சென்னையில் ரயில் பாதையில் ஏற்பட்ட விபத்தினால் பல புறநகர் ரயில் சேவைகள் பாதிப்புக்குள்ளாகி சேவை நிறுத்தப்பட்டுள்ளதால் காலையில் பணிக்கு செல்லும் மக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
சென்னை சென்ட்ரல் மற்றும் கடற்கரையில் இருந்து செல்லும் புறநகர் ரயில் சேவை 7 மணி நேரமாக பாதிக்கப்பட்டுள்ளது.
அவடி அருகே நேற்றிரவு புறநகர் மின்சார ரயிலின் 2 பெட்டிகள் தடம்புரண்டன. இதனால் கடற்கரை மற்றும் சென்ட்ரலில் இருந்து திருவள்ளூர் உள்பட புறநகர்களுக்கு செல்லும் ரயில்சேவை பாதிக்கப்பட்டுள்ளது.
விரைவு ரயில் செல்லும் தடத்தில் தற்காலிகமாக புறநகர் ரயில்கள் இயக்கப்பட்டுவருகின்றன.
தற்போது குறைந்த அளவில் ரயில்கள் இயக்கப்படுவதால் புறநகர்களுக்கு செல்லும் பயணிகள் அவதி அடைந்துள்ளனர்.
மேலும், சென்னை சென்ட்ரலில் இருந்து ஆவடி, திருவள்ளூர் மார்க்கத்தில் செல்லும் விரைவு ரயில்சேவை பாதிக்கப்பட்டுள்ளது.
விரைவு ரயில் தடத்தில் புறநகர் மின்சார ரயில்கள் இயக்கப்படுவதால் விரைவு ரயில்கள் தாமதமாகும் நிலை ஏற்பட்டுள்ளது.
சென்ட்ரலில் இருந்து செல்லும் பழனி, திருவனந்தபுரம், ஆலப்புழை, மும்பை விரைவு ரயில்களின் புறப்பாட்டில் தாமதம் ஏற்படும் என கூறப்படுகிறது.