டெம்பின் புயல் காரணமாக பிலிப்பைன்ஸின் தெற்கு பகுதியில் உள்ள அந்நாட்டின் இரண்டாவது பெரிய தீவான மின்டானாவில் வெள்ளிக்கிழமை முதல் கனமழை பெய்துவருகிறது.
இந்த கன மழையின் காரணமாக பலி எண்ணிக்கை 240 ஆக அதிகரித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆறுகளில் வெள்ளப்பெருக்கும், மலைப்பகுதிகளில் நிலச்சரிவும் ஏற்பட்டுள்ளது. பிலிப்பைன்ஸ் நாட்டை ஆண்டுக்கு 20 புயல்கள் வரை தாக்கி வந்தாலும் மின்டானாவ் தீவு ஒருபோதும் இந்த அளவுக்கு பாதிப்புக்கு உள்ளானதில்லை.
ஆனால் கடந்த வெள்ளிக்கிழமையில் இருந்து பெய்து வரும் கன மழையின் காரணமாக மின்டானாவ் தீவின் சலோக் ஆற்றிலிருந்து மட்டும் 36 உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. இந்நிலையில் மீட்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு மேற்கொள்ளப்பட்டு வருவதுடன் வெள்ளத்தில் காணாமல் போன 107 பேரையும் மீட்பு குழுவினர் தேடி வருகின்றனர். தற்போது பலி எண்ணிக்கை 240 ஆக அதிகரித்துள்ள நிலையில் மீட்பு பணிகள் தற்போதும் தீவிரமாக நடைபெற்று வருவதால் மேலும் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.