ஜம்மு காஷ்மீரில் குடும்பத்தை இழந்து தவித்த இந்து குடும்ப குழந்தைகளை, முஸ்லீம் தாய்மார்கள் தத்தெடுத்துள்ள சம்பவம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
ஜம்மு – காஷ்மீர் மாநிலம், லீவ்டோரா என்ற கிராமத்தில் முஸ்லீம் மக்கள் மட்டுமே அதிகம் வசித்து வருகின்றனர். இங்கு பாபிகவுல் (44) என்ற இந்து பெண்மணி மட்டும் தன்னுடைய குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார். கடந்த வருடம் பாபிகவுல் கணவர் மகராஜ் கிஷன் உடல்நலக்குறைவால் காலமானார். இதனையடுத்து பாபிகவுல் கஷ்டப்படுவதை பார்த்த உள்ளுர் மக்கள் எம்.எல்.ஏ உதவியுடன் அவருக்கு அரசு வேலை வாங்கித் தந்தனர். இவருக்கு 15 மற்றும் 16 வயதில் இரண்டு பெண்குழந்தைகளும், 15 மற்றும் 7 வயதில் இரண்டு மகன்களும் உள்ளனர்.
ஆனால் சமீபகாலமாக உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட பாபிகவுல் கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று உயிரிழந்தார். இதனால் அனாதையாக தவித்த அந்த 4 சிறுவர்களுக்கும் ஆதரவாக அங்குள்ள முஸ்லீம் மக்கள் உதவ ஆரம்பித்தனர். அங்கிருந்த முஸ்லீம் மக்கள் முன்னின்று இறுதிச்சடங்கு வரை செய்து முடித்துள்ளனர்.
பின்னர் தங்களிடம் இருந்த அரிசி, காய்கறிகளை விற்று அதிலிருந்து கிடைத்த 80 ஆயிரம் ரூபாய் பணத்தை அந்த சிறுவர்களின் பெயரில் இரு வங்கி கணக்குகளில் செலுத்தியுள்ளனர்.
மேலும் சேதமடைந்திருந்த பாபிகவுலின் வீட்டையும் சரி செய்து கொடுத்ததோடு சிறுவர்களையும் தத்தெடுத்துள்ளனர். குழந்தைகளையும் நல்ல முறையில் வளர்ப்பதாகவும் உறுதி எடுத்துள்ளனர்.