையகப்படுத்தினர்.