அமெரிக்காவில், விஸ்வரூபம் 2 படத்தின் இறுதிக்கட்ட வேலைகள் நடைபெறுவதாக கமல் வெளியிட்டுள்ள புகைப்படம், ஒரு பெரிய சர்ச்சைக்கு பதில் சொல்வதைப்போல அமைந்துள்ளது.
கடந்த சில மாதங்களாகவே அரசியல் குறித்து பரபரப்பான கருத்துக்களை கூறி வந்த கமல் திடீரென காணாமல் போய்விட்டார். இதனால் அப்பாடா! என பெருமூச்சு விட்ட அரசியல்வாதிகளுக்கு, ‘நான் இன்னும் இங்கு தான் இருக்கிறேன்’ என பதில் சொல்லும் வகையில் ஒரு புகைப்படம் ஒன்றை தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் கமல்.
அந்த புகைப்படத்தில், “விஸ்வரூபம் 2 படத்தின் ஒலி சிறப்பாக இருக்கும். இதற்காக உழைத்துள்ள அனைத்து டெக்னீசியன்களுக்கும் நன்றி. திரையில் தயாரிப்பாளராக எனது சகோதரரின் பெயர் உள்ளது. அவர் இருந்திருந்தால் இந்த போட்டோவை அவருக்கு முதலில் அனுப்பியிருப்பேன் என்று கூறியுள்ளார்”.
பொதுவாக கமல் எந்த ஒரு கருத்தை தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டாலும், நன்கு ஆராய்ந்து பார்த்தால் மட்டுமே அதன் உள்அர்த்தம் புரியும். அந்த வகையில், விஸ்வரூபம் படத்தின் முதல் பாகம் எடுத்து முடித்த உடனே இரண்டாம் பாகத்தின் சில காட்சிகளையும் எடுத்து முடித்து விட்டார். இதனையடுத்து இரண்டாம் பாகம் எடுக்கும்பொழுது தயாரிப்பாளர் ஆஸ்கார் ரவிக்கும், கமலுக்கும் இடையே சிறிய பிரச்சனை ஏற்பட்டது. இதனால் படம் சிறிது நாள் தடைபட்டது. பின்னர் ஆஸ்கார் ரவி கொடுத்த பணத்தை அவருக்கு திருப்பி கொடுத்த கமல், தானே படத்தை இயக்க ஆரம்பித்தார்.
படத்தின் காட்சிகள் அனைத்தும் நிறைவடைய உள்ள நிலையில் தற்போது ரவி மீண்டும் விஸ்வரூபம்-2 படத்தை விட்டுக்கொடுக்க மாட்டேன் என கூறியுள்ளது கமலின் காதுகளுக்கு எட்டியுள்ளது. இதற்கு தன்னுடைய பாணியில் பதில் சொல்லும் விதமாகவே நடிகர் கமல், அந்த புகைபடத்திற்கு பின்னால் இருக்கும் திரையில், தயாரிப்பு – கமல் சந்திரஹாசன் என இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டுள்ளார்.