அ.தி.மு.கவின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து நாஞ்சில் சம்பத், கர்நாடக மாநில சட்டத்தரணி பிரிவு செயலாளர் புகழேந்தி, சி.ஆர். சரஸ்வதி உள்ளிட்டோர் நீக்கப்பட்டுள்ளனர்.
ஆர்.கே நகருக்கான இடைக்கால தேர்தல் அண்மையில் இடம்பெற்ற நிலையில், அதில் சுயேட்சையாக போட்டியிட்ட தினகரன் அமோக வெற்றிபெற்றிருந்தார்.
இந்நிலையில், ஆர்.கே நகரில் ஏற்பட்டுள்ள தேர்தல் தோல்வி குறித்து அ.தி.மு.கவினர் இன்று கட்சித் தலைமை அலுவலகத்தில் கூடி ஆலோசனை நடத்தியிருந்தனர்.
இந்த ஆலோசனையின் முடிவில் தினகரன் ஆதரவாளர்களான தங்கதமிழ்ச்செல்வன், வெற்றிவேல் உள்ளிட்ட 6 மாவட்ட செயலாளர்களை அந்தப் பொறுப்பில் இருந்து நீக்கி உத்தரவிடப்பட்டுள்ளது.
அத்துடன், வி.பி. கலைராஜன், பாப்புலர் முத்தையா, சி.ஆர். சரஸ்வதி, நாஞ்சில் சம்பத், புகழேந்தி உள்ளிட்டோர் கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கப்பட்டுள்ளனர்.
துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், முதலமைச்சர் பழனிசாமி இணைந்து கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ள.
அந்த வகையில், குறித்த நபர்களுடன் அ.தி.மு.கவினர் யாரும் தொடர்பு வைத்துக் கொள்ளக் கூடாது என அந்த அறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
கடந்த சில மாதங்களாகவே இவர்கள் தினகரனுக்கு ஆதரவாக செயல்பட்டாலும், அவர்களாகவே மாறி வந்துவிடுவார்கள் என்பதால் நடவடிக்கை எடுக்கப்படாமல் இருந்தது.
எனினும், இடைக்கால தேர்தலில் அ.தி.மு.க வேட்பாளரை எதிர்த்து பிரச்சாரம் செய்ததால் இந்த நடவடிக்கை பாய்ந்துள்ளதாகவும் கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.