சவுதியில் நண்பருக்கு அடைக்கலம் கொடுத்ததன் விளைவாக, அவர்கள் தங்கள் பணத்தை பறிகொடுத்து பரிதாப நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
தமிழகத்தின் விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ராஜேந்திரன், இவர் சவுதியில் தனியார் மின்சாதன பொருட்கள் உற்பத்தி நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார்.
அதே வேளை கேரளாவைச் சேர்ந்த சஞ்சு என்பவர் சவுதியில் ஓட்டுனராக வேலை பார்த்து வந்துள்ளார். அப்போது அங்கு கெடுபிடி அதிகமானதால், அவர் இந்தியாவிற்கு திரும்ப முடிவு செய்துள்ளார்.
இதனால் சஞ்சு இரண்டு நாட்கள் உங்கள் ரூமில் தங்கிவிட்டுச் செல்கிறேன் என்று கூறி ராஜேந்திரன் ரூம்மில் தங்கியுள்ளார், இதைத் தொடர்ந்து இந்தியா திரும்பிய அவர் ராஜேந்திரன் ரூமில் இருந்த 4 லட்சம் ரூபாய் பணத்தை திருடிவிட்டு கேரளாவிற்கு சென்றுள்ளார்.
வேலைக்கு சென்றுவிட்டு திரும்பிய ராஜேந்திரன், ரூமில் இருந்த தன்னுடைய பணம் இரண்டரை லட்சம், தனது நண்பன் விஸ்வநாதன் வைத்திருந்த ஒன்றரை லட்சம் என மொத்தம் 4 லட்சம் ரூபாய் பணம் திருடு போனதைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார்.
அதன் பின் அவர்கள் கேரளா சென்ற சஞ்சுவிடம் தொலைப் பேசியில் தொடர்பு கொண்டு பேசிய போது, ஆம் நான் தான் உங்கள் பணத்தை திருடிவிட்டேன், முடிந்ததை பாருங்கள் என்று கூறி தொடர்பை துண்டித்துள்ளார்.
இதனால் விரக்தியான அவர்கள் சம்பாதித்த பணத்தை வீட்டிற்கு அனுப்ப முடியாமலும், திருடிச் சென்ற சஞ்சு மீது பொலிசாரிடம் புகார் அளிக்க முடியாமலும் தவித்து வருகின்றனர்.