கடந்த சில நாட்களுக்கு முன்னதாக நடைபெற்ற ஆர்.கே நகர் இடைத்தேர்தலில் சுயேச்சை வேட்பாளராக போட்டியிட்ட தினகரன் பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். திமுக வேட்பாளர் டெபாசிட் இழந்து தோல்வியுற்றார். அதே சமயம் ஆளும் அதிமுக வேட்பாளரான மதுசூதனனும் தோல்வியுற்றுள்ளார்.
தோல்வியை தொடர்ந்து தினகரன் ஆதரவாளர்கள் மீது அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டனர் எடப்பாடி பழனிசாமியும், ஓபிஎஸ் அணியினர்.
ஆர்எஸ்எஸ் பிரமுகரும், துக்ளக் பத்திரிகையின் ஆசிரியருமான குருமூர்த்தி என்பவர், எடப்பாடி பழனிசாமியும், ஓபிஎஸ்ஸும் ஆண்மையற்றவர்கள். அதன் காரணமாகவே தினகரன் ஆதரவாளர்கள் மீது இவ்வளவு நாள் கழித்து நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர் என கருத்து தெரிவித்திருந்தார்.
இதற்கு மிக கடுமையாக பதிலளித்துள்ளார் தமிழக அமைச்சர் ஜெயக்குமார். “ஆண்மையற்றவர்கள் தான் பிறர் ஆண்மை குறித்து பேசுவார்கள். முதலில் அவர் தன்னை பரிசோதித்துக்கொள்ளட்டும். படித்த முட்டாளான அவர் அதிமுகவினர் பொங்கி எழுந்தால் என்ன நடக்கும் என தெரிந்துகொண்டு பேசட்டும்.”என மிக காட்டமாக பதிலளித்திருந்தார்.
இந்நிலையில், அமைச்சர் ஜெயக்குமாரின் பேச்சுக்கு தனது ட்விட்டர் பக்கத்தில் பதிலளித்துள்ளார். “என் மேல் நடவடிக்கை எடுத்தால் சந்திக்க தயார் எனவும், எவ்வளவோ அரசுகள் எடுத்த நடவடிக்கைகளை நான் பார்திருக்கிறேன். இந்த நடவடிக்கையையும் சந்திப்பேன். மேலும், இம்பொடெண்ட் என்றால் திறனற்றவர்கள் என்றே அர்த்தம்” என அவர் தெரிவித்துள்ளார்.