இப்படியும் ஒரு அதிர்ச்சித் திருட்டு? பொலிஸார் எச்சரிக்கை!!

யாழில் பகலில் பணிப்பெண்ணாகவும் இரவில் கள்ளியாகவும் சந்தேகிக்கப்படும் பெண் ஒருவரை தாம் கைது செய்துள்ளதாக மானிப்பாய் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி நாலக்க ஜெயவீர தெரிவித்துள்ளார்.

31734மானிப்பாய், வட்டுக்கோட்டை மற்றும் யாழ்ப்பாணம் பொலிஸ் பிரிவுகளில் இடம்பெற்ற பல கொள்ளைச் சம்பவங்களுடன் தொடர்புபட்டதாகச் சந்தேகிக்கும் 55 வயதான பெண் ஒருவரையே நேற்று செவ்வாய்க்கிழமை கையும்-மெய்யுமாக பிடித்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

சங்கானைப் பகுதியைச் சேர்ந்த குறித்த பெண், சங்கானை – சேச் வீதிக் கொள்ளை, சண்டிலிப்பாய் திருட்டு, சுதுமலையில் மதகுரு வீட்டில் இடம்பெற்ற நகை, பணம் திருட்டு, வட்டுக்கோட்டை பகுதியில் உள்ள ஆசிரியர் வீட்டில் இடம்பெற்ற திருட்டு ஆகியவற்றுடன் தொடர்புபட்டிருப்பதாகவும் மேற்படி பொலிஸ் பொறுப்பதிகாரி தெரிவித்தார்.

குறிப்பாக வயதானோர் உள்ள வீடுகளுக்கு பணிப்பெண்ணாகச் செல்லும் இவர், அங்குள்ள நகைகள் மற்றும் பணம் தொடர்பில் திருடர்கள் மற்றும் கொள்ளையர்களுக்கு தகவல் வழங்குவதாகவும் பின்னர் திருடப்படும் நகை, பணத்தில் அவர்களுடன் பங்கு போட்டுக்கொள்வதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் கூறினர்.

இதேவேளை, கைது செய்யப்பட்ட குறித்த பெண்ணிடம் இருந்து 2 சங்கிலிகள், ஒரு மோதிரம் ஆகியன மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறியதோடு மல்லாகம் நீதிமன்றின் உத்தரவிற்கமைய குற்றத்தடுப்புப் பிரிவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொள்ளவுள்ளதாக பொலிஸார் தெரிவித்ததோடு மக்களை இதுகுறித்து அவதானத்துடன் செயற்படுமாறும் எச்சரித்துள்ளனர்.