சென்னையில் ரசிகர்களை சந்தித்து வரும் நடிகர் ரஜினியை அரசியலுக்கு வரவேண்டாம் என அவரது ரசிகர் ஒருவர் எழுதிய கடிதம் கண்கலங்க வைத்ததாக ரஜினி கூறியுள்ளார்.
சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள ராகவேந்திரா திருமண மண்டபத்தில் நடிகர் ரஜினி தன்னுடைய ரசிகர்களை 5-வது நாளாக இன்று சந்தித்து புகைப்படம் எடுத்து வருகிறார். இதனைத்தொடர்ந்து நாளை தன்னுடைய அரசியல் வருகை நடிகர் ரஜினி அறிவிக்க உள்ளதால் ரசிகர்கள் அனைவரும் உற்சாகமாக உள்ளனர்.
இந்நிலையில் இன்று ரசிகர்கள் மத்தியில் பேசிய நடிகர் ரஜினி, ‘1960-களில் மெட்ராஸ் குறித்து கர்நாடகாவில் பெருமையாகப் பேசிக்கொள்வார்கள். எனக்குள் இருக்கும் நடிகனை முதன்முதலில் அடையாளம் கண்டுகொண்டது என் நண்பன் ராஜ் பகதூர். கர்நாடகாவிலிருந்து சென்னைக்குக் கடந்த 1973-ல் வந்தேன். சென்னையில் முதன்முறையாக இயக்குனர் பாலச்சந்தரை சந்திக்கும்போது நடித்து காண்பிக்க சொன்னார். ஆனால் எனக்கு தமிழ் தெரியாததால் தயங்கிக்கொண்டே நடித்தேன். அதன் பின்னர் பாராட்டிய அவர் தமிழ் மட்டும் கற்றுக்கொள் உன்னை நான் வேறு உயரத்துக்குக் கொண்டு செல்வேன் என்றார். சொன்னதைப்போல அபூர்வ ராகங்கள் படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் அறிமுகம் செய்து, என்னை தத்தெடுத்துக் கொண்டார். அவருக்குப் பின்னர் பஞ்சு அருணாச்சலம், முத்துராமன், பி. வாசு உள்ளிட்டோர் என்னை ஸ்டாராக்கினார்கள். அதன்பின்னர், சுரேஷ் கிருஷ்ணா மற்றும் மணிரத்னம் போன்றவர்கள் என்னை சூப்பர் ஸ்டாராக்கினார்கள். அதன்பிறகு, இந்தியாவையே திரும்பிப் பார்க்கும் அளவுக்கு நடிகனாக ஷங்கர், என்னை மாற்றினார். கிராபிக்ஸ் வேலைகளால் 2.0 படம் தாமதமாகிறது. ஏப்ரல் 14-ம் தேதிக்குத் தள்ளிப் போயிருக்கிறது. காலாவில் இதுவரை பார்க்காத ரஜினிகாந்தை ரஞ்சித் காட்டியிருக்கிறார். ரசிகர்கள் என் மீது செலுத்தும் அன்புக்கு என்ன கைமாறு செய்யப் போகிறேன் என்று தெரியவில்லை. சிங்கப்பூரில் நான் சிகிச்சைக்குச் சென்றிருந்தபோது எனக்காக ரசிகர்கள் செய்த நேர்த்திக் கடன்கள் என்னைக் கலங்கச் செய்தது. அதிலும் ஒரு ரசிகர் எழுதியிருந்த கடிதம் என்னை கண்கலங்க வைத்தது. அதில், ”நீங்கள் சினிமாவில் நடித்து எங்களை மகிழ்விக்க வேண்டாம். அரசியலுக்கு வந்து எங்களைக் காப்பாற்ற வேண்டாம். உயிரோடு வந்தால் மட்டும் போதும் தலைவா” என்று எழுதப்பட்டிருந்தது. என் உடல் ஆரோக்கியத்திற்கு தியானமே காரணம். ரசிகர்கள் அனைவரும் தியானம் செய்ய வேண்டும்’ என்று கூறினார்.