திருகோணமலை மாவட்டத்தில் உள்ள சைவ ஆலய பூமிக்குள் சென்ற கிழக்கு மாகாண ஆளுநரின் மனைவி, பொலிஸ் மற்றும் அரச அதிகாரிகள் முன்னிலையில், தமிழ் பக்தர்களை அச்சுறுத்தி, ஆலயத்திற்கு எதிரில் போடப்பட்டிருந்த கோலத்தை அழித்துள்ளதாகவும் இதனால், சம்பூர் பிரதேச கிராமவாசிகள் கோபத்திற்கு உள்ளானதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.மூதூர் பிரதேச செயலாளர் பிரிவில் கூனித்தீவு கிராம சேவகர் பிரிவில் சூடைகுடா கிராமத்தில் மத்தலமலை குன்றில் அமைந்துள்ள முருகன் ஆலயத்திற்கு தனது கணவருடன் சென்ற தீப்தி போகொல்லாகம, ஆலயத்திற்கு எதிரில் தரையில் போட்டிருந்த கோலத்தை மிதித்து, அங்கிருந்தவர்களை அச்சுறுத்திய சம்பவத்தை பிரதேச ஊடகவியலாளர் ஒளிப்பதிவு செய்துள்ளனர்.கோலத்தை சுற்றியிருந்த பெண்கள் முருகா, காளிம்மா, என கோஷமிட்டுக் கொண்டிருந்த போது அங்கு சென்ற ஆளுநரின் மனைவி ‘உங்கள் எல்லோருக்கும் வேலையை கொடுப்போம்’ என கையை நீட்டி பெண் பக்தர்களை அச்சுறுத்தியுள்ளார்.ஆளுநரின் மனைவியுடன் சென்ற பொலிஸார் தமது பாதணிகளை கழற்றியிருந்தனர்.தீப்தி போகொல்லாகமை அங்கிருந்து வெளியேற்றுமாறு கோபத்தில் இருந்த பெண்கள் சத்தமிட்டனர். இதனையடுத்து பொலிஸாரும் அதிகாரிளும் அவரை அங்கிருந்து அழைத்துச் சென்றுள்ளனர்.