கேரளாவில் போக்குவரத்து நெரிசலில் சிக்கியதால் மெட்ரோ ரெயிலில் சென்று மணமகன் திருமணம் செய்த சம்பவம் சமூக ஊடகங்களில் பெரும் பாராட்டை குவித்து வருகிறது.
கேரள மாநிலம் பாலக்காடு பகுதியை சேர்ந்தவர் ரஞ்சித். இவருக்கும் எர்ணாகுளம் பகுதியைச் சேர்ந்த தன்யா என்பவருக்கும் கடந்த 23 ஆம் திகதி திருமணம் நடந்தது.
இந்த திருமணம் திரைப்பட அனுபவம் போன்று திருப்பங்களுடன் திகில் நிறைந்ததாக இருந்தது என்று ரஞ்சித்தும், தன்யாவும் தங்களது பேஸ்புக் பக்கத்தில் கருத்து வெளியிட்டிருந்தனர்.
பாலக்காட்டில் இருந்து மணமகன் ரஞ்சித்தும், அவரது குடும்பத்தினரும் காலை 6 மணிக்கு எர்ணாகுளம் புறப்பட்டுள்ளனர். முகூர்த்த நேரத்திற்கு முன்பே சென்று விடலாம் என்றும் எண்ணி இருந்தனர்.
எர்ணாகுளத்திற்கு 30 கிலோ மீற்றர் தூரம் இருக்கும்போது இவர்கள் சென்ற வாகனங்கள் போக்குவரத்து நெரிசலில் சிக்கிக் கொண்டது. நீண்ட நேரமாக காத்து இருந்தும் போக்குவரத்து சீராகவில்லை.
இதனால் ரஞ்சித்தும், அவரது குடும்பத்தினரும் பதட்டம் அடைந்தனர். உரிய நேரத்திற்கு செல்ல முடியாதோ என்று கலங்கினர்.
அப்போது சிலர் மெட்ரோ ரெயிலில் சென்றால் முகூர்த்த நேரத்திற்கு சென்று விடலாம் என யோசனை தெரிவித்தனர்.
உடனே ரஞ்சித்தும், அவரது குடும்பத்தினரும் கார்களை விட்டு இறங்கி மெட்ரோ ரெயில் நிலையம் நோக்கி ஓட்டம் பிடித்தனர். அங்கு சென்றால், ஏற்கனவே அங்கு பலர் நீண்ட வரிசையில் டிக்கெட் எடுக்க காத்திருப்பதை கண்டனர்.
அவர்களிடம் நிலைமையை எடுத்து கூறி ரஞ்சித்தும், குடும்பத்தினரும் அவசரம் அவசரமாக டிக்கெட் எடுத்தனர்.
பின்னர் மெட்ரோ ரெயிலில் ஏறி எர்ணாகுளம் சென்றனர். திருமணம் முடிந்த பின்பு இச்சம்பவத்தை ‘ஒரு திருமணத்தை கொச்சி மெட்ரோ பாதுகாத்தது எப்படி?’ என்ற தலைப்பில் வீடியோவாக பதிவு செய்து பேஸ்புக்கில் வெளியிட்டனர்.
இந்த பதிவுக்கு தற்போது விருப்பங்கள் குவிந்த வண்ணம் உள்ளது. கடந்த யூன் மாதம் தான் கொச்சி மெட்ரோ ரெயில் போக்குவரத்து அதிகாரப்பூர்வமாக தொடங்கி வைக்கப்பட்டது.