அ.தி.மு.கவில், தொடர்ந்து இரண்டாவது நாளாக நேற்று 3 மாவட்டங்களைச் சேர்ந்த 132 பேர் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளனர்.
டி.டி.வி.தினகரன் ஆதரவாளர்கள் எனக் கூறி அ.தி.மு.கவில் தொடர்ந்து பல நிர்வாகிகள் நீக்கப்பட்டு வருவது கட்சிக்குள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் சுயேட்சையாக போட்டியிட்ட தினகரன் அதிமுகவை வீழ்த்தி 40 ஆயிரத்துக்கும் அதிகமான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
இதனால் அ.தி.மு.க இவ்வாறு தோல்வி அடைந்ததற்கு காரணம் டி.டி.வி.தினகரனுக்கு ஆதரவாக செயல்படும் கட்சி நிர்வாகிகளின் மறைமுக நடவடிக்கைகள் தான் என கூறி அவர்களின் பதவியை அ.தி.மு.க தலைமை பறித்து வருகிறது.
இதனிடையே ஆர்.கே.நகர் தேர்தலுக்கு முன்னரே கட்சி நிர்வாகிகள் பலர் நம்பகத்தன்மையற்று செயல்படுகிறார்கள் என்றும் அவர்களை மாற்ற வேண்டும் என்றும் ஓ.பி.எஸ் தரப்பினர் தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வந்தனர்.
ஆனால், அப்போது அவர்கள் நீக்கப்படவில்லை. அதனையடுத்து தேர்தல் தோல்விக்கு பின்னரும் ஓ.பி.எஸ் தரப்பினர் கொடுக்கும் தொடர் அழுத்தம்தான் இதற்கு காரணம் என்று கூறப்படுகிறது.
மேலும், டி.டி.வி.தினகரன் ஆதரவாளர்கள் பலர் பொறுப்புகளில் தொடருவதால் அ.தி.மு.க கரைபோட்ட வேட்டியை கட்டிக்கொண்டு, அரசு அலுவலகங்களுக்கு சென்று தங்களது காரியத்தை முடித்துக் கொள்கின்றனர்.
இதனால், அவர்கள் அனைவரும் கட்சிக்கு துரோகம் செய்கின்றனர் என்றும் அவர்களை ஏன் கட்சியில் வைத்திருக்க வேண்டும் என்றும் ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் வலியுறுத்தி வந்தனர்.
அதன் அடிப்படையில் தான், நேற்றுமுன் தினம் வடசென்னை வடக்கு மாவட்ட செயலாளர் வெற்றிவேல் மற்றும் தென்சென்னை வடக்கு மாவட்ட செயலாளர் வி.பி.கலைராஜன் உள்பட 6 மாவட்ட செயலாளர்களின் பதவி அதிரடியாக பறிக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து, டி.டி.வி.தினகரனுக்கு ஆதரவாக செயல்பட்ட 46 பேரை கட்சியில் இருந்து நீக்கி அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளரும், துணை முதலமைச்சருமான ஓ.பி.எஸ் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளரும் முதலமைச்சருமான எடப்பாடி பழனிச்சாமி நடவடிக்கை எடுத்தனர்.
இந்நிலையில், நேற்றும் இரண்டாவது நாளாக பல்வேறு பொறுப்புகளில் இருந்த 132 பேரை நீக்கி அ.தி.மு.க தலைமை உத்தரவிட்டுள்ளது.
இவ்வாறு பலரை கட்சியிலிருந்து நீக்கியிருப்பது அ.தி.மு.கவினரிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதைத் தொடர்ந்து மாநிலம் முழுவதுமுள்ள டி.டி.வி.தினகரன் ஆதரவு நிர்வாகிகள் பலரும் தொடர்ந்து நீக்கப்படுவார்கள் என்றும் அ.தி.மு.கவினர் தெரிவித்துள்ளனர்.
எனவே இதற்காக டி.டி.வி.தினகரனுக்கு ஆதரவாக செயல்படுபவர்களை கண்காணிப்பதற்காக குழுவும் செயல்பட்டு வருவதாகவும், அவர்கள் டி.டி.வி.தினகரனுக்கு ஆதரவாக செயல்படுபவர்களின் பெயர்களை தயார் செய்து அ.தி.மு.க தலைமைக்கு வழங்கி வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.