வடக்கு போக்குவரத்துச் சபை காலவரையறையற்ற பணிப்புறக்கணிப்பு!

வடபிராந்திய போக்குவரத்துச் சபையின் ஒன்றிணைந்த தொழிற்சங்கத்தால் நாளை திங்கட்கிழமை தொடக்கம் காலவரையறையற்ற பணிப்புறக்கணிப்புப் போராட்டம் முன்னெடுக்கப்படவிருப்பதாக தகவல் கிடைத்துள்ளது.

வடக்கு மாகாண முதலமைச்சரின் தன்னிச்சையான முடிவுகளை எதிர்த்தே இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்படவிருப்பதாக வடபிராந்திய போக்குவரத்துச் சபையின் ஒன்றிணைந்த தொழிற்சங்கத்தின் பொதுச் செயலாளர் அருளானந்தம் அருட்பிரகாசம் தெரிவித்தார்.

இதுகுறித்து மேலும் தெரிவித்த அவர்,

“முதலமைச்சரால் வடபிராந்திய போக்குவரத்துச் சபையின் தனித்துவத்தை இல்லாதொழிக்கும் நடவடிக்கையைக் கண்டித்தும் வடபிராந்திய போக்குவரத்துச் சபைக்கு எதிராக அவரால் எடுக்கப்படும் தன்னிச்சையான நடவடிக்கைகளைக் கண்டித்தும் பாராம்பரியமிக்க வவுனியா மத்திய பேருந்து நிலையத்தை எம்மிடமிருந்து பறிக்கும் நடவடிக்கையைக் கண்டித்தும், வடபிராந்திய போக்குவரத்துச் சபையின் ஒன்றிணைந்த தொழிற்சங்கத்தின் பிரதிநிதிகளை அவமதித்தமையைக் கண்டித்தும் மற்றும் பல கோரிக்கைகளை முன்வைத்துமே இந்தப் போராட்டத்தை நடத்தவுள்ளோம்.

மக்களால் மக்களுக்காக ஒன்றுபட்டு தெரிவுசெய்யப்பட்ட முதலமைச்சர், மக்களின் நலன்களைக் கருத்தில் எடுக்காது, தன்னால் எடுக்கப்பட்ட தீர்மானத்தை இம்மியும் தளராது அதனை நிறைவேற்றுவேன் என வைராக்கியத்துடன் கூறுவதை நாம் கண்டிக்கின்றோம். எமது கோரிக்கைகள் நிறைவேற்றப்படும்வரை போராட்டத்தை நாம் நிறுத்தமாட்டோம். அத்துடன், எமக்கு ஆதரவாக கிழக்கு மாகாண சாலைகளின் பேருந்துகள் வடக்குக்கான சேவைகளை இடைநிறுத்தி எமக்கு ஒத்தழைப்பு வழங்குவதாக அறிவித்துள்ளனர். இந்தப் போராட்டம் நாடு முழுவதும் விரிவாக்கப்படும்” என்றார்.