மேஷம்
இந்த 2018ல் முயற்சிகள் பல செய்து நல்ல செயல்களைச் செய்து சிறப்படைவீர்கள். குடும்பத்திலும் சிறு சலசலப்புகள் ஏற்படும். வெளியில் கொடுத்திருந்த பணம் கைக்கு திரும்பி வரத் தாமதமாகும். இதனால் அத்தியாவசியத் தேவைகளுக்கு சிறிது கடன் வாங்க நேரிடலாம். சகோதர, சகோதரி வகையிலும் கருத்து வேறுபாடுகள் உண்டாகலாம்.
உங்களுக்குக் கீழ் பணிபுரிபவர்களும் உங்களுக்கு சிக்கல்களை ஏற்படுத்த நினைப்பார்கள். மற்றபடி மனதில் ஊக்கத்தை ஏற்படுத்திக்கொண்டு செயல்படுவீர்கள். கடினமாக முயற்சி செய்து உங்கள் தேவைகளை நிறைவேற்றிக் கொள்வீர்கள். உடல் ஆரோக்யம் சிறப்பாக இருக்கும். குடும்பத்திலும் மருத்துவச் செலவுகள் ஏற்படாது. யாரையும் புண்படுத்தாமல் உங்கள் அணுகுமுறையால் வெற்றி பெறுவீர்கள்.
செப்டம்பர் மாதத்திற்குப் பிறகு உள்ள காலகட்டத்தில் குடும்பத்தில் பாகப்பிரிவினை சுமுகமாக நடக்கும். அசையாச் சொத்துக்களிலிருந்து வருமானம் வரத் தொடங்கும். பல விஷயங்களை சாமர்த்தியமாக சமாளிப்பீர்கள். மறைமுக எதிர்ப்புகள் நீங்கும். வழக்கு விவகாரங்களில் திடீர் திருப்பங்கள் ஏற்படும். குறைந்த உழைப்பிலும் அதிக ஆதாயம் கிடைக்கும். அதேசமயம் புறம் பேசுபவர்களை இனம் கண்டு ஒதுக்கவும். குடும்பத்தில் ஏற்படும் சில அனாவசியப் பிரச்னைகளைக் கண்டும் காணாமல் இருக்கவும்.
செய்தொழிலில் எதிர்பார்த்த வருமானம் கிடைக்கும். நவீன பொருட்களை வாங்கி இல்லத்தை அலங்கரிப்பீர்கள். முன்பின் அறிமுகம் இல்லாதவர்களுக்கும் உதவி செய்து பெருமையடைவீர்கள். மற்றபடி அலைச்சல் தரும் வேலைகளைக் குறைத்துக்கொள்ளவும். அனாவசியப் பயணங்களையும் தவிர்க்கவும்.
உத்யோகஸ்தர்களுக்கு அலைச்சலும் வேலைப்பளுவும் அதிகரித்தாலும் உங்கள் வேலைகள் மேலதிகாரிகளின் பாராட்டுகளைப் பெறும். உங்களின் ஆற்றல் அதிகரிக்கும். அலுவலக ரீதியான பயணங்களால் பண வரவு உண்டாகும். அதேநேரம் சக ஊழியர்களை நம்பி எந்த வேலையையும் ஒப்படைக்க வேண்டாம். சிலருக்கு இந்த ஆண்டு விரும்பத்தகாத இடமாற்றங்கள் உண்டாகும்.
வியாபாரிகள் கொடுக்கல், வாங்கல் விஷயங்களில் அனுகூலமான பலன்களைக் காண்பீர்கள். தொழில் ரீதியாக புதிய திருப்பங்கள் ஏற்படும்.
கலைத்துறையினரைத் தேடிப் புதிய ஒப்பந்தங்கள் வரும்.ஆனாலும் ரசிகர்களின் ஆதரவு குறைந்தே காணப்படும். எனவே ரசிகர் மன்றங்களுக்கு செலவு செய்து அவர்களை உற்சாகப்படுத்தவும். தொழிலில் கவனமும், செயல்பாட்டில் நிதானமும் தேவை.
பெண்மணிகளுக்கு குழந்தைகளால் பெருமை உண்டாகும். அதேசமயம் கணவருடன் வாக்கு வாதங்கள் ஏற்படலாம். அதனால் பொறுப்புடனும், நிதானத்துடனும் நடந்துகொள்ளவும். மற்றபடி பொருளாதார நிலையில் எந்தக் குறைவும் ஏற்படாது. எனவே ஆடை , அணிகலன்களை வாங்கி மகிழ்வீர்கள்.
மாணவமணிகள் படிப்பில் கவனத்துடன் ஈடுபடவும். சிலர் முதல் தரம் வாங்குவார்கள். விளையாட்டிலும் வெற்றி பெறுவார்கள்.
இந்த 2018 ஆம் ஆண்டில் செப்டம்பர் மாதம் வரை உள்ள காலகட்டத்தில் நீங்கள் சார்ந்துள்ள துறைகளில் புதிய பொறுப்புகளை ஏற்றுக்கொள்வீர்கள். நண்பர்கள், கூட்டாளிகள் உங்கள் வேலைகளில் பங்கு கொள்வர். முக்கிய விஷயங்களில் நன்றாக சிந்தித்தபிறகே சரியான முடிவை எடுப்பீர்கள். புதிய ரகசியங்களை அறிவீர்கள்.
ரிஷபம்
குடும்பத்தில் ஓரளவு நிம்மதியான சூழ்நிலை தொடரும் என்றாலும் அதை உங்களின் முன்கோப பேச்சுகளால் கெடுத்துக்கொள்ளும் சூழ்நிலையும் உருவாகும். அரசு வகையில் சில பிரச்னைகள் ஏற்பட வாய்ப்பு உள்ளதால் கணக்கு வழக்குகளைச் சரியாக வைத்துக் கொள்ளவும். மற்றபடி குழந்தைகள் உங்கள் பேச்சைக் கேட்டு நடப்பர். குறிக்கோளை நோக்கி படிப்படியாக முன்னேறுவீர்கள். பூர்வீகச் சொத்துக்களைப் பாதுகாக்க சட்டப்படி நடவடிக்கைகளை எடுப்பீர்கள். எதிர்பாராத பல நன்மைகள் எதிர்பாராத சூழ்நிலைகளில் கிடைக்கும்.
