வாளுடன் நடமாடிய ஒருவர் இளைஞர்களால் மடக்கிப் பிடிக்கப்பட்டு நையப்புடைக்கப்பட்டார். மடக்கிப் பிடிக்கப்பட்டவர் நன்றாகக் கவனிக்கப்பட்டுப் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டார்.இந்தச் சம்பவம் நேற்று அதிகாலை வட்டுக்கோட்டை, கள்ளி வீதியில் இடம்பெற்றுள்ளது.
வட்டுக்கோட்டைப் பகுதியில் சிலர் வாள்களுடன் நடமாடியுள்ளனர். அதை அவதானித்த பிரதேச இளைஞர்கள் அவர்களைப் பிடிக்க முயற்சித்தனர். ஒருவர் அகப்பட்டுக் கொள்ள ஏனையோர் தப்பிச்சென்றுவிட்டனர். மடக்கிப் பிடிக்கப்பட்டவரை நன்றாகக் கவனித்த மக்கள் பொலிஸாரிடம் ஒப்படைத்தனர்.சிக்கிக் கொண்டவர் மானிப்பாயைச் சேர்ந்தவர் எனத் தெரிவிக்கப்படுகின்றது.வட்டுக்கோட்டை, சித்தன்கேணி, வடலியடைப்பு ,சங்கானை, ஆகிய பகுதிகளில் அண்மையில் நடந்த கொள்ளைச் சம்பவங்களுடன் இவருக்குத் தொடர்பிருக்கலாம் என்று சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.விசாரணைகள் நடைபெறுகின்றன. தப்பிச் சென்றவர்களும் கைது செய்யப்படுவார்கள். நீதிமன்றில் முற்படுத்தப்படுவார்கள் என்று வட்டுக்கோட்டைப் பொலிஸார் தெரிவித்தனர்.கள்ளி வீதியில் கடந்தவாரம் கொள்ளை முயற்சி ஒன்று நடந்திருந்தது.அங்கிருந்த வீடொன்றில் வசித்த பெண்ணின் கழுத்தை நெரித்துக் கொள்ளையிட முயன்றபோது அந்தப் பெண் அவலக் குரல் எழுப்பினார். அதையடுத்துக் கொள்ளையர்கள் தமது முயற்சியைக் கைவிட்டுத் தப்பிச் சென்றிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.