மாலியில் ஐ.நா அமைதிப்படையில் பணியாற்றுவதற்காக, 150 படையினரைக் கொண்ட சிறிலங்கா இராணுவத்தின் முதலாவது அணி நேற்றுக்காலை புறப்பட்டுச் சென்றது.
ஆபிரிக்க நாடான மாலியில் நிலைகொண்டுள்ள ஐ.நா அமைதிப்படையினருக்கான வழித்துணைப் பாதுகாப்பு வழங்குவதற்காக சிறிலங்கா இராணுவத்தின் 200 பேர் கொண்ட அணியொன்று அனுப்பி வைக்கப்படவுள்ளது.
இந்த அணியில் இடம்பெற்றுள்ள 150 சிறிலங்கா இராணுவத்தினர் நேற்று ஐ.நாவின் சிறப்பு விமானம் மூலம், கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டுச் சென்றனர்.
எஞ்சிய 50 படையினர் மாலியில் உள்ள ஐ.நா அமைதிகாப்பு பணியகத்தின் வழிகாட்டலின் படி விரைவில் அங்கு பயணமாவர்.
சிறிலங்கா இராணுவத்தின் தலைமை அதிகாரி மேஜர் ஜெனரல் அமால் கருணாசேகர, மற்றும் மேஜர் ஜெனரல் தனஞ்ஜித் கருணாரத்ன, பிரிகேடியர் அருண முகாந்திரம், பிரிகேடியர் கீத் சிறி உள்ளிட்ட அதிகாரிகள், மாலி செல்லும் சிறிலங்கா படையினரை, விமான நிலையத்தில் வழியனுப்பினர்.