செப்டம்பர் மாதம் முதல் ஆண்டு இறுதி வரை உள்ள காலகட்டத்தில் உங்கள் நிர்வாகத் திறமை கூடும். முக்கியமான காரியங்கள் நிறைவேறும். உங்கள் ஆத்மசக்தியால் மனதைக் கட்டுப்படுத்தும் மறைமுகக் கலைகளில் தேர்ச்சிப் பெறுவீர்கள். எதிரிகளின் பலம் குறையும். பயணங்களின் மூலம் முக்கியமான எண்ணங்கள் ஈடேறும். செயல்களில் அலட்சியங்கள் இருந்தாலும் திட்டமிட்டு பணியாற்றி வெற்றி பெறுவீர்கள். உடலாரோக்கியமும் சிறப்பாக இருக்கும். துணிவும் தன்னம்பிக்கையும் அதிகரிக்கும் காலகட்டமாக இது அமைகிறது என்றால் மிகையாகாது.
உத்தியோகஸ்தர்கள் சக ஊழியர்களிடம் ஒற்றுமையாகப் பழகவும். மேலதிகாரிகளால் சிறு உபத்திரவங்கள் இருப்பினும் அதனால் பெரிய பாதிப்பு ஏதும் ஏற்படாது. பயணங்களால் எதிர்பார்த்த லாபங்களைப் பெறுவர். ஊதிய உயர்வும் கிடைக்கும்.
வியாபாரிகள் வாடிக்கையாளர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வர். உங்களின் செயல்கள் சராசரியான வெற்றியைக் கொடுக்கும். வாடிக்கையாளர்களைக் கவர்வதற்காக கடையை அழகு படுத்துவீர்கள். சீரான வருமானத்தால் பழைய கடன்களை அடைத்துவிடுவீர்கள். கூட்டாளிகளிடம் எச்சரிக்கைத் தேவை.
பெண்மணிகளை குடும்பத்தினர் மதிப்புடனும் கௌரவத்துடனும் நடத்துவர். இல்லத்தில் மகிழ்ச்சியைக் காண்பார்கள். பணப்புழக்கம் நன்றாக இருக்கும். எதிர்கால தேவைகேற்ற சேமிப்புத் திட்டங்களில் சேர்வீர்கள். வேலையில் புது உற்சாகமும் சுறுசுறுப்பும் காணப்படும். மற்றவர்களின் ஆசை வார்த்தைகளில் மயங்க வேண்டாம்.
மாணவமணிகள் முயற்சிக்கேற்றவாறு மதிப்பெண்களைப் பெறுவர். பெற்றோர்களின் ஆதரவும் நண்பர்களின் உதவியும் கிடைக்கும். ஆன்மிகத்திலும் விளையாட்டிலும் நேர்த்தியாக ஈடுபடுவீர்கள். படிப்பிற்காக போதிய பயிற்சிகளைத் தவறாமல் செய்வீர்கள்.
மிதுனம்
இந்த 2018ஆம் ஆண்டில் செப்டம்பர் மாதம் வரை உள்ள காலகட்டத்தில் சுகஸ்தானத்தில் இருக்கும் குரு பகவானால் ஆன்மிகப் பெரியோர்களைச் சந்தித்து அவர்களின் ஆசிகளைப் பெறுவீர்கள். செய்தொழிலில் மேன்மை உண்டாகும். சிக்கலான வழக்குகளில் இருந்தவர்களுக்கு திடீரென்று அனுகூலமான விடுதலை கிடைக்கும். எடுத்த அனைத்து காரியங்களிலும் வெற்றி காண்பீர்கள். உடலில் நோய் எதிர்ப்பு சக்தி கூடும். அனாதைகளுக்கும் நலிந்தோருக்கும் அடைக்கலம் கொடுத்து ஆதரவளிப்பீர்கள்.
சமுதாயத்தில் உயர்தோருடன் அறிமுகமாவீர்கள். உங்களின் காரியங்கள் இடையூறின்றி நிறைவேறும். எதிர்பார்த்த எதிர்பாராத அதிர்ஷ்ட வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். சிலர் புதிய வீடு கட்டி கிரகப்பிரவேசமும் செய்வார்கள். பெற்றோர் வழியிலிருந்து நன்மைகள் உண்டாகும். பூர்வீகச் சொத்துக்களில் சுமுகமான பாகப்பிரிவுகளும் உண்டாகும். குடும்பப் பாரம்பரியத்தைக் காப்பாற்றுவீர்கள். மற்றபடி உழைப்பிற்கு ஏற்ற வருமானம் உடனுக்குடன் கிடைக்கும்.
செப்டம்பர் மாதம் முதல் ஆண்டு இறுதி வரை உள்ள காலகட்டத்தில் மாற்றம் பெறும் குரு பகவான் உங்கள் ராசியைப் பார்க்கிறார். உங்கள் உலக அறிவு அனுபவம் பலருக்கும் பயன்படும். தீயோர்களை மன்னிப்பீர்கள். உத்தியோகஸ்தர்கள் அலுவலகப் பணிகளில் மாற்றங்களைக் காண்பார்கள். திட்டமிட்ட காரியங்கள் அனைத்தையும் கவனத்துடன் செய்து முடிப்பர். மேலதிகாரிகளின் மனமறிந்து செயலாற்றுவர். வருமானத்திற்கு எந்த குறையும் வராது. பயணங்களால் நன்மை கிடைக்கும். மேலதிகாரிகளிடமிருந்து எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். விரும்பிய இடமாற்றங்களையும் பெறுவீர்கள்.
வியாபாரிகள் புதிய யுக்திகள் புகுத்தி வருமானத்தைப் பெருக்க முனைவர். போட்டி பொறாமைகள் சற்று தலை தூக்கும். பொருள்களின் விற்பனை நல்ல முறையில் நடக்கும். புதிய முதலீடுகளில் கவனத்துடன் ஈடுபடுவீர்கள். கூட்டாளிகளுடன் கலந்தாலோசித்த பிறகே முக்கிய முடிவுகளை எடுக்கவும். அரசாங்கத்திலிருந்தும் சலுகைகள் கிடைக்கும்.
கலைத்துறையினருக்கு புதிய சந்தர்ப்பங்கள் கிடைக்கும். சக கலைஞர்களே உங்கள் உயர்வுக்கு உறுதுணையாக இருப்பர்.மேலும் பயணங்களால் நன்மைகளை எதிர்பார்க்க முடியாது. பெண்மணிகளுக்கு கணவரிடம் அன்பு, பாசம் அதிகரிக்கும். உற்றார் உறவினர்களிடம் அன்பாகப் பழகுவீர்கள். இல்லத்தில் திருமணம் போன்ற சுப காரியங்களை நடத்தி மகிழ்வீர்கள். வருமானம், தேவைகளைப் பூர்த்தி செய்யுமளவிற்கு இருக்கும். குழந்தைகளால் சந்தோஷங்கள் நிறையும்.
