2019ஆம் ஆண்டு நடைபெறவுள்ள உலகக்கிண்ணத் தொடரை எதிர்பார்த்துக் காத்துள்ளேன் என்று தெரிவித்துள்ளார் இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளர் மலிங்க.
இந்தியாவுக்கு எதிரான நடைபெற்ற தொடரில் புறக்கணிக்கப்பட்டிருந்த மலிங்க தற்போது சிம்பாப்வே மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு எதிரான முத்தரப்புத் தொடரிலும் களமிறங்குவது சந்தேகம் என்று கருதப்படுகிறது. இந்த நிலையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
‘இலங்கை அணி என்னை தேர்வு செய்தால் நான் விளையாடத் தயாராக இருக்கிறேன். ஆனால், அவர்கள் என்னை ஏன் தெரிவு செய்யவில்லை என்று தெரியவில்லை. காரணத்தை அறிய நான் இன்னும் காத்திருக்கிறேன்.
வாய்ப்புக் கிடைத்தால் 2019ஆம் ஆண்டு உலகக்கிண்ணத்தில் விளையாடுவேன். அவ்வாறு விளையாடும் பட்சத்தில் அதுவே கடைசித் தொடராக அமையும்’ என்று மலிங்க மேலும் தெரிவித்தார்.