அச்சுறுத்தும் வடகொரியா!

Capturefhnvgfjnvg (1)இன்று உலக நாடுகளுக்கு சிம்மசொப்பனமாக வடகொரியா மாறியுள்ளது என்று கூறினால் அது மிகையாகாது. காரணம் அந்த நாட்டின் நடவடிக்கையால் உலக நாடுகளே அச்சத்தில் இருக்கின்றன.

எந்த வகையான தடை விதித்தாலும், அந்த தடைகளை கருத்திற்கொள்ள மாட்டோம் என்பதை போல வடகொரியாவும் தொடர்ந்து அணு ஆயுத சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டிருக்கின்றது.

இதனால் உலகின் வல்லரசு நாடுகள் என கருதப்படும் அமெரிக்கா, சீனா, ரஷ்யா, பிரித்தானியா, இந்தியா போன்ற நாடுகள் கூட அச்சத்தில் இருக்கின்றன.

வடகொரியாவின் இந்த நடவடிக்கை மூன்றாம் உலகப் போருக்கான வழியை ஏற்படுத்துவதாக சர்வதேச அரசியல் வல்லுனர்கள் பலரும் எச்சரித்து வருகின்றனர்.

இந்த நிலையில், வடகொரியாவின் இந்த நடவடிக்கைகள் குறித்து எவ்வித கவலையும் இல்லாது தென்கொரியாவில் வசிக்கும் தமிழர்கள் குறித்து சர்வதேச ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

வடகொரியாவிற்கு வெகு தொலைவில் இருக்கும் உலக நாடுகளே அச்சமடைந்திருக்கும் நிலையில், அந்நாட்டிற்கு மிகவும் அருகில் இருக்கும் தென்கொரியாவில் வசிக்கும் தமிழர்கள் குறித்து அந்த ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

தென்கொரியாவில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட தமிழ் மக்கள் வாழ்ந்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்நிலையில், நத்தார் தினத்தை முன்னிட்டு தென்கொரியாவில் வசிக்கும் தமிழ் மக்கள் தனது கருத்துகளை குறித்த ஊடகத்திடம் வெளியிட்டுள்ளனர்.

இதன் போது வடகொரியாவின் நடவடிக்கைகள் குறித்து அந்த மக்களிடம் கேள்வியெழுப்பட்டது. இதற்கு பதிலளித்து பேசிய அவர்கள் இவ்வாறு குறிப்பிட்டுள்ளனர்.

“வடகொரியா குறித்து எங்களுக்கு ஒரு கவலையும் கிடையாது. உண்மையைக் கூறப்போனால் பயம் என்பதே கிடையாது. நாங்கள் தென்கொரிய நாட்டு மக்களுடன் பேசும் போது, அவர்கள் எங்களுக்கு தைரியம் தெரிவிக்கின்றனர்.

நாங்கள் மிகவும் மகிழ்ச்சியாகவே இருக்கின்றோம். வடகொரியாவில் நடப்பது என்னவென்று ஊரில் இருக்கும் உறவினர்கள் சொன்னால் தான் சில நேரங்களில் எங்களுக்கே தெரியும்.

சில ஆண்டுகளுக்கு முன்னர் சற்று பயமாகவே இருந்தது. ஆனால் தற்போது அவ்வாறான பயம் ஏதும் கிடையாது. நாங்கள் சந்தோசமாகவே இருக்கின்றோம்” என தெரிவித்துள்ளனர்.