முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணத்தில் சந்தேகம் உள்ளதாக வழக்கு தொடரப்பட்டது. இதனையடுத்து, அவரது மரணம் குறித்து விசாரிக்க ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது.
சில நாட்களுக்கு முன்பு இந்த விசாரணை ஆணையம் ஜெயலலிதா மரணம் குறித்த விசாரணையை துவங்கியது.
மற்றொரு பக்கம்., RK நகர் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டு தீவிர பிரச்சாரம் நடைபெற்று வந்தது.
RK நகர் இடைத்தேர்தல் 21 ஆம் தேதி நடைபெற இருந்த சூழ்நிலையில், 19 ஆம் தேதி அன்று தினகரன் ஆதரவாளர் வெற்றிவேல் ஜெயலலிதா மருத்துவமனையில் சிகிச்சை பெறும் வீடியோ ஒன்றை வெளியிட்டார்.
இது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தேர்தல் விதிமுறைகள் அமலில் இருக்கும் சமயத்தில் தேர்தலில் போட்டியிடும் சுயேச்சை வேட்பாளர் ஒருவரின் ஆதரவாளர் வெளியிட்ட வீடியோ தேர்தல் நடத்தை விதிமுறைகள் மீறுவது போலாகும் என்று அதிமுக தரப்பில் தேர்தல் ஆணையத்தில் புகார் தெரிவிக்கப்பட்டது.
மேலும், ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தின் விசாரணையை பாதிக்கும் வகையில் உள்ளதாகவும் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.
இந்த புகாரை அடுத்து வெற்றிவேல் மீது ஐ.பி.சி 468,471,176,177,189 ஆகிய சட்ட பிரிவுகளின் மீது 5 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளன.
இந்நிலையில், வெற்றி வேல் உயர்நீதி மன்றத்தில் முன்ஜாமீன் கேட்டு மனு அளித்திருந்தார். ஆனால்., முன் ஜாமீன் மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டது.
இதனால் அவரை கைது செய்யும் நடவடிக்கையில் காவல்துறை இறங்கி உள்ளது. வாக்கு எண்ணிக்கைக்கு முன்னதாக வெற்றிவேலை கைது செய்தால் தேவையற்ற பிரச்னை வரும் என்பதால் காவல்துறை இரண்டு நாட்கள் அமைதி காத்தது.
இந்நிலையில், ஆர்.கே நகர் இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை மையம் சென்னை ராணி மேரி கல்லூரியில் நடைபெறுவதால், அங்கு வெற்றிவேல் வந்தால் கைது செய்ய காவல்துறை திட்டமிட்டுள்ளது. இதற்கான உத்தரவை மேலிடம் பிறப்பித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.