சிதம்பரம் தில்லை நடராஜர் ஆலயத்தின் வருடாந்த திருவிழாவை முன்னிட்டு பக்தர்கள் கடல்வழியாக இந்தியா செல்வதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
எனினும், இதுவரை பக்தர்கள் செல்வதற்கான கப்பல் போக்குவரத்து ஏற்பாடுகள் செய்யப்படவில்லையெனத் தெரிவிக்கப்படுகின்றது.சிதம்பரம் தில்லை நடராஜர் ஆலயத்தின் வருடாந்த திருவிழா கடந்த 23 ஆம் திகதி ஆரம்பமானது.திருவிழா ஜனவரி இரண்டாம் திகதி நிறைவடையவுள்ள நிலையில் இலங்கை பக்தர்கள் அங்கு செல்வதற்கு கப்பல் சேவையை முன்னெடுக்க இரு நாட்டு அரசாங்களும் அனுமதி வழங்கியிருந்தன.எனினும், கடல் வழிபோக்குவரத்திற்கு தேவையான கப்பல் ஏற்பாடுகள் இன்னும் செய்யப்படாமையினால் பக்தர்கள் பெரும் சிரமங்களை எதிர்கொண்டுள்ளனர்.இது குறித்து யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணைத்தூதுவர் ஏ. நடராஜனை நாம் தொடர்பு கொண்டு வினவிய போது, கப்பல் சேவையை ஆரம்பதற்கான அனுமதி கிடைத்துள்ள போதிலும், கப்பலைப் பெற்றுக் கொள்வதில் ஏற்பட்டுள்ள தாமதம் காரணமாக இதுவரை கப்பல் சேவையை ஆரம்பிக்க முடியாமல் இருப்பதாக அவர் தெரிவித்தார்.
எனினும், பெரும்பாலும் இன்றைய தினத்திற்குள் பிரச்சினைக்கு தீர்வு காண முடியுமென நம்புவதாகவும் அவர் தெரிவித்தார்.இதேவேளை காங்கேசந்துறையில் இருந்து சென்னை வரையான கப்பல் சேவையை முன்னெடுப்பதற்கு அனுமதியை பெறுவதற்கான அனைத்து முயற்சிகளையும் தான் மேற்கொண்டு அந்த அனுமதியைப் பெற்றுக் கொடுத்துள்ளதாக வட மாகாண ஆளுநர் ரெஜினோல் குரே குறிப்பிட்டார்.கப்பல் மூலம் யாத்திரைக்கு செல்ல வேண்டும் என்று முன்நின்று செயற்பட்டவர்கள் தற்போது அதற்கான கப்பலைப் பெற்றுக் கொள்ள வேண்டும் என ஆளுநர் தெரிவித்துள்ளார்.எனினும், கப்பலை பெற்றுக் கொடுப்பதற்கான முயற்சியில் தாமும் ஈடுபட்டுள்ளதகாவும் மீள்குடியேற்ற அமைச்சர் டீ.எம் சுவாமிநாதனுக்கும் இதனை அறிவித்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.இதேவேளை ஜனாதிபதி செயலகத்துடன் கலந்துரையாடி விரைவில் பக்தர்களுக்கான கப்பலை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கவுள்ளதாக மீள்குடியேற்ற அமைச்சு தெரிவிக்கின்றது.விரைவில் இதற்கு தீர்வு காண முடியும் என தாம் நம்புவதாகவும் மீள்குடியேற்ற அமைச்சர் டீ.எம் சுவாமிநாதன் மேலும் தெரிவித்துள்ளார்.