கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு வாடிகன் நகரின் செயின்ட் பீட்டர்ஸ் சதுக்கத்தில் போப் பிரான்சிஸ் உரையாற்றினார்.
உரையில் அவர் கூறியதாவது:- உலகம் முழுவதும் இன்று போர் காற்று வீசிக் கொண்டிருக்கிறது. குறிப்பாக மத்திய கிழக்கிலும் ஆப்ரிக்காவிலும் பதற்றம் நிலவி வருகிறது. அதில் பாதிக்கப்படும் சிறு குழந்தைகளின் முகத்தில் தெரியும் வேதனை மிகவும் பாதிக்கிறது.
எனவே போர் பதற்றத்தை தணிக்க இறைவனை பிரார்த்திக்கிறேன். புனித தலமான ஜெருசலம், இஸ்ரேல் இடையே அமைதியை ஏற்படுத்த வேண்டும். அது மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தினால் மட்டுமே சாத்தியமாகும்.
கொரிய தீபகற்பத்தில் நிலவும் முரண்பாடுகளை களைய வேண்டும். அப்போது தான் பரஸ்பரம் நம்பிக்கை மேம்படும். இவ்வாறு அவர் கூறியுள்ளார். மேலும் சிரியா, ஏமனில் நடக்கும் உள்நாட்டு போர் குறித்து கவலை தெரிவித்த போப் ரோஹிங்கியா முஸ்லிம்கள் விவகாரம் குறித்தும் பேசினார்.
தனது சமீபத்திய வங்கதேசம், மியான்மர் பயணத்தை நினைவுகூர்ந்த போப் சர்வதேச சமூகம் தனது பிராந்தியத்தில் வசிக்கும் சிறுபான்மையினருக்கு பாதுகாப்பு அளிப்பதை உறுதி செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.