மாணவமணிகள் படிப்பில் நல்ல மதிப்பெண்களைப் பெறுவார்கள். ஆசிரியர்கள் உங்களுக்கு பக்கபலமாக இருப்பர். பெற்றோர்களிடம் விட்டுக் கொடுத்து நடந்து கொள்ளவும்.
கடகம்
இந்த 2018-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் வரை உள்ள காலகட்டத்தில் உங்கள் எண்ணங்களில் தெளிவும் செயல்களில் ஆற்றலும் உண்டாகும். நெடுநாளாக நடந்து கொண்டிருந்த வழக்குகளில் சாதகமான தீர்ப்பு கிடைக்கும். விஷயங்களை மேலோட்டமாகப் பாராமல் அவற்றின் சூட்சுமத்தைப் புரிந்துகொள்ளும் சக்தி உண்டாகும். வருமானம் சிறப்பாக இருக்கும். புதிய முதலீடுகளில் ஈடுபடுவீர்கள். நினைத்தது கைகூடும். உங்களைத் தவறாகப் புரிந்து கொண்டிருந்தவர்கள் உங்களை நாடி நட்பு கொள்வார்கள்.
சமூகத்தில் அதிகமான செல்வாக்கு உண்டாகும். ஆடை, ஆபரணம், பொன், பொருள் சேர்க்கை, வீடு, நிலம், வாகனம் ஆகியவை வாங்கும் போகங்களும் உண்டாகும். குடும்பத்துடன் குலதெய்வ வழிபாடுகளைச் செய்வீர்கள். குடும்பத்தை விட்டுப் பிரிந்தவர்கள் மறுபடியும் குடும்பத்துடன் இணைவர். குடும்பத்தில் திருமணம் புத்திரபிராப்தி ஆகியவைகளும் நடக்கும். உடல் ஆரோக்கியம் சிறப்பாகத் தொடரும்.
தர்ம சிந்தனைகள் மேலோங்கும். ஆன்மிக ஆலய விஷயங்களிலும் ஈடுபடுவீர்கள். பொது ஜனத்தொடர்பு பலப்படும். தவறு செய்யும் நண்பர்களை நேரடியாகக் கண்டிப்பீர்கள். குடும்பத்தில் சுகம் நிறையும். உடன்பிறந்தோரின் நேசத்தைப் பெறுவீர்கள். உங்கள் வாக்குக்கு நன்மதிப்பும் உண்டாகும். கொடுத்த வாக்கையும் எப்பாடுபட்டாவது காப்பாற்றி விடுவீர்கள். நண்பர்களுடன் சேர்ந்து புதிய முயற்சிகளில் ஈடுபட்டு வெற்றி பெறுவீர்கள். மேலும் குழந்தைகளுக்குச் சிறிது அனாவசியச் செலவு செய்ய நேரிடும். அதோடு வழக்குகளும் தாமதமாகும். கவனத்துடனும் எச்சரிக்கையுடனும் காரியமாற்ற வேண்டிய காலக்கட்டமிது.
வியாபாரிகளுக்கு கொள்முதல் லாபம் அதிகரிக்கும். நண்பர்கள் மற்றும் கூட்டாளிகள் உங்களுக்கு உதவுவர். தொடரும் பிரச்னைகளுக்குத் தீர்வு காண்பீர்கள். திட்டமிட்ட வேலைகளில் கடுமையாக உழைப்பீர்கள். புதியவர்களிடம் உங்கள் ரகசியங்களைப் பகிர்ந்து கொள்ள வேண்டாம்.
கலைத்துறையினருக்கு புதிய நட்புகளால் சந்தோஷம் கிடைக்கும். வேலையில் மட்டுமே குறியாக இருக்கவும். திறமைகளை வளர்த்துக் கொள்வீர்கள். பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். ரசிகர்களின் ஆதரவும் குறைவாக இருக்காது. நிதானமாகவும், பொறுமையுடனும் இருந்து புதிய ஒப்பந்தங்களைப் பெறலாம்.
பெண்மணிகள் குடும்பத்தில் நிம்மதியைக் காண்பீர்கள். வருமானம் சீராக இருப்பதால் பிள்ளைகளின் எதிர்காலத்திற்காக சேமிப்பு விஷயங்களில் கவனம் செலுத்துவீர்கள். ஆடை அணிகலன்களை வாங்கி மகிழ்வீர்கள்.
மாணவமணிகள், கல்வியில் நல்ல மதிப்பெண்களை எடுப்பார்கள். பெற்றோர்கள் உங்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவர். ஞாபகசக்தி வளர விடியற்காலையில் பயிற்சிகளை மேற்கொள்ளவும்.
சிம்மம்
இந்த 2018 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் வரை உள்ள காலகட்டத்தில் உறவினர்கள் நண்பர்கள் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். குடும்பத்தில் குதூகலம் பூத்துக் குலுங்கும். இல்லத்தில் உங்கள் பேச்சுக்கு எதிர் பேச்சு இருக்காது. இல்லத்திற்குத் தேவையான நவீன உபகரணங்களை வாங்குவீர்கள். வருமானம் சிறப்பாக இருக்கும். நெடுநாளாக கருத்தரிக்காமல் இருந்தவர்கள் இந்த காலகட்டத்தில் கருத்தரிப்பார்கள்.
நீடித்து வந்த நோய்கள் முழுமையாக குணமடைந்துவிடும். திடீர் அதிர்ஷ்ட வாய்ப்புகளைப் பெறுவீர்கள். பெரிய ஆலய நிர்மாண வேலைகளிலும் ஈடுபடுவீர்கள். தேவைக்குமேல் பணம் வரும். வராமல் இருந்த கடன்களும் திரும்ப வந்து சேரும். பொழுதுபோக சுற்றுலா சென்று வருவீர்கள். உங்கள் பகுத்தறியும் திறன் கூடும். மனஉணர்ச்சிகள் கட்டுக்குள் இருக்கும். எண்ணங்கள் புதுமைகளாக மலரும். புதிய படைப்புகளை வாங்குவீர்கள். குடத்தில் இட்ட விளக்காக காரியமாற்றி வந்தவர்கள் குன்றின்மேலிட்ட விளக்காகப் பிரகாசிப்பீர்கள். வெளிநாடு சென்று வரும் வாய்ப்புகளும் உண்டாகும். நேர்மையான செயல்களால் வீட்டிலும் வெளியிலும் நீதியைக் காப்பாற்றுவீர்கள். சிலர் விலையுயர்ந்த வாகனங்களை வாங்கும் காலகட்டமிது என்றால் மிகையாகாது.
