கண்டி மாவட்டத்தின், தெரணியகல நகரில் சட்டவிரோதமாக இயங்கிவந்த வானொலிச் சேவையொன்று, இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவினரால் இன்று(01.01.2018) சுற்றிவளைக்கப்பட்டது.
இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவினால் வழங்கப்படும் அனுமதி பத்திரமின்றி, இலங்கை வானொலி சேவை அலைக்கற்றை சட்டத்திற்கு முரணாக, இந்த வானொலி சேவை இயங்கியுள்ளமை தெரியவந்துள்ளது.
இதனையடுத்து, நவீன சோதனை உபகரணங்களைப் பயன்படுத்தி, இந்த வானொலி சேவை நிறுவனத்தை ஆணைக்குழுவினர் இன்று சுற்றிவளைத்து,வானொலி சேவையை முன்னெடுத்துச் செல்வதற்குப் பயன்படுத்தப்பட்ட தொழிநுட்ப உபகரணங்கள் உள்ளிட்ட அனைத்துப் பொருட்களையும் கைப்பற்றியுள்ளனர்.
தெரணியகல பகுதியில் சட்டவிரோத வானொலி சேவையை முன்னெடுத்துச் சென்ற நான்கு பேர், குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரின் உதவியுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.