உலகு முழுவதுமுள்ள கிறித்துவர்கள் வெகு விமர்சையாக கொண்டாடும் கிறிஸ்துமஸ் பண்டிகை இன்று. உலகில் பேரன்பும், மகிழ்ச்சியும் என்றும் தழைத்தோங்கிட வேண்டுமென்ற உயர் தத்துவத்தினை போதிக்கும் கிறிஸ்துமஸ் திருநாளை முன்னிட்டு தமிழக அரசியல் கட்சிகளின் தலைவர்கள் மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்: இயேசு கிறிஸ்துவின் பிறப்பைக் கொண்டாடும் அனைத்து கிறிஸ்தவ மத சகோதர, சகோதரிகளுக்கும் எனது வாழ்த்துகள். அவர் பிறந்த இந்நன்னாளில் அமைதியையும், சகிப்புத் தன்மையையும், சகோதரத்துவத்தையும் கடைப்பிடித்து நல்ல எதிர்காலத்தை உருவாக்க வேண்டும்.
முதல்வர் எடப்பாடி பழனிசாமி: இயேசுபிரான் அவதரித்த நன்நாளை கிறிஸ்துமஸ் திருநாளாகக் கொண்டாடும் கிறிஸ்துவ மக்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துகள். இயேசுபிரான் போதித்த தியாகம், மன்னிப்பு, அன்பு, சமாதானம் ஆகியவற்றை மக்கள் அனைவரும் பின்பற்றி சகோதரத்துவத்துடன் ஒற்றுமையாக வாழ வேண்டும்.
திமுக செயல் தலைவர் மு.க. ஸ்டாலின்: ஏழை, எளிய, ஒடுக்கப்பட்ட மக்களுக்குத் தேவையான உதவிகளை அளித்து கிறிஸ்துமஸ் திருநாளை மனிதநேயத் திருவிழாவாக ஆண்டுதோறும் கிறிஸ்துவ மக்கள் கொண்டாடி வருகிறார்கள். கிறிஸ்துமஸ் திருநாளை முன்னிட்டு கிறிஸ்துவ சமுதாய மக்கள் அனைவரும் வாழ்வில் வளமும் நலமும் பெற்று வாழ்ந்திட வேண்டும் என்று வாழ்த்துகிறேன்.
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் சு.திருநாவுக்கரசர்: கிறிஸ்தவ சமூகத்தினர் ஏழைகளுக்கு சேவை செய்வதன் மூலமாக தங்களது வழிபாட்டு முறைகளை அமைத்துக் கொண்டுள்ளனர். இயேசு கிறிஸ்து பிறந்த இப்புனித நாளில் கிறிஸ்தவ மக்களின் வாழ்வில் வளமும், நலமும் பெருகிட உளமாற வாழ்த்துகிறேன்.
விசிக நிறுவனர் தொல்.திருமாவளவன்: சுதந்திரம், சகோதரத்துவம், சமத்துவம் என்னும் உயரிய ஜனநாயக கோட்பாடுகளைத் தழைக்கச் செய்யவும் சமூக நல்லிணகத்தைப் பாதுகாக்கவும் இந்நாளில் உறுதியேற் போம். என தலைவர்கள் வெளியிட்டுள்ள கிறிஸ்துமஸ் வாழ்த்து செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.