உத்தியோகஸ்தர்களுக்கு அலுவலக வேலைகளை முன்கூட்டியே திட்டமிட்டு முடித்துவிட்டு நற்பெயர் எடுப்பர். கடமைகளில் கண்ணும் கருத்துமாக இருப்பர். சிலநேரங்களில் சில இடையூறுகளைச் சந்திக்க நேரிடலாம். பணவரவுக்கு தடைகள் வராது. ஊதிய உயர்வினைப் பெறுவர். மேலதிகாரிகள் முழுமையான ஆதரவைத் தரும் ஆண்டாக இது அமைகிறது.
கலைத்துறையினர் வெற்றிமேல் வெற்றி காண்பர். புதிய ஒப்பந்தங்கள் கைகூடும். சக கலைஞர்களால் பாராட்டப்படுவர். ரசிகர்களின் விருப்பத்தைப் பூர்த்தி செய்வர்.
பெண்மணிகளுக்கு கணவரிடம் அன்பு பாசம் அதிகரிக்கும். உறவினர்கள் உங்களை அனுசரித்துச் செல்வர். ஆடை அணிமணிகள் சேர்க்கை உண்டு. வெளியூரிலிருந்து மனதிற்கினிய செய்திகளைக் கேட்பர். மேலும் சிறுசிறு பிரச்னைகள் ஏற்பட வாய்ப்புள்ளதால் பேச்சில் நிதானம் தேவை.
மாணவமணிகள் கல்வியிலும் விளையாட்டிலும் நன்கு தேர்ச்சி பெறுவர். ஆசிரியர்களின் பாராட்டும் பெற்று மகிழ்வர். மேலும் அதிக மதிப்பெண்களைப் பெற போதிய பயிற்சிகள் எடுத்து படிக்கவும். விளையாட்டினால் உடல் ஆரோக்கியத்தை வளர்த்துக் கொள்வர்.
கன்னி
இந்த ஆண்டு முடிவு கிடைக்காமல் தவித்த விஷயங்களுக்கு தானாகவே முடிவு கிடைத்துவிடும். சூழ்நிலைகள் உங்களுக்கு சாதகமாக மாறும். நேர்முக மறைமுக எதிர்ப்புகள் தானாக விலகும். எதிரிகளுக்குச் சரியான பதிலடி கொடுப்பீர்கள். வழக்குகளிலும் உங்களுக்கு சாதகமான தீர்ப்பு கிடைக்கும். வருமானம் சிறப்பாக இருக்கும். பழைய கடன்களும் வசூலாகும். உடன்பிறந்தோருக்கு தக்க நேரத்தில் உதவிகள் செய்து அவர்களது நேசத்தைப் பெறுவீர்கள்.
அரசாங்கத்திலிருந்து நல்ல தகவல்களை எதிர்பார்க்கலாம். சமுதாயத்தில் உயர்ந்தோரின் நட்பு கிடைக்கும். வாக்குவாதங்களில் சமர்த்தர் என்று பெயரெடுப்பீர்கள். உங்கள் பேச்சில் தத்துவக் கருத்துகள் மிகுந்திருக்கும். மனதிலிருந்த சஞ்சலங்களும் குழப்பங்களும் மறைவதுடன் குடும்பத்தில் சந்தோஷமும் நிறையும். புதிய தொழில் முயற்சிகளில் வெற்றிபெறுவீர்கள். குடும்பத்துடன் சுற்றுலா சென்று வரும் வாய்ப்புகளும் கிட்டும். சிலருக்கு குலதெய்வ வழிபாடுகளும் கைகூடும். மேலும் கடின உழைப்பை மேற்கொள்ள வேண்டிய காலகட்டமிது என்றால் மிகையாகாது.
உத்தியோகஸ்தர்களுக்கு அலுவலகப் பணிகள் அனைத்தும் வெற்றிகரமாக முடியும். எதிர்ப்புகளையும் சாதுர்யமாகச் சமாளிப்பீர்கள். சக ஊழியர்களுடன் இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் மறையும். மேலதிகாரிகளின் கெடுபிடிகளிலிருந்து விடுபடுவீர்கள். பணவரவுடன் பதவி உயர்வும் கிடைக்கும். சிலருக்கு விரும்பிய இடமாற்றமும் கிடைக்கும்.சிலர் வெளிநாட்டுக்குச் சென்று பணிபுரியும் வாய்ப்புகளையும் பெறுவர்.
வியாபாரிகளுக்கு கொடுக்கல் வாங்கல் விஷயங்கள் லாபகரமாக முடியும். புதிய பொருள்களை விற்பனை செய்து மேலும் லாபத்தை அள்ளுவீர்கள். புதிய விற்பனை பிரதிநிதிகளை நியமிப்பீர்கள். மனதிலிருந்த குழப்பங்கள் விலகும். மேலும் போட்டியாளர்களின் மனமறிந்து சந்தையில் விலையை நிர்ணயித்து வியாபாரம் செய்ய நேரிடும். விவசாயிகளுக்கு உற்பத்தியில் நல்ல பலன் கிடைக்கும்.
கலைத்துறையினரின் முயற்சிகள் அனைத்தும் வெற்றி பெறும். ஒப்பந்தங்களில் எதிர்பார்த்த வருமானம் கிடைக்கும். திறமைக்குத் தகுந்த அங்கீகாரத்தையும் பெறுவர். சக கலைஞர்களால் பாராட்டப்படுவார்கள்.
பெண்மணிகளுக்கு கணவரிடம் ஒற்றுமை அதிகரிக்கும். குடும்பத்தாரிடம் அன்பு பாசத்தோடு பழகுவர். மனதில் உற்சாகத்தைக் கூட்டிக் கொண்டு செயல்படுவீர்கள். கணவரிடம் ஒற்றுமை அதிகரிக்கும். குடும்பத்தாரிடம் அன்பு பாசத்தோடு பழகுவதோடு, கடமைகளில் சலிப்பு உண்டானாலும் மனதில் உற்சாகத்தைக் கூட்டிக் கொண்டு செயல்படுவர். சேமிப்பு விஷயங்களில் கவனம் செலுத்துவர்.
