கிணற்றுக்குள் மண் சரிந்து கல்லூரி மாணவி உள்பட 2 பேர் சாவு!

காரமடை அருகே புஜங்கனூரில் மண் சரிந்து உயிருடன் கிணற்றுக்குள் புதைந்த கல்லூரி மாணவி உள்பட 2 பேர் பரிதாபமாக இறந்தனர்.

gv fcggfcகோவை மாவட்டம் காரமடை அருகே உள்ள புஜங்கனூரில் ஊமத்தூரப்பகவுடர் என்பவருக்கு சொந்தமான தோட்டம் உள்ளது. இந்த தோட்டத்தில் ஊமத்தூரப்பகவுடரின் தம்பி மகன் உதயகுமார் (வயது 40) என்பவர் குடும்பத்துடன் வசித்து வந்தார்.

இந்த நிலையில் உதயகுமார் 2 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். அதன் பின்னர் அவரது மனைவி நீனா (29), தனது 3 வயது மகன் தனுசுடன் வசித்து வந்தார்.

அதேபோல் அந்த தோட்டத்தின் ஒரு பகுதியில் ஊமத்தூரப்பகவுடரின் மகன் சின்னராஜ் (40) தனது மனைவி சாவித்திரி மற்றும் 2 மகள்களுடன் வசித்து வருகிறார்.

இதில் மூத்த மகள் அனிதா (21) கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் எம்.எஸ்சி. படித்து வந்தார். இளைய மகள் பிருந்தா மேட்டுப்பாளையம் அருகே உள்ள கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார்.

இவர்கள் வசிக்கும் வீடுகளுக்கு இடையே பொதுக்கிணறு ஒன்று உள்ளது. சுமார் 80 ஆடி ஆழ அந்த கிணற்றில் 20 அடி ஆழத்துக்கு தண்ணீர் உள்ளது. தரை மட்ட கிணற்றை சுற்றி சுற்றுச்சுவர் இல்லை.

அந்த கிணற்றையொட்டி ஒரு தண்ணீர் தொட்டி உள்ளது. அந்த தொட்டியில் இருந்து சிறிய வாய்க்கால் மூலம் விவசாயத்துக்கு தண்ணீர் செல்கிறது.

201712240140272165_Declining-soil-buried-alive-and-well-Including-college_SECVPF.gif  மண் சரிந்து உயிருடன் கிணற்றுக்குள் புதைந்த கல்லூரி மாணவி உள்பட 2 பேர் சாவு 201712240140272165 Declining soil buried alive and well Including college SECVPF

இந்த நிலையில் நேற்று கல்லூரி விடுமுறை என்பதால் அனிதா வீட்டில் இருந்தார். அனிதாவும், நீனாவும் துணி துவைப்பதற்காக கிணற்று பகுதிக்கு சென்றனர். அங்கு துணி துவைத்து விட்டு துணிகளை அலசுவதற்காக கிணற்றையொட்டி உள்ள தொட்டிக்கு சென்றனர்.

தொட்டியில் இருந்து தண்ணீர் எடுத்து துணி அலசியபோது திடீர் என்று தொட்டி அருகே மண் சரிவு ஏற்பட்டது. இதில் அனிதாவும், நீனாவும் அருகே உள்ள கிணற்றுக்குள் மண்ணோடு விழுந்து உயிரோடு புதைந்தனர்.

கிணற்றில் அதிகம் தண்ணீர் இருந்ததால் மண் சரிந்து விழுந்ததில் சேறும்-சகதியுமாக மாறியது. இதனால் அனிதாவும், நீனாவும் வெளியே வரமுடியவில்லை. அவர்கள் சேற்றில் சிக்கி பரிதாபமாக இறந்தனர்.

மண் சரிந்து விழுந்த சத்தம் கேட்டு வீட்டில் இருந்தவர்களும், அக்கம் பக்கத்தினரும் அங்கே திரண்டனர். இதுபற்றி போலீசுக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

தகவலின் பேரில் பெரியநாயக்கன்பாளையம் போலீஸ் துணை சூப்பிரண்டு (பொறுப்பு) குணசேகரன், இன்ஸ்பெக்டர்கள் சக்திவேல், செல்வராஜ் மற்றும் போலீசார் விரைந்து வந்தனர்.

மேலும் மேட்டுப்பாளையத்தில் இருந்து தீயணைப்பு வீரர்கள் விரைந்தனர். உதவி மாவட்ட அலுவலர் குமரேசன் தலைமையில் அலுவலர்கள் முருகேசன், அண்ணா துரை, ராமச்சந்திரன் ஆகியோர் மண் சரிவில் சிக்கி கிணற்றில் புதைந்து பலியானவர்களின் உடல்களை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

ஆனால் கிணற்றில் அதிகளவில் தண்ணீர் இருந்ததால் உடல்களை மீட்பதில் சிரமம் ஏற்பட்டது. இதனால் கிணற்றில் இருந்த தண்ணீர் முழுவதும் வெளியேற்றிவிட்டு உடல்களை மீட்க முடிவு செய்தனர்.

இதற்காக ராட்சத ஜெனரேட்டர் வரழைக்கப்பட்டு மாலை 5 மணி முதல் 7 மணி வரை கிணற்றில் இருந்த தண்ணீரை வெளியேற்றப் பட்டது.

பின்னர் கிணற்றில் சேற்றில் சிக்கி இருந்த நீனா மற்றும் அனிதா ஆகியோரின் உடல்களை தீயணைப்பு வீரர்கள் மீட்டனர். பின்னர் உடல்கள் மேட்டுப்பாளையம் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது.

இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். சம்பவ இடத்துக்கு ஏ.கே.செல்வராஜ் எம்.பி., மேட்டுப்பாளையம் தாசில்தார் ரங்கராஜன் ஆகியோர் வந்து பார்வையிட்டனர். பின்னர் இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்கள்.