தனி ஒருவனுக்கு உணவில்லையெனில் இந்த ஜகத்தினை அழித்திடுவோம்’ என்ற பாரதியின் வரிகளை கொஞ்சம் மாற்றி, ஒவ்வொரின் அறிவுப் பசியையும் தீர்த்துவைப்போம் என்று, தனக்கென ஒரு பாணியில் தளராமல் போராடி வருகிறார் ஒரு தமிழ்நாட்டுப் பெண் ஷர்மிளா.
அறிவாற்றலே இளைய சமூகத்துக்கு நாம் விட்டுச் செல்லும் பேராற்றலாக இருக்கும் என்ற நம்பிக்கையில் உறுதியாக இருக்கும் ஷர்மிளா, தமிழகத்தில் ஒரு மூலையில் உள்ள கிராமப்புற கிளை நூலகத்தின் பராமரிப்பாளராக உள்ளார்.
ஆனால் அவரது முயற்சிகள் எல்லோருக்குமானவை என்ற நிலையில், அவர் எடுத்துவரும் முயற்சியை விருது வழங்கி அங்கீகரித்திருக்கிறது தமிழ்நாடு அரசு.
தனது 20 ஆண்டுகால நூலகர் பணியில், நூலகங்களுக்காக, ஏறத்தாழ ஒரு கோடி ரூபாயை தனி நபராகத் திரட்டி சாதனை படைத்திருப்பதாகப் பாராட்டப்படுகிறார் ஷர்மிளா.
மகாகவி பாரதியார் தனது வாழ்நாளில் கடைசியாக உரையாற்றிய பெருமைக்குரிய நூலகமாகக் கருதப்படும் பாரதியார் நூலகம், ஈரோடு மாவட்டம் கருங்கல்பாளையத்தில் உள்ள கிளைநுலகம். இன்றும் பாரதியின் நினைவாக அவரது புகைப்பட குறிப்புகள் உள்ளன.
இந்த நூலகத்தின் காப்பாளரான ஷர்மிளா, அண்மையில் தமிழக அரசின் நல்நூலகர் விருதினை பெற்றுள்ளார்.
இதுவரை கடந்து வந்த 20 ஆண்டு நூலகப்பணியில் புதிய கட்டடம், காலிமனை, அடிப்படையான பொருட்கள், புரவலர் மதிப்பு, உறுப்பினர் மதிப்பு என 97.5 லட்சம் ரூபாய் நன்கொடை வசூலித்து, நூலக வளர்ச்சிக்கு பங்களித்துள்ளதற்கு அரசு வழங்கிய விருது ஊக்கத்தை தருவதாக பெருமிதம் கொள்கிறார் ஷர்மிளா.
இதுவரை கடந்து வந்த 20 ஆண்டு நூலகப்பணியில் புதிய கட்டடம், காலிமனை, அடிப்படையான பொருட்கள், புரவலர் மதிப்பு, உறுப்பினர் மதிப்பு என 97.5 லட்சம் ரூபாய் நன்கொடை வசூலித்து, நுலக வளர்ச்சிக்கு பங்களித்துள்ளதற்கு அரசு வழங்கிய விருது ஊக்கத்தை தருவதாக பெருமிதம் கொள்கிறார் ஷர்மிளா.
நாற்பது வயதாகும் அவர், 20 ஆண்டுகளுக்கு முன்பு கிராமப்புற நூலகத்தில் பணியைத் துவங்கியது முதல், பாரதியார் நினைவு நூலகத்தில் மட்டும் 2 ஆயிரம் பேருடன், இதுவரை தான் பணியாற்றிய நூலகங்களில் 5 ஆயிரம் பேரை உறுப்பினர்களாகச் சேர்த்துள்ளார். மேலும் 168 புரவலர்களையும் சேர்த்துள்ளார் என இவரைப் பற்றி குறிப்பிடும்போது இப்பகுதி மக்கள் பெருமிதம் கொள்கின்றனர்.
அவரது முயற்சியால், இளைஞர்கள், குறிப்பாக பெண்கள் அதிக அளவில் இந்த நூலகத்தைப் பயன்படுத்தும் பாராட்டத்தக்க சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாக முன்னாள் நகராட்சி மன்ற உறுப்பினர் சந்திரன் தெரிவித்தார்.
கணினி, கைபேசிகள் மட்டுமன்றி, இளைய சமுதாயத்தின் கைகளில் புத்தகங்களும் அதிக அளவில் தவழ ஊக்குவிக்க வேண்டும் என்பதே தனது தளராத முயற்சிக்கு உந்து சக்தியாக இருக்கிறது என்கிறார் ஷர்மிளா.
“நான் விரும்பி ஏற்றுக்கொண்டது இந்தப் பணி. நூலகத்தை மேம்படுத்த அதிக வாசகர்கள் தேவை. அதற்கு அதிக உறுப்பினர்களை ஏற்படுத்தவும், அதிக புரவலர்களை ஏற்படுத்தி நிதியைப் பெருக்கவும் முயற்சி எடுத்தேன். அதற்கு சொந்தக் கட்டடம் தேவை என்பதற்காக காலி மனை வாங்கி கட்டடம் கட்டவும் பாடுபட்டேன்” என்றார் அவர்.
“பெண்களின் முன்னேற்றுத்துக்காகப் பாடுபட்டார் பாரதியார். அந்த வகையில், பெண்கள் தங்கள் பொது அறிவை வளர்த்துக் கொள்ள வேண்டும். அதிக விடயங்களைக் கற்றுக்கொள்ள வேண்டும். தினசரி நூலகத்துக்கு வந்து நாளிதழ் மற்றும் பருவ இதழ்களைப் படிக்க வேண்டும் என ஊக்குவித்தேன். பல போட்டித் தேர்வுகளில் பங்கேற்று பெண்கள் வெற்றி பெற்றிருக்கிறார்கள்” என்றார் ஷர்மிளா.
“கைபேசிகளால் பல அழிவுகளைச் சந்திக்கும் நிலையில், இளைய சமுதாயம் அதிகம் புத்தகங்களைப் படித்து வாழ்க்கையில் உயர வேண்டும். மன அழுத்தத்தைக் குறைப்பதற்கான ஒரே வழி புத்தகங்கள்தான். அதனால், எல்லோரும் நூலகத்துக்கு வர வேண்டும். அதிக அளவு புத்தகங்களைப் படிக்க வேண்டும்.
அதற்காக நான் தொடர்ந்து உழைத்துக் கொண்டே இருப்பேன்” என்று ஆர்வம் குறையாமல் சொல்கிறார் ஷர்மிளா.