அமெரிக்காவில் தெலாவரில் 50 ஆண்டு பழமை வாய்ந்த கிறிஸ்தவ தேவாலயம் தற்போது சுவாமி நாராயணன் கோவில் ஆக மாற்றப்பட்டுள்ளது.அமெரிக்காவில் தெலாவரில் 50 ஆண்டு பழமை வாய்ந்த கிறிஸ்தவ தேவாலயம் இருந்தது. தற்போது அந்த தேவாலயம் சுவாமி நாராயணன் கோவில் ஆக மாற்றப்பட்டுள்ளது.குஜராத் மாநிலம் அகமதாபாத்தின் மணிநகர் பகுதியில் உள்ள சுவாமி ‘நாராயண் காடி சன்ஸ்தான்’ என்ற அமைப்பு அதற்கான ஏற்பாட்டை செய்தது. இந்த கிறிஸ்தவ தேவாலயம் செயல்படாமல் இருந்தது.அதை விலைக்கு வாங்கி இந்து கோவிலாக மாற்றம் செய்துள்ளது. அதற்காக ரூ.10 கோடி வரை செலவிடப்பட்டுள்ளது. இதன் மூலம் அமெரிக்காவில் இந்து கோவிலாக (சுவாமி நாராயண் கோவில்) மாறியுள்ள 3-வது கிறிஸ்தவ தேவாலயமாக இது விளங்குகிறது. ஏற்கனவே கலிபோர்னியா மற்றும் கென்டக்கியில் 2 தேவாலயங்கள் இந்து கோவில்களாக மாறியிருக்கின்றன.இவை தவிர இங்கிலாந்தில் லண்டன் மற்றும் மான்செஸ்டர் அருகேயுள்ள பாஸ்டன் ஆகிய 2 இடங்களில் கிறிஸ்தவ தேவாலயங்கள் கோவிலாக மாற்றம் செய்யப்பட்டுள்ளன. இதன் மூலம் உலகில் 5 கிறிஸ்தவ தேவாலயங்கள் இந்து கோவிலாக மாற்றம் கண்டுள்ளன.அமெரிக்காவின் தெலாவரில் மாற்றம் செய்யப்பட்டுள்ள கோவில் 3 ஆயிரம் சதுர அடி கொண்டது. இங்கு சுவாமி நாராயண் சிலை கடந்த மாதம் பிரதிஷ்டை செய்யப்பட்டது. இதுதவிர அனுமன் மற்றும் விநாயகர் சிலைகளும் அங்கு நிறுவப்பட்டுள்ளன.சுவாமி நாராயண் காடி சன்ஸ்தான் அமைப்பின் தலைமை குரு புருசோத்தம் பிரியதாஸ் சில வருடங்களுக்கு முன்பு அமெரிக்கா வருகை தந்தார். அப்போது அங்கு கோவில் கட்ட விரும்பினார். அமெரிக்காவில் தெலாவர், மேரிலேண்ட், பென்சில்வேனியா, நியூஜெர்சி பகுதிகளில் தங்கியிருக்கும் சுவாமி நாராயண் பக்தர்களை சந்தித்தார்.அமெரிக்காவில் சுவாமி நாராயணன் கோவிலை கட்ட வலியுறுத்தினார். அதை தொடர்ந்து அங்கு கோவில் கட்டப்பட்டுள்ளது. தற்போது இக்கோவில் பொதுமக்கள் வழிபாட்டுக்காக திறந்து விடப்பட்டுள்ளது. வழிபாடுகள் சிறப்பாக நடைபெறுகின்றன.