இந்த கிராமத்தில் கால் வைத்தால் தற்கொலை செய்யக்கூடும்..!!

காற்றின் சத்தத்தைத் தவிர வேறு எந்தச் சத்தமும் அங்கு கேட்கவில்லை. அந்த மண்ணில் பச்சையை எங்கு தேடியும் காண முடியவில்லை. அந்த மண்ணின் நிறத்திலேயேதான் அந்தப் புற்களும் காய்ந்த நிலையில் கிடந்தன. கொஞ்சம் காற்றும் அடித்தது.

39210017ஆனால், அதில் அனல் தெறித்தது. அந்த அனல் காற்று கண்களைச் சூடாக்கின. அந்த ஆழ்ந்த அமைதி, நகர பரபரப்பில் இருப்பவர்களுக்குப் பெரும் அழுத்தத்தைக் கொடுக்கலாம். அவர்களால் அந்த அமைதியை நீண்ட நேரம் தாக்குப்பிடிக்க முடியுமா என்பது பெரிய கேள்வியே.

ஆனால், இங்கிருப்பவர்களால் இங்கு மட்டும்தான் இருக்க முடியும். நகரத்திற்குள் காலடி எடுத்துவைத்தால், அரை மணி நேரத்தில் அவர்கள் தற்கொலை செய்துகொள்ளக் கூடும்.

இது அமெரிக்காவின் அரிசோனா மாகாணத்திலிருக்கும் “ஸ்நோஃப்ளேக்” (SnowFlake) எனும் சிறிய பாலைவன கிராமம். அந்தப் பரந்த நிலப்பரப்பில் வீடுகள் ஒவ்வொன்றுக்கும் மிக நீண்ட இடைவெளி இருந்தது. அங்கிருந்த எந்த வீடும் பெரும் ஆடம்பரமானதாக இல்லை.

இதோ… ஒரு பெண் அவளுக்கு வீடே இல்லை. அந்தச் சிவப்பு நிற சின்ன ட்ரக் தான் அவள் வீடு. எந்த வீட்டிலும், இன்றைய நவீன உலகின் அடையாளங்களாய் இருக்கும் தொழில்நுட்பங்கள் ஏதுமில்லை. இந்த கிராமத்தில் மொத்தம் 30 பேர் வசிக்கின்றனர்.

நீங்கள் இந்த கிராமத்திற்குப் போகும்போது, உங்கள் மொபைல் போன், லேப்டாப் போன்றவற்றை கொண்டு செல்லக் கூடாது. மீறி கொண்டு சென்றால், அது அங்கிருக்கும் சிலரின் உயிருக்கே கூட ஆபத்தாக முடியும். இங்கிருப்பவர்கள் அனைவருக்குமே MCS எனப்படும் Multiple Chemical Sensitivity அல்லது Environmental Illness

இந்த இடத்திற்கு முதன் முதலில் 1988யில் வந்தவர் ப்ரூஸ் மெக்ரெரி (Bruce McCreary). ப்ரூஸ் ஒரு எலெக்ட்ரிகல் இன்ஜினீயர். ஒரு விமான தொழிற்சாலையில் பணிபுரிந்து வந்தார். தொடர்ந்து ரசாயனங்களோடு வேலை செய்து வந்ததால் ஒருகட்டத்தில், ப்ரூஸிற்கு அது குறித்த பெரும் ஒவ்வாமை ஏற்பட்டுவிட்டது.

எந்த ரசாயன வாசனையும் அவருக்குப் பெரும் தலைவலியை ஏற்படுத்தியது. அப்படியே புது தொழில்நுட்ப சாதனங்களைப் பார்க்கும்போது, அவர் மண்டைக்குள் யாரோ ஆணி அடிப்பது போன்ற உணர்வு ஏற்படுகிறது. சரி… இனி இந்த நகரத்து வாழ்க்கை நமக்குச் சரிபடாது என்று முடிவு செய்து ஆள் நடமாட்டமற்ற இந்தப் பாலைவனப் பகுதிக்கு வந்து ஒரு சிறு வீட்டைக் கட்டுகிறார்.

