பொலிசாருடன் தகராறில் இலங்கை அகதி பெண்!

தனது கணவருக்கு பிடியாணை கொடுக்க வந்த பொலிசாருடன் இலங்கைத் தமிழ் அகதி பெண் தகராறில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

இலங்கை யாழ்ப்பாணம் பகுதியைச் சேர்ந்தவர்கள் கதிர்வேல் தயாபரராஜ் மற்றும் உதயகலா தம்பதி. இவர்கள் கடந்த 2014ஆம் ஆண்டு மே 5ஆம் திகதி, தங்களின் குழந்தைகளுடன் தனுஷ்கோடிக்கு வந்துள்ளனர்.

அப்போது, தனுஷ்கோடி பொலிசார் இவர்கள் மீது கடவுச்சீட்டு சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்ததின் பெயரில், நீதிமன்ற தண்டனைக்குப் பின் இவர்கள் மண்டபத்தில் உள்ள அகதிகள் முகாமில் தங்கவைக்கப்பட்டனர்.

இந்நிலையில் இலங்கையில் இருந்தபோது பலரிடம் தயாபரராஜ், பணமோசடியில் ஈடுபட்டதாகவும், இது தொடர்பாக சாகவச்சேரி நீதிமன்றத்தில் வழக்கு நடந்து வந்ததும் தெரியவந்தது.

இதனைத் தொடர்ந்து இலங்கையின் சாகவச்சேரி நீதிமன்றம் தயாபரராஜூக்கு பிடியாணை பிறப்பித்தது. மேலும், அந்த பிடியாணை இந்திய தூதரகத்தின் மூலம் தமிழக காவல்துறையினருக்கு அனுப்பப்பட்டுள்ளது.

இந்நிலையில் பிடியாணையை பெற்ற ராமநாதபுர மாவட்ட பொலிசார், அகதி முகாமில் உள்ள தயாபரராஜ் வீட்டிற்குச் சென்றுள்ளனர்.

தயாபரராஜ் வீட்டில் இல்லாத காரணத்தால் அவரின் மனைவி உதயகலாவிடம் பிடியாணையை பொலிசார் கொடுத்துள்ளனர். ஆனால் அதனை வாங்க மறுத்த உதயகலா, பொலிசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

மேலும் அவரது வீட்டில் பிடியாணை ஒட்ட முயன்ற பொலிசாருடமும், புகைப்படக்காரரிடமும் தகராறிலும் ஈடுபட்டுள்ளார்.

இதனைத் தொடர்ந்து கிராம நிர்வாக அதிகாரியின் உதவியுடன், பொலிசார் பிடியாணையை உதயகலாவின் வீட்டில் ஒட்டினர்.