இன்றைய புத்தாண்டு நாளை ஆங்கிலப் புத்தாண்டு என்று சொல்லும் வழக்கம் இன்று நம்மிடையே பரவலாக காணப்படுகின்றது. இது முறையான ஒரு கையாழுகைதானா? இது ஏன் இவ்வாறு சொல்லப்படுகிறது என்பதை நாம் சற்று விரிவாகப் பார்க்கவேண்டும்.
உண்மையில் ஒவ்வோர் கிரெகோரியன் ஆண்டின் தொடக்க மாதமான சனவரி முதலாம் நாள் உலகத்தின் பல நாடுகளால் ஏற்றுக்கொள்ளப்பட்ட புது வருட நாளாகும். வேறுபட்ட மொழிப்பாங்குகளைக் கொண்ட ஐரோப்பிய நாடுகளும், வடக்கு மற்றும் லத்தீன் அமெரிக்க நாடுகளும் பெரும்பாலான ஆபிரிக்க ஆசிய நாடுகளும் இந்த நாளின்படியே வருடத்தின் தொடக்க நாளை அங்கீகரிக்கின்றன.
சனவரி முதலாம் நாள் என்பது கிரெகோரியன் நாட்காட்டிக் கணிப்பின்படி பல நாடுகளால் ஏற்றுக்கொள்ளப்பட்ட வருடத் தொடக்க நாளாகும். அந்த வகையில் இன்றைய நாளானது கிரெகோரியன் நாட்காட்டிப்படி நாட்டு நிர்வாகம் உள்ளிட்ட அன்றாடக் கருமங்கள்வரை ஆற்றிவரும் சகல நாடுகளுக்கும் புதிய வருடம் தான்.
ஆனால் கிரெகோரியன் நாட்காட்டியின்படி வருகின்ற இந்த புதிய வருடத்தின் புதிய நாளினை எதற்காக ஆங்கிலப் புத்தாண்டு என்று கூறவேண்டும் என்பது கேளிவிக்குரிய ஒன்றாகும்.
உண்மையில் கிரெகோரியன் ஆண்டானது ஆங்கிலத்தை தாய்மொழியாகப் பேசும் நாடுகள் அங்கீகரிப்பதற்கு முன்பே தோற்றம்பெற்ற ஒன்றாகும். ஐக்கிய நாடுகள் சபையால் அங்கீகரிக்கப்பட்ட இது கிறிஸ்து பிறப்பிற்கு முன் 45ஆம் ஆண்டளவில் உரோமாபுரியின் மன்னரான பேரரசர் ஜூலியஸ் சீசரால் உருவாக்கப்பட்ட ‘ஜூலியன்’ நாட்காட்டியின் (Julian calendar) ஒரு திருத்தப்பட்ட வடிவமாகும்.
பின்னர், பதினாறாம் நூற்றாண்டளவில் அப்போதைய திருத்தந்தையான பதின்மூன்றாம் கிரகோரியின் ஆணைப்படி துவக்கி வைக்கப்பட்டதால் “கிரகோரியன் நாட்காட்டி” என்னும் பெயர் பெற்றது.
கிரெகோரியன் ஆண்டுக் கணிப்பினை உருவாக்கியவர்கள் உரோமாபுரியினராவர். அது உரோமானிய மொழிகளாய் இருந்த லத்தீன், இத்தாலியன் போன்றவற்றுடன் மிக நெருக்கமான தொடர்பினைக் கொண்டது. லத்தீன் மொழியில் உருவாக்கப்பட்ட சனவரி தொடக்கம் டிசெம்பர் வரையிலான மாதங்களைக் கொண்டது.
ஆனால் ஆங்கிலம் எப்போது வந்தது? ஆங்கிலத்துக்கும் உரோமானிய மொழிகளுக்கும் உள்ள தொடர்பு என்ன?
ஆங்கிலம் வட மேற்கு ஜேர்மனிய இனக்குழுவான ஏங்கல் எனும் பெயரில் அமைந்த பல்பிறப்பாக்க மொழியாகும். குறிப்பாக இன்றைய வடக்கு ஜேர்மனியின் ஜூட்லாந்திலுள்ள ஏங்கல் எனும் இடத்தைச் சேர்ந்தவர்களே ஏங்கல் மக்கள். பிரித்தானிய நாட்டில் குடியேறிய இவர்கள் அங்கே சுதேச மொழி பேசிய மக்களுடன் சேர்ந்து இங்கிலிஸ் மொழியாக பேசினர். இங்கிலாந்து நாட்டின் பெயர்கூட (England) (ஏங்கல் லான்ட்) ஏங்கல் மக்களின் நிலம் என்ற பொருளினைத் தருவதாக சொல்கின்றனர். இதேவேளை உரோமானிய பேரரசு காலத்தில் பெரும்பாலான ஐரோப்பிய நாடுகள் இலத்தீன் மொழியின் ஆதிக்கத்துக்குட்பட்டிருந்ததனால் இலத்தீன் மொழியின் செல்வாக்கும் ஆங்கிலத்தில் காணப்படுவதாக வாதிடுவோரும் உள்ளனர்.
எது எவ்வாறாயினும் கிரெகோரியன் நாட்காட்டியானது ஆங்கிலத்தின் நேரடியான செல்வாக்கிற்கு உட்பட்டதென்று எவ்வகையிலும் சொல்லமுடியாது. அதைவிட ஆங்கிலேயர்களின் அல்லது ஆங்கில இனக்குழுக்களின் செல்வாக்கிற்கு உட்பட்டதென்றும் சொல்லவே முடியாது. அது உரோமானிய மொழிகளுக்கும் உரோமானிய பின்புலத்தைக்கொண்ட மக்களுக்குமே உரித்தானதாகும்.
கிரெகோரியன் நாட்காட்டியை ஏற்றுக்கொண்டு அதன் தொடக்க நாளினை வருடத்தின் முதல் நாளாக அங்கீகரித்த நாடுகள் என்று சொன்னால் இன்றைய இத்தாலி, ஸ்பெயின், போர்த்துக்கல், பிரான்ஸ், போலந்து ