நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவது உறுதி என்று இன்றைய தினம் அறிவித்திருக்கிறார். அவரின் இந்த அறிவிப்பைத் தொடர்ந்து பல்வேறு தரப்பிலிருந்தும் பல விமர்சனங்கள் வந்து கொண்டிருக்கின்றன.
இன்று முழுவதும் தமிழக ஊடகங்களின் விவாதப் பொருளாக ரஜினிகாந்தின் அரசியல் குறித்து தான் பேசப்பட்டும், விவாதிக்கப்பட்டும் வருகின்றன்.
அதுமாத்திரமின்றி, தேசிய அளவிலும் ரஜினியின் இன்றைய அறிவிப்பு குறித்து விவாதிக்கப்பட்டுவருவதனை அவதானிக்க முடிகிறது.
இதுவொருபுறமிருக்க, ரஜினியின் இந்த அறிவிப்பை அறிந்த நடிகர் கமல் ஹாசன் தனது கீச்சகத்தில் வாழ்த்துக்கள் தெரிவித்து அரசியலுக்கு வரவேற்று இருக்கிறார்.
திமுக செயல் தலைவர் மு.க ஸ்டாலின் ரஜினியின் வருகை எமக்கு சாதகமோ, பாதகமோ எது என்றாலும் அவரின் அரசியல் வருகைக்கு வரவேற்பு குறித்து மகிழ்ச்சி வெளியிட்டிருக்கிறார்.
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் வரவேற்பளிப்பதாக குறிப்பிட்டிருக்கிறார். பாஜகவின் தமிழிசை சௌந்தரராஜன் ரஜினிக்கு வாழ்த்து தெரிவித்து வரவேற்றிருக்கும் நிலையில் சுப்ரமணியன் சுவாமி எதிர்த்திருக்கிறார்.
நாம் தமிழர் கட்சி ரஜினியை முழு மூச்சோடு எதிர்க்கப் போவதாக அறிவித்திருக்கிறது. சீமான் கடும் சீற்றம் கொண்டு பேசியிருக்கிறார்.
எதுவாயினும், இன்றைய ரஜினிகாந்தின் அறிவிப்பு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி விமர்சனங்களை பறக்கவிட்டுக் கொண்டிருக்கிறது.
சமூக வலைத்தளங்களில் நேர் எதிர்க் கருத்துக்கள் நிறையவே உண்டு. நீண்ட காலமாக அரசியலுக்கு வருவாரா? மாட்டாரா என்று ஏமாற்றியவரின் இந்த அறிவிப்பு அவரின் ரசிகர்களை உற்சாகத்தில் மூழ்கடித்திருக்கிறது. இன்னும் சிலர் ரஜினிகாந்த பாஜகவின் கைக்கூலியாக செயல்படுவார் என்று விமர்சிக்கிறார்கள்.
ஆனால், இவையனைத்தும் கடந்து, உலக நாடுகளில் உள்ள ஊடகங்களும் ரஜினி காந்தின் அரசியல் பிரவேசம் குறித்த அறிவிப்பு முக்கியமான பேசுபொருளாக மாறியிருக்கின்றன.
குறிப்பாக, இலங்கை, ஜப்பான், சீனா நாடுகளில் இருக்கும் ஊடகங்கள் இந்தச் செய்தியை முன்னுரிமை கொடுத்து வெளியிட்டிருக்கின்றன. புலம்பெயர் ஊடகங்களும் ரஜினியின் அறிவிப்பை முக்கிய செய்தியாக்கியிருக்கின்றன.
2017ம் ஆண்டின் இறுதி நாளும், 2018ம் ஆண்டின் தொடக்க நாளும் ரஜினிகாந்தின் அரசியல் குறித்து செய்தியாக்கியிருக்கின்றன.
இந்த ஆண்டில் அவரின் அரசியல் காய்நகர்த்தல்கள் எப்படி இருக்கும் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.