மாணவமணிகளின் கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேறும். பாடங்களை மனப்பாடம் செய்ய போதிய பயிற்சிகளையும் மேற்கொள்வர். தேவையான உடற்பயிற்சிகள் செய்து உடல்பலத்தைக் கூட்டிக்கொள்வதுடன் வருங்காலத் திட்டங்களுக்கு அஸ்திவாரமும் போடுவீர்கள்.
துலாம்
இந்த ஆண்டு குடும்பத்தில் நிம்மதி நிலவும். குடும்பத்தாருடன் சந்தோஷமாக பொழுதைக் கழிப்பீர்ர்கள். குடும்பத்தில் உங்கள் மதிப்பு மரியாதை உயரும். தாயின் உடல்நிலை சீர்படும். உற்றார் உறவினர்கள் குறிப்பாக, மாமன் வகையில் இருந்து வந்த கசப்புகள் நீங்கி சுமுகமான உறவு உண்டாகும்.
புதிய வீடு, மனை வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். சிலர் குடியிருக்கும் வீட்டைவிட்டு சற்று கூடுதல் வசதியான வீடுகளுக்கு மாறுவர். புதிய ஆடைஆபரணங்கள் வாங்கும் யோகம் உண்டாகும். பொருளாதாரம் படிப்படியாக உயரும். அதனால் பழைய கடன்களை அடைக்கத் தொடங்குவர். அனாவசியச் செலவுகள் குறைந்து அவைகள் சுபச் செலவுகளாக முடியும்.
உங்களின் நுண்ணறிவு வெளிப்படும். மேலும் பேச்சுத் திறமைக்கும் மதிப்பு ஏற்படும். புதிய யுக்திகளில் பணம் சம்பாதிக்கும் யோகமும் உண்டு. உங்களுக்குக்கீழ் வேலை செய்பவர்களை அரவணைத்துச் செல்லவும். செயல்களில் பொறுமையுடன் செயலாற்றி வெற்றியுடன் முடிப்பர். ஷேர்மார்க்கெட் போன்ற துறைகளில் பெரிய லாபத்தை இதே காலகட்டத்தில் எதிர்பார்க்க முடியாது என்றால் மிகையாகாது.
உத்தியோகஸ்தர்கள் பயணங்களால் பணவரவைக் காண்பார்கள். பிரச்னைகளுக்கு நிரந்தர தீர்வு காண முடியாவிட்டாலும் தற்காலிகத் தீர்வு கிடைக்கும். அலுவலகங்களில் வேலைப்பளு சற்று கூடுதலாகவே இருக்கும். பதவி உயர்வும் கிடைக்கும். மற்றவர்கள் பார்த்துப் பொறாமைப்படும் அளவிற்கு, நடந்து கொள்வர். கொடுத்த பொறுப்புகளைத் தட்டிக் கழிக்காமல் பொறுப்புடனும் நிதானத்துடன் செய்து முடிப்பீர்கள்.
வியாபாரிகள் எதையும் ஒரு முறைக்கு இருமுறை யோசித்துச் செய்யவும். காரியங்கள் அனைத்தையும் உங்கள் கட்டுப்பாட்டுக்குள் வைத்துக் கொள்ளவும். கூட்டாளிகளிடம் கலந்தாலோசித்த பிறகு முக்கிய முடிவுகள் எடுக்கவும். பணவிஷயங்களில் எச்சரிக்கை தேவை.
கலைத்துறையினரின் புகழ் கூடும். எதிர்பார்த்த இடங்களிலிருந்து உதவி கிடைக்கும். உங்கள் முயற்சியும் உழைப்பும் வெற்றியைத் தேடித்தரும். நிதானப்போக்கினால் பெரிய முன்னேற்றத்திற்கு வழியை தேடித்தரும். புதிய வாய்ப்புகள் புகழுடன் வருமானத்தையும் கொண்டு வரும். ரசிகர்களால் எதிர்பார்த்த அளவுக்கு நன்மைகள் இருக்காது.
பெண்மணிகள் மனநிம்மதியைக் காண்பார்கள். தெய்வ வழிபாட்டிலும் தர்மகாரியங்களிலும் ஈடுபடுவர். புதிய சொத்து வாங்க ஆரம்பக்கட்ட வேலைகளைத் துவக்குவர். குடும்பத்தினருடன் சந்தோஷமாக பொழுதைக் கழிப்பார்கள். கணவருடன் ஒற்றுமையை காண்பதுடன் குடும்பப் பொறுப்புகளையும் சிறப்பாக நிறைவேற்றுவர்.
மாணவமணிகளுக்கு நினைவாற்றல் அதிகரிக்கும். கூடுதல் மதிப்பெண்களைப் பெறுவர். மனதிற்குப்பிடித்த விளையாட்டுகளிலும் கேளிக்கைகளிலும் ஈடுபடுவர். பெற்றோர்களும் ஆசிரியர்களும் உங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றுவர். மேலும் நண்பர்களிடம் எச்சரிக்கையுடன் நடந்து கொள்ளுங்கள். புதிய நண்பர்களுடன் ஓரளவுக்குமேல் நட்பு கொள்ள வேண்டாம்.
விருச்சிகம்
குழந்தைகளால் மனதில் மகிழ்ச்சி உண்டாகும். சிலருடைய குழந்தைகள் வெளிநாடு சென்று கல்வி பயிலும் வாய்ப்புகளும் கிடைக்கும். செய்தொழில் சிறக்கும். புதிய பொறுப்புகளையும் ஏற்று நடத்துவீர்கள். பயங்கள் மறைந்து கவலைகளின்றி காணப்படுவர்.
எப்படிப்பட்ட கடுமையான சூழ்நிலைகளையும் திறம்பட சமாளிக்கும் திறன் இருக்கும். எதிராக நின்ற போட்டியாளர்கள் படுதோல்வி அடைவர். உடன்பிறந்தோர் அன்புடன் நடந்து கொள்வார்கள். துணிச்சலான காரியங்களிலும் ஈடுபாடு உண்டாகும். குடும்பத்தில் சிறுசிறு பிரச்னைகள் ஏற்பட்டு விலகும்.