அந்த வீட்டின் கட்டுமானப் பொருள்களிலிருந்து வாசனை வரக் கூடாது என்பதால், சுவர்களில் அலுமினிய ஃபாயில்களை ஒட்டுகிறார். இப்படியாக தன்னை இந்த நவீன உலகிலிருந்து விலக்கி வாழத் தொடங்குகிறார்

1994 ல் ஸ்நோஃப்ளேக்கிற்குக் குடிபெயரும் சூசிக்கு வாகனப் புகை என்றால் ரொம்பவே அலர்ஜி. இன்னும், இன்னுமாக இதுபோன்ற ஆட்கள் வரத் தொடங்கி இன்று 30 பேர் இந்த கிராமத்தில் வசிக்கிறார்கள்.

ஸ்டீனுக்கு கம்ப்யூட்டர் என்றால் பெரும் அலர்ஜி. ஒரு காலத்தில், நகரத்தின் 20வது மாடியில் வீடு; கம்ப்யூட்டர் வேலை என்று இருந்தவர்தான். ஆனால், இப்போது கம்ப்யூட்டரில் சில நிமிடங்கள் வேலை செய்தாலும் அவரின் மண்டை வெடித்துவிடும் போன்றதொரு உணர்வு அவருக்கு. அதேபோல், பேப்பரும், இங்க்கின் வாசனையும் அவருக்கு அறவே ஆகாது.

ஒரு கண்ணாடி பெட்டிக்குள் புத்தகத்தை வைத்து, கைகளில் ப்ளாஸ்டிக் கவரை மாட்டிக்கொண்டு, பேப்பரை புரட்டிதான் புத்தகத்தையே படிப்பார். நகரத்திலிருக்கும் ஒரு நகலகத்தில் பேசி வைத்துக்கொண்டு, தனக்கு வரும் ஈ-மெயில்களை ப்ரின்ட்-அவுட்களாக எடுத்து வருகிறார். அதன் இங்க்கும் ஒத்துக்காது என்பதால், அந்தப் பேப்பரை ஒருநாள் வெயிலில் காயவைத்து, பின்னர் அந்தக் கண்ணாடிப் பெட்டிக்குள் வைத்து அதைப் படிக்கிறார். இப்படியாக பலவிதமான நோய்களோடு இருக்கிறார்கள் இந்த கிராமவாசிகள்

மருத்துவ ரீதியில் இன்னும் இதை ஒரு நோயாக முழுமையாக அங்கீகரிக்கவில்லை. பல மருத்துவர்கள், இது உடல் சம்பந்தப்பட்ட நோயே கிடையாது. இது அவர்களின் மன நோய். இதற்கு அவர்களுக்கு கவுன்சலிங்தான் கொடுக்க முடியுமே தவிர, மருந்து கொடுக்க முடியாது என்கின்றனர். ஆனால், ஒரு சில மருத்துவர்கள் இது ஒருவித நோய்தான் என்றும் வாதாடுகிறார்கள்.

இது ஏதோ இந்த நூற்றாண்டின் நோய் அல்ல என்பதற்கான சில ஆதாரங்களையும் சிலர் முன்வைக்கின்றனர். 1869யில் வாழ்ந்த நரம்பியல் மருத்துவர் ஜார்ஜ் பியர்ட் “நியூராஸ்தெனியா” (Neurasthenia) எனும் வார்த்தையைக் குறிப்பிடுகிறார். அதாவது, நவீன கண்டுபிடிப்புகளினால் ஏற்படும் ஒவ்வாமையின் காரணமாக தலைவலி, உடல் வலி, மன அழுத்தம் ஆகியவை ஏற்படும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார். அந்தக் காலகட்டத்தில் நீராவி இன்ஜின்கள் மற்றும் டெலிகிராஃப் போன்ற நவீன கண்டுபிடிப்பு சிலருக்கு ஒவ்வாமையை ஏற்படுத்தியதாகவும் அவர் குறிப்பிடுகிறார்.

எதுவாக இருந்தாலும், தங்களுக்குத் தாங்களே ஆதரவாக இருந்து, தங்களுக்குத் தேவையான சூழலை உருவாக்கிக் கொண்டு, படு வேகமாக ஓடிக் கொண்டிருக்கும் இந்த நவீன வாழ்க்கையிலிருந்து விடுபட்டு தங்களுக்கான வாழ்வை நிதானமாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் இந்த கிராமவாசிகள்