முறைகேடாகவும், கவர்ச்சிகரமான போலி நம்பிக்கை வார்த்தைகளைக்கூறியும் கொத்தடிமைகளைப் போல பெண் குழந்தைகள் பணியமர்த்தப்படுகின்றனர் என்று சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் செல்வி வேதனை தெரிவித்து உள்ளார்.
கல்வி மற்றும் சட்ட விழிப்புணர்வு இல்லாத நிலையில், பஞ்சாலைகளில் பெண்கள் நவீனஅடிமைகளாக பணியில் அமர்த்தப்பட்டு வேலை வாங்கப்படுவதாக குறிப்பிட்டுள்ளார்.
இது குறித்து மேலும் அவர் பேசுகையில், பணியிடங்களில் பெண்களின் பாதுகாப்பு இன்றும் கேள்விக்குறியாகவே உள்ளது.
நவீன அடிமைகளாக நூற்பாலைகளில் பெண்கள் பணியமர்த்தப்படுகின்றனர். அவர்களுக்கு கல்வி, சட்ட விழிப்புணர்வு அவசியம்.
பெண் ஊழியர்களின் பிரச்சனைகளை விசாரிக்க தன்னார்வலர்களை உள்ளடக்கிய குழு ஒவ்வொரு நிறுவனத்திலும் இருக்க வேண்டும்.
பத்து பேருக்கும் குறைவாக உள்ள நிறுவனம் என்றால், பெண்தொழிலாளர்கள் மாவட்டம்தோறும் உள்ள அரசு கமிட்டியில் புகார் தெரிவிக்கலாம் என சட்டம்சொல்கிறது.
2013 ஆம் ஆண்டே இந்த கமிட்டி அமைப்பதற்கான சட்டம் கொண்டுவரப்பட்ட பிறகும் கூட அது தமிழக மாவட்டங்களில் இது நடைமுறைக்கு வரவில்லை.
ஒருவேளை இந்த குழு அமைக்கப்பட்டு செயல்பட்டுக் கொண்டிருந்தால், மாவட்டந்தோறும் எத்தனை பெண் தொழிலாளர்கள் உள்ளனர், எப்படியான பிரச்சனைகளை எதிர்கொண்டுள்ளனர் என தகவல்கள் வெளிவரும்.
ஆனால், அதை அமைக்காமலே இருப்பது தனியார் தொழில் நிறுவனங்களுக்கு சாதகமாகியுள்ளது.
அதுவே, பணியிடங்களில் பெண்களுக்கு எதிரான கொடுமைகளுக்கும் காரணமாகியுள்ளது. தமிழகத்தில் எந்த மாவட்டத்திலும் இக்கமிட்டி அமைக்கப்படவில்லை.
கோவை, திருப்பூர், ஈரோடு,திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் இந்த கமிட்டி உள்ளதா என்பதை தகவல் அறியும் உரிமைச்சட்டம் மூலம் கேட்டு, பின்னர் உயர்நீதிமன்றத்தில் பொதுநலவழக்கு தொடரப்பட்டது.
அதன் அடிப்படையில் எந்தெந்த மாவட்டங்களில் இக்கமிட்டி உள்ளது, எத்தனை நிறுவனங்கள், பெண் தொழிலாளர்களை தங்க வைத்து பணி வழங்குவதை பதிவு செய்துள்ளன என்பதை அரசு சமர்பிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதுபோன்ற சட்டப்பூர்வமாக பிரச்சினைகளை அரசிடம் கொண்டு செல்வது, தொழிலாளர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவதில் பெண்வழக்கறிஞர்கள் பங்கு மகத்தானது.
மொத்த உள்நாட்டு உற்பத்தியில் முக்கியமானதான ஜவுளித்துறையில் தமிழகம் முக்கிய இடத்தில் உள்ளது.
தமிழகத்தில் 90 சதவீதம் நூற்பாலை தொழிலாளர்கள் பெண்களாகவும், அதில் 60 – 70 சதவீதம் வளரிளம் பெண்களாகவும் உள்ளனர். சட்டப்படி அவர்களை பணியமர்த்தக் கூடாது.
ஆனால் முறைகேடாகவும், கவர்ச்சிகரமான போலி நம்பிக்கை வார்த்தைகளைக்கூறியும் கொத்தடிமைகளைப் போல பெண் குழந்தைகள் பணியமர்த்தப்படுகின்றனர்.
மேலும், தமிழகத்தைத் தேடிவரும் வடமாநிலத் தொழிலாளர்களில் 80 சதவீதம் பேர் பெண்கள் நூற்பாலைகளில் பணியமர்த்தப்படுகின்றனர்.
ஊதியம், பணிவரன்முறை போன்றவற்றுக்கு சட்டங்கள் இருந்தும் நூற்பாலைகளுக்குள் அவை செயல்படுவதில்லை, கண்காணிக்கப்படுவதும் இல்லை.
சட்டரீதியான இப்பிரச்சினைகளை அணுகிதீர்வு காண பெண் தொழிலாளர்களுக்கு விழிப்புணர்வும், சட்ட ஆலோசனைகளையும் தேவை. அதில் பெண் வழக்கறிஞர்களின் பங்கு அவசியமானது” என்று குறிப்பிட்டு உள்ளார்.