யாழ் மாவட்டம் ஊர்காவல்துறை, பருத்திதுறை மற்றும் மன்னார் மாவட்டத்தின் தலைமன்னார் நீதிமன்றங்களால் விடுதலை செய்யப்பட்ட அறுபத்து ஒன்பது (69) மீனவர்கள் இந்தியா நோக்கி தற்பொழுது கொண்டுசெல்லப்படுவதாக எமது செய்தியாளர் குறிப்பிடுகின்றார்.
மருத்துவ பரிசோதனைகள் முடிவடைந்த நிலையில் காங்கேசன்துறை துறைமுகத்தில் இருந்து இலங்கை கடற்படைக்கு சொந்தமான ரோந்து கப்பல் ஒன்றின்மூலமே மேற்படி மீனவர்கள் அழைத்துச் செல்லப்படுகின்றனர். இவ்வாறு அழைத்துச் செல்லப்படும் மீனவர்கள், சரியாக 11.30 மணியளவில் சர்வதேச கடல் எல்லையில் வைத்து இந்திய கடலோர காவல் படையிடம் ஒப்படைக்கப்படவுள்ளனர்.
இந்திய கடலோர காவற்படைக்குச் சொந்தமான அம்மைய்யா (AMAYA) கப்பலில் குறித்த மீனவர்கள் பொறுப்பேற்கப்பட்டு மீண்டும் இந்தியாவின் தமிழ் நாடு மாநிலத்தை நோக்கி கொண்டுசெல்லப்படுவார்கள். இதன்படி குறித்த மீனவர்கள், இன்று மாலை தமிழ் நாட்டின் காரைக்கால் துறைமுகத்தை வந்தடைவார்கள். இதேவேளை, இந்த மீனவர்களை பொறுப்பேற்பதற்காக மண்டபம் மற்றும் இராமேஸ்வரம் மீன் வளத்துறை அதிகாரிகள் காரைகால் சென்றுள்ளனர்.