ஸ்தம்பித்த தேசிய நெடுஞ்சாலை..

பாட்டாளி மக்கள் கட்சி மேற்கொண்ட சட்டப் போராட்டத்தின் பயனாக தமிழ்நாடு முழுவதும் தேசிய, மாநில நெடுஞ்சாலைகளையொட்டி செயல்பட்டு வந்த 3321 மதுக்கடைகள் கடந்த ஏப்ரல் மாதத்தில் மூடப்பட்டது.

ஆனால் எப்படியோ சட்டத்தில் உள்ள ஓட்டைகளை எல்லாம் குடைந்தெடுத்த தமிழக அரசு மக்களை மதிகெட செய்வேன் என்ற சபதத்தை எடுத்துக்கொண்டு மென்மேலும் தற்போது கடைகளை திறந்து வருகிறது.

large_tamilagarasu-4829தமிழ்நாட்டின் சீரழிவுக்கு மது தான் முக்கியக் காரணமாக உள்ளது. மதுவின் சீரழிவிலிருந்து தமிழகத்தை மீட்க வேண்டும் என்பதற்காகத் தான் பாட்டாளி மக்கள் கட்சி தொடங்கப்பட்ட நாளிலிருந்து போராடி வருகிறது.

நெடுஞ்சாலைகளில் உள்ள மதுக்கடைகளால் சாலை விபத்துக்களும், உயிரிழப்புகளும் ஏற்படுவதால் தான் அவற்றை மூட வேண்டும் என்று கோரி பாட்டாளி மக்கள் கட்சி சட்டப் போராட்டம் நடத்தி வெற்றி பெற்றிருந்தும், இப்போது ஆளும் அதிமுக அரசின் செயல்பாடுகளால் தமிழகம் வெக்கி தலை குனிகிறது.

இதன் உச்சகட்ட அவலமாக, குடிபோதையில் தேனி – கொல்லம் இடையேயான தேசிய நெடுஞ்சாலையில் படுத்து தூங்கிய நபரால் வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு ஆளாயினர்.

வாகன போக்குவரத்து அதிகம் உள்ள இந்த தேசிய நெடுஞ்சாலையில், குமுளி தமிழக அரசு போக்குவரத்துக்கழக பணிமனை முன் அந்த நபர் படுத்து கிடந்தார்.

அந்த பகுதியில் உள்ள சாலை வளைவாக இருந்ததால் அருகில் வந்த பிறகே அவர் சாலையில் படுத்து கிடப்பது வாகன ஓட்டிகளுக்கு தெரியவந்தது.

இதனால் வாகன ஓட்டிகள் கடைசி நேரத்தில் சுதாரித்து சென்றனர். அந்த நபரை எழுப்ப முயன்றவர்களை அவர் தகாத வார்த்தைகளால் திட்டியதாக தெரிகிறது.

இதனை அடுத்து அவரை யாரும் எழுப்ப முயலவில்லை. பின்னர் அந்த நபர் பல மணி நேர தூக்கத்திற்கு பிறகு சாலையிலிருந்து எழுந்துச் சென்றார்.