உள்ளூராட்சி மன்றத் தேர்தலின் போது மக்களின் வாக்குகளைப் பெறும் நோக்கில் அரசியல்வாதிகள் உட்பட வேட்பாளர்கள் அரச மற்றும் தமது நிதியினை பயன்படுத்தி தேர்தல் பிரசாரங்களின் பொழுது பொருட்களை பகிர்ந்தளிப்பது முற்றாக தடைசெய்யப்பட்டுள்ளதாக சுயாதீன தேர்தல்கள் ஆணைக்குழு தெரவித்துள்ளது.
சுயாதீன தேர்தல்கள் ஆணைக்குழு இது குறித்து வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
தேர்தல் காலங்களில் பிரசாரங்களின் பொழுது அரசியல்வாதிகள் உட்பட வேட்பாளர்கள் மக்களின் வாக்குகளை பெறும் நோக்கில் அரச அல்லது தமது சுய நிதியினை பயன்படுத்தி பொருட்களை மக்களுக்கு பகிர்ந்தளிப்பது தடை செய்யப்பட்டுள்ளது.
உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் பெற்றி பெறுவதை மாத்திரம் நோக்காக கொண்டு வேட்பாளர்கள் செயற்பட வேண்டாம். அரச சொத்துக்களை பயன்படுத்தி பொருட்கள் கொள்வனவு செய்யப்பட்டிருப்பின் தேர்தலின் இறுதி கட்டம் வரை அவைகள் விநியோகிக்கப்பட முடியாது.வேட்பாளர்கள் பொருட்களை குறிப்பிட்ட காலம் வரை களஞ்சியப்படுத்தி வைக்க வேண் டும்.
தேர்தலில் பிரசாரங்களின் பொழுது தேர்தல் சட்டத்திற்கு எதிராக இடம்பெறும் நடவடிக்கைகளை கண்காணிப்பதற்கு விசேட குழு நியமிக்கப்பட்டுள்ளது .வேட்பாளர்கள் தேர்தல் முடிந்தவுடன் அதாவது பெப்ரவரி 15ஆம் திகதிக்கு பின்னர் பொதுமக்களுக்கு பொருட்களை விநியோகிக்க முடியும்.
தேர்தல் சட்டங்களை மீறும் வகையில் செயற்படுபவர்களுக்கு எதிராக நடவடிக்கைகள் மேற்கொள்வது காவல்துறையினரது பொறுப்பு மாத்திரம் அல்ல பொதுமக்களின் பொறுப்புமாகும். வாக்குகளை பெறும் நோக்கில் மக்களுக்கு இலஞ்சம் அளிப்பதும் தேர்தல் சட்டங்களை மீறிய குற்றமாகும்.
வேட்பாளர்கள் தமது பிறந்தநாள் மற்றும் குடும்ப நிகழ்வினை காரணம் காட்டி தேர்தல் காலத்தில் பொருட்களை பகிர்ந்தளிப்பதும் மறைமுகமான இலஞ்சமாகும். தேர்தலின் பொழுதும் பிரசாரங்களின் போதும் இடம் பெறுகின்ற தேர்தல் சட்டத்திற்கு எதிரான குற்றங்கள் தொடர்பில் பொதுமக்கள் அருகில் உள்ள பொலிஸ் நிலையத்திலும்,மாவட்ட தேர்தல் அலுவலகத்திலும் முறைப்பாடுகளை மேற்கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்ப பட்டுள்ளது.