சமூகத்தில் நல்ல நிலைக்கு வருவீர்கள். உங்களுக்குக்கீழ் வேலை செய்பவர்களும் உங்களது கருத்தறிந்து நடந்து கொள்வார்கள். உடலாரோக்கியம் சிறக்கும். உடலை கச்சிதமாக வைத்துக்கொள்ள தேவையான உடற்பயிற்சிகளை செய்வீர்கள். சிறந்த பேச்சாளர் என்கிற நிலைக்கு உயர்வுண்டாகும். பணம் பல வழிகளில் வந்து சேரும். அரசிடமிருந்து ஆதாயங்களையும் சலுகைகளையும் பெறுவர். நோயினால் பீடிக்கப்பட்டிருந்தால் பாதிப்புகளிலிருந்து விடுபட்டு விடுவர். தீயவர்களின் சகவாசம் மறைந்து நல்லவர்களின் தொடர்பு தானாகவே தேடிவரும் காலகட்டமிது என்றால் மிகையாகாது.
உத்தியோகஸ்தர்களுக்கு விரும்பிய பணி உயர்வு மற்றும் ஊதிய உயர்வு இரண்டுமே கிடைக்கும். மேலதிகாரிகள் உங்களிடம் புதிய பொறுப்புகளை ஒப்படைப்பார்கள். உடல் சோர்வு, மனத்தெளிவின்மை அகலும். சக ஊழியர்கள் பகைமை மறந்து நட்பு பாராட்டுவர். திறமையை வளர்த்துக்கொள்வர்.
வியாபாரிகள் கொடுக்கல் வாங்கல்களில் நன்மைகளைக் காண்பர். போட்டிகளையும் சாதுர்யத்துடன் சமாளிப்பர். விற்பனை பிரதிநிதிகள் சிறப்பாக பணியாற்றுவர். அதிக லாபம் தரும் பொருள்களை வாங்கி விற்பனை செய்வார்கள். வங்கிக் கடன்களும் கிடைக்கும். சிறிய அளவில் வியாபாரத்தை விரிவுபடுத்த முனைவர்.
கலைத்துறையினர் புதிய அங்கீகாரங்களைப் பெறுவர். புதிய வாய்ப்புகளும் வரும். திறமைகளை வெளிப்படுத்த சந்தர்ப்ப சூழ்நிலைகள் சாதகமாக மாறும். பொருளாதார வசதிகள் மேம்படும். புதிய வண்டி வாகனங்களை வாங்குவீர்கள். புகழ் வளரும்.
பெண்மணிகளுக்கு அனைத்து காரியங்களும் சுமுகமாக முடிவடையும். குடும்பத்தாரின் நல்லெண்ணங்களுக்குப் பாத்திரமாவீர்கள். கணவரிடம் நல்ல உறவு அமையும். ஆன்மிகத்திலும் நாட்டம் அதிகரிக்கும். புதிய ஆலயங்களுக்கு சென்று வருவர். பொருளாதாரம் நன்றாக இருக்கும். கடன் தொல்லைகள் ஏற்படாது.
மாணவமணிகள் கடினமாக உழைத்து கணிசமான மதிப்பெண்கள் பெறுவர். உடன்பிறந்தோரின் உதவிகளால் கல்வியில் முன்னேறுவர். பயிற்சியும் முயற்சியும் உங்களை வெற்றிப்பாதையில் இட்டுச் செல்லும். பெற்றோர் மற்றும் ஆசிரியர்களிடம் நல்ல முறையில் பழகுவீர்கள்.
தனுசு
உள்ளம், எண்ணம், சிந்தனை வேலோங்கும். மனதில் புதிய சிறப்பான விஷயங்கள் தோன்றும், உங்கள் விவேகம் கூடும். சில நேரங்களில் நீங்கள் தீர்க்கதரிசி என்று பாராட்டப்படும் வகையில் உங்கள் மதிநுட்பம் வெளிப்படும்.
குழந்தைகளால் மகிழ்ச்சி கூடும். அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்பது போல பேச்சில் வசீகரமும் முகத்தில் பொலிவுடனும் காணப்படுவீர்கள். நீண்ட நாள்களாகத் தள்ளி வைத்திருந்த வெளிநாட்டுப் பயணமும் கைகூடும். உங்கள் காரியங்களைத் தன்னம்பிக்கையுடன் செய்வீர்கள். உடல் உபாதைகளால் அவதிப்பட்டு வந்தவர்கள் அவைகள் நீங்கப் பெறுவார்கள்.
இந்த ஆண்டு குருப் பெயர்ச்சிக்குப் பின் ஆண்டு இறுதிவரை உள்ள காலகட்டத்தில் பல அதிர்ஷ்ட வாய்ப்புகள் எதிர்பாராத விதத்தில் பெறுவீர்கள். உங்கள் சிறிய முயற்சிகள் உங்களுக்கு பலமடங்கு வெற்றியைத் தேடித்தரும். ஆக்கபூர்வமாகச் சிந்தித்து சிறப்பாகச் செயலாற்றுவீர்கள். உங்கள் நன்னடத்தைகளினால் அனைவரின் பாராட்டுகளையும் பெறுவீர்கள். தர்மகாரியங்களிலும் ஆலய திருப்பணிகளிலும் ஈடுபடுவீர்கள்.
உத்தியோகஸ்தர்களுக்கு விரும்பிய பணி உயர்வு மற்றும் ஊதிய உயர்வு இரண்டும் கிடைக்கும். மேலதிகாரிகள் உங்களின் செயல்திறன் கண்டு பாராட்டி மேலும் சில முக்கிய பொறுப்புகளையும் ஒப்படைப்பார்கள். சிலர் அலுவலகத்தில் முக்கிய பயணங்களைச் செய்து புதிய பயிற்சிகளைக் கற்று பயனடைவர்.
வியாபாரிகளுக்கு கொடுக்கல் வாங்கல் விஷயங்கள் சுமுகமாக முடியும். கூட்டாளிகள் உங்களோடு நட்புடன் பழகுவார்கள். சிறிய முதலீடுகளில் பெரிய வருமானத்தைக் காண்பீர்கள்.
கலைத்துறையினர் நல்ல முன்னேற்றங்களைக் காண்பர். புதிய ஒப்பந்தங்களை நல்ல முறையில் முடித்துக் கொடுப்பீர்கள். சக கலைஞர்களின் உதவியையும் பாராட்டையும் பெற வாய்ப்புகள் உண்டாகும்.
