சென்னை: ஆர்.கே.நகர் தேர்தலில் 20 ரூபாய் டோக்கன் விவகாரத்தில் ஏற்பட்ட மோதல் தொடர்பாக 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளதால் சுயேச்சை எம்எல்ஏ தினகரன் பதவி பறிக்கப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
ஆர்.கே.நகர் தேர்தலில், தினகரன் தரப்பினர் வாக்காளர்களுக்கு 20 ரூபாய் டோக்கன்களை கொடுத்ததாகவும், தேர்தல் முடிந்த பிறகு, 20 ரூபாய் டோக்கன்களை திரும்ப பெற்று ரூ.10 ஆயிரம் தரப்படும் என அறிவித்து ஓட்டு வேட்டையாடியதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.
முதலிலேயே பணம் கொடுத்தால் அதை வாங்கிக்கொண்டு வேறு வேட்பாளருக்கு வாய்ப்புள்ளதாக கருதிய தினகரன் தரப்பு இப்படி ஒரு மாஸ்டர் பிளானோடு களமிறங்கியதாக கூறப்படுகிறது.
புதுவண்ணாரப்பேட்டை இருசப்ப மேஸ்திரி தெருவைச் சேர்ந்த கார்த்திகேயன், கொருக்குப்பேட்டை மீனாம்பாள் நகரில் வசிக்கும் தினகரன் ஆதரவாளரான ஜான்பீட்டரிடம் (35) இதே விவகாரத்திற்காக தகராறு செய்துள்ளார்.
இதையடுத்து, ஜான் பீட்டர் மற்றும் சரண்ராஜ் (20), செல்வம் (39), ரவி (40) ஆகியோர் சேர்ந்து கார்த்திகேயனை தாக்கியுள்ளதாக கூறப்படுகிறது. காயமடைந்த கார்த்திகேயன்ஆர்.கே.நகர் போலீஸ் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் 4 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
ரூ.10,000 தருவதாக கூறி இவர்கள் டோக்கன் சப்ளை செய்து வந்தது, போலீஸ் விசாரணையில் அம்பலமாகியுள்ளதால், தினகரனுக்கு சிக்கல் எழுந்துள்ளது.
தினகரன் தேர்தல் செலவு கணக்கில் இந்த பணத்தை சேர்க்க தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது. இன்னும் ஒரு மாதத்திற்குள் தேர்தல் செலவீனங்களை தினகரன் தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பிக்க வேண்டும்.
அப்போது வாக்காளர்களுக்கு கொடுத்த பண மதிப்பையும் தினகரன் தேர்தல் செலவு கணக்கில் சேர்த்தால், தினகரன் எம்எல்ஏ பதவி பறிபோகும் என தேர்தல் ஆணைய வட்டாரங்கள் கூறுகின்றன.