தமிழ்தேசிய கூட்டமைப்பின் உள்ளூராட்சி சபை வேட்பாளர் தர்சாநந்தனின் தேர்தல் பிரச்சார சுவரொட்டிகளை ஒட்டிய இரு இளைஞர்கள் யாழ்ப்பாணம் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
யாழ்ப்பாணம் கந்தர்மடம் இந்து மகளீர் கல்லூரிக்கு அருகாமையில் இன்று(30) அதிகாலை தேர்தல் பிரசார சுவரொட்டிகளை ஒட்டிய போதே ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்ட பொலிஸார் கைது செய்துள்ளனர்.
கைதுசெய்யப்பட்ட இருவரும் 21 மற்றும் 26 வயதுடைய இளைஞர்கள் என்றும் ஒருவரிடம் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
விசாரணைகளின் பின்னர் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் ஆஜர்ப்படுத்துவதற்கான நடவடிக்கையினை முன்னெடுக்கவுள்ளதாகவும் யாழ்ப்பாணம் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
தோ்தல் பிரசாரம் தொடா்பில் பல்வேறு சட்டதிட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் ஒரு நபரின் வீட்டில் குழுவாக சிறிய கூட்டம் ஒன்று வைப்பதாயின் அந்த வீட்டு உரிமையாளர் சம்மதக் கடிதம் தரவேண்டும், ஒரு பிரதேசத்திற்குரிய காரியாலயமாக ஒரு கட்சிக்கு ஒரு காரியாலயம் மாத்திரமே அப்பிரதேசத்தில் அமைக்க முடியும், அதற்குரிய அனுமதியையும் தேர்தல் செயலகத்தில் பெற்றுக் கொள்ள வேண்டும்.
வீதிகளைக் குறுக்கீடு செய்து கொடிகள் மற்றும் பானா்கள் கட்டக்கூடாது சட்டவிரோதமான முறையில் தேர்தல் பிரச்சாரங்களில் ஈடுபடுவோருக்கு கட்சி பேதங்கள் பாராமல் முறையான சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.