பெண்மணிகள் கடமை உணர்வுடன் விளங்கி குடும்பத்தைப் பொறுப்புடன் நடத்திச் செல்வர். திருமணம் போன்ற சுப காரியங்கள் நடப்பதில் இருந்த தடைகள் விலகும். கணவரிடம் ஒற்றுமை அதிகரிக்கும். இருப்பினும் குடும்பத்தில் சிறுசிறு பிரச்னைகள் தோன்றி மன அமைதியைக் குறைக்கும்.
மாணவமணிகளுக்கு கல்வியில் ஆர்வம் கூடும். எதிர்பார்த்த மதிப்பெண்கள் கிடைக்கும். விளையாட்டுகளில் ஆர்வத்துடன் ஈடுபட்டு சாதனைகள் படைப்பீர்கள். பெற்றோர்களாலும் ஆசிரியர்களாலும் உற்சாகம் கிடைக்கும்.
மகரம்
வருமானம் சீராக இருப்பதால் கடன்கள் படிப்படியாக குறைந்துவிடும். உற்றார் உறவினர்களை அரவணைத்துச் செல்வீர்கள். பிராணிகளாலும் வருமானம் கிடைக்கும். வெளியில் கொடுத்த கடன்கள் தடையில்லாமல் குறித்த காலத்தில் திரும்பக் கிடைக்கும். வீண் செலவுகளைத் தவிர்த்து விடுங்கள். நேர்முக மறைமுக எதிரிகளிடமிருந்து விலகி நின்று செயல்படுவீர்கள்.
இந்த ஆண்டு ஜூலை மாதத்திலிருந்து ஆண்டு இறுதிவரை உள்ள காலகட்டத்தில் சராசரிக்கும் அதிகமான வருமானத்தைப் பெறுவீர்கள். கைநழுவிப்போன பதவிகள் உங்கள் கையைத் தேடிவரும். சமுதாயத்தில் உடன்பிறந்தோரால் பாராட்டப்படுவர். உற்றார் உறவினர்கள் மீது உங்களது பாசம் அதிகரிக்கும். பூர்வீகச் சொத்துக்கள் கிடைக்க வாய்ப்புகள் உண்டாகும். கவலைகள் மறையும். சுகவீனங்களும் மறையும். தீய எண்ணங்கள் மனதில் புகாமல் இருக்கும். நண்பர்களையும் ஆதரிக்கும் மனப்பான்மை உண்டாகும். அன்னையுடன் நல்ல உறவு தொடரும். சரியான நேரத்தில் உணவெடுத்துக் கொள்வீர்கள். மற்றபடி அனைத்துச் செயல்களிலும் தெளிவான போக்கு தென்படும் காலகட்டமாக இது அமைகிறது.
உத்தியோகஸ்தர்களுக்கு அலுவலகத்தில் இருந்து வந்த கெடுபிடிகள் மறைந்து சுமுகமான சூழ்நிலை தென்படும். உழைப்புக்குத் தகுந்த ஊதியமும் கிடைக்கும். உயரதிகாரிகளின் அன்பும் ஆதரவும் கிடைக்கும் வாய்ப்புகள் அதிகம். சக ஊழியர்களிடம் இணக்கமான உறவு மேம்படும். அவர்கள் உங்கள் வேலைச்சுமையை பகிர்ந்து கொள்வர். சிலருக்கு வீடுகட்ட கடன்களும் கிடைக்கும்.
வியாபாரிகள் வாடிக்கையாளர்களிடம் நிதானமாகப் பேசவும். முன்கோபத்தைக் குறைத்துக் கொள்ளவும். கடும்போட்டிகளையும் சந்திக்க நேரிடும். எனவே புதிய முதலீடுகளைச் செய்ய வேண்டாம். கூட்டாளிகளும் சாதகமாக நடந்து கொள்வர்.
கலைத்துறையினர் பழைய ஒப்பந்தங்களை முடித்து கொடுத்த பின்னரே புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடவும். மற்றபடி சக கலைஞர்கள் உதவக்கூடிய நிலையில் இருப்பதால் அவர்களை முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ளவும். புதிய கலைப்பயணங்களையும் மேற்கொள்வீர்கள்.
பெண்மணிகளுக்கு கணவரிடம் அன்பும் பாசமும் அதிகரிக்கும். உறவினர்கள் உங்களை அனுசரித்துச் செல்வர். பணவரவும் சீராகவே இருந்துவரும். உடலாரோக்கியம் சிறப்பாக இருப்பதுடன் ஆன்மீகச் சுற்றுலாவுக்கும் சென்று வருவீர்கள். மேலும் கிடைக்கும் வாய்ப்புகளைச் சரியாகப் பயன்படுத்திக் கொள்ளவும். மாணவமணிகளின் புத்தி கூர்மையடையும். நல்ல மதிப்பெண்கள் பெறுவதற்கு வாய்ப்புண்டாகும். போட்டிகளிலும் பங்கேற்று புகழும் பாராட்டும் பெறுவீர்கள்.
கும்பம்
இந்த ஆண்டு நிரந்தர வருவாய் வரும் தொழில் அமையும். வெளியூர் பயணங்களை அடிக்கடி செய்து செய்தொழிலில் வளர்ச்சி காண்பீர்கள். செய்கின்ற காரியங்களில் ஏற்படும் இடையூறுகளை சீரிய முயற்சிகளால் வெற்றியடையச் செய்வீர்கள். உறுதியுடனும் உற்சாகத்துடனும் பணியாற்றுவீர்கள்.
சமூகத்தில் மதிப்பு மரியாதைகள் உயரும். சார்ந்துள்ள துறையில் பெரியோர்களைச் சந்தித்து அவர்களின் அறிவுரையால் தொழிலில் புதிய நுட்பங்களைப் புகுத்துவீர்கள். நண்பர்களும் உங்கள் ஆலோசனைகளைக் கேட்டு நடப்பர்.
இந்த ஆண்டு ஆகஸ்டு மாதத்திலிருந்து ஆண்டு இறுதிவரை உள்ள காலகட்டத்தில் வருமானம் சீராக இருந்தாலும் செலவுகள் சற்று அதிகரிக்கும். அதனால் சிக்கனத்தைக் கையாளவும். இதனால் புதிய ஊக்கத்துடனும் உத்வேகத்துடனும் வேலை செய்யும் பக்குவம் உண்டாகும். உங்கள் பேச்சில் சிறிது தற்பெருமை தலை தூக்கும். பயணங்கள் செய்யும்போது புதிய இடர்பாடுகளைச் சந்திக்க நேரிடும். வம்பு வழக்குகளில் விட்டுக் கொடுத்து சமாதானமாகவே போகப் பார்க்கவும்.
உத்தியோகஸ்தர்களுக்கு வேலைப்பளு இருந்தாலும் நன்கு உழைப்பீர்கள். பணவரவு நன்றாக இருக்கும். சிலருக்கு எதிர்பாராத உயர்வுகள் தேடிவரும். சக ஊழியர்கள் உங்கள் வேலையில் பங்கெடுத்துக் கொள்வார்கள். அவர்களிடம் அனாவசிய விரோதம் எதுவும் வேண்டாம். சிலருக்கு விருப்பமில்லாத இடமாற்றங்களும் கிடைக்கும். பொறுமையுடனும் கடமை உணர்ச்சியுடனும் பணியாற்றுவீர்கள்.
வியாபாரிகள் கொடுக்கல் வாங்கல் விஷயங்களைத் திருப்திகரமாக முடிப்பார்கள். இடையூறுகள் தோன்றினாலும் அவைகளைச் சமாளித்து வெளிவந்து விடுவீர்கள். காலதாமதமானாலும் திட்டமிட்ட பணிகள் நிறைவடைந்துவிடும்.
கலைத்துறையினரைத் தேடி புதிய ஒப்பந்தங்கள் வரும். அதில் திறமைகளை நன்றாக வெளிப்படுத்தி பாராட்டுகள் பெறுவீர்கள். ரசிகர்களின் ஆதரவுடன் இனிய பயணங்களை மேற்கொள்வீர்கள். ஒப்பந்தங்களில் நல்ல வருமானம் வரும்.
பெண்மணிகளுக்கு கணவருடனான ஒற்றுமை சீராகும். குழந்தைகளின் மூலம் மகிழ்ச்சி கிட்டும். பிரச்னைகள் உண்டாகும்போது பொறுமையுடன் பேசி தீர்த்துக் கொள்வீர்கள். பயணங்கள் செய்யும்போது கவனத்துடன் இருக்கவும்.
மாணவமணிகளுக்கு கல்வியில் ஆர்வம் அதிகரிக்கும். பெற்றோரின் ஆதரவைப் பெறுவீர்கள். நண்பர்களிடம் அனாவசியப் பேச்சு வேண்டாம். மற்றபடி ஆசிரியர்களின் பாராட்டு மழையில் நனைவீர்கள்.
மீனம்
மனதில் தோன்றும் எண்ணங்களைத் தெளிவாக வெளிப்படுத்துவீர்கள். நெருக்கடியான சமயங்களில் மதிநுட்பத்தால் நிலைமைகளைச் சமாளித்து விடுவீர்கள். பொருளாதாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்குமென்றாலும் அவ்வப்போது சிறுசிறு நஷ்டங்களும் ஏற்பட்டுக் கொண்டே இருக்கும். போட்டி, பந்தயம், ஸ்பெகுலேஷன் துறைகளில் வெற்றி கிடைக்கும். நல்லவர்கள் பக்கபலமாக இருப்பார்கள். அவர்களால் சில முக்கியமான எண்ணங்கள் நிறைவேறும். அரசியல் ஈடுபாடு ஆக்கம் தரும்.
மின்னுவதெல்லாம் பொன்னல்ல என்கிற பழமொழிக்கு ஏற்ப நன்மை தீமைகளைப் பகுத்தறிந்து காரியமாற்றுவீர்கள். உங்கள் பேச்சுத் திறனால் மற்றவர்களைக் கவருவீர்கள். குழந்தைகள் வழியில் முன்னேற்றங்கள் உண்டாகும். தேக ஆரோக்கியம் சிறப்பாக அமையும். இந்த காலகட்டத்தில் காணாமல்போன பொருள்களும் திரும்பக் கிடைக்கும்.
இந்த ஆண்டு ஆகஸ்டு மாதத்திலிருந்து ஆண்டு இறுதிவரை உள்ள காலகட்டத்தில் உங்களின் ஆன்மிக உணர்வு மிகுதியாகவே இருக்கும். நீங்கள் எடுக்கும் எல்லா முயற்சிகளிலும் வெற்றி பெறுவீர்கள். வாழ்க்கையில் இருந்த வெறுப்புகள் மறைந்து சிறப்பான பிடிப்புகள் உண்டாகும் காலகட்டமிது என்றால் மிகையாகாது.
உத்தியோகஸ்தர்களுக்கு அலுவலக வேலையில் இருந்த பிரச்னைகள் படிப்படியாகக் குறையும். திட்டமிட்ட வேலைகளில் சில இடையூறுகள் தோன்றினாலும் விரைவில் அவை விலகி பதவி உயர்வு கிடைக்கும். பயணங்களால் பணவரவைக் காண்பீர்கள். மேலதிகாரிகளின் ஆதரவு தொடர்ந்து கிடைக்கும். சக ஊழியர்களால் ஏற்படும் இடையூறுகளை சாதுர்யமாக முறியடிப்பீர்கள். விரும்பிய இடமாற்றங்களும் கிடைக்கும்.
வியாபாரிகளுக்கு கொடுக்கல் வாங்கல் விஷயங்கள் நன்றாகவே முடிவடையும். போட்டிகளால் பெரிய பாதிப்பு எதுவும் ஏற்படாது. பழைய எதிரிகளின் மீது ஒரு கண் இருக்கட்டும். பழைய கடன்கள் வசூலாகும். புதிய யுக்திகளைப் புகுத்தி வாடிக்கையாளர்களைக் கவருவீர்கள்.
கலைத்துறையினருக்கு பணப்புழக்கம் நன்றாக இருக்கும். உயர்ந்தவர்களைச் சந்தித்து உற்சாகம் அடைவீர்கள். புதிய படைப்புகளைத் தயாரிப்பதில் கவனம் செலுத்துவீர்கள். பயணங்களால் நன்மைகளை அடைவீர்கள். செயல்கள் அனைத்தும் வெற்றியைத் தேடித்தரும்.
பெண்மணிகள் கணவரின் ஆதரவுடன் புதிய பொருள்களை வாங்குவர். குடும்பத்தில் மகிழ்ச்சியைக் காண்பர். கணவருடன் அன்போடு பழகுவர்.
மாணவமணிகள் முயற்சிக்குத் தகுந்தவாறு மதிப்பெண்களைப் பெறுவர். பாடங்களைப் பிறகு படித்துக் கொள்ளலாம் என்று நினைக்காமல் உடனுக்குடன் மனப்பாடம் செய்யவும். விளையாட்டிலும் வெற்றி கிடைக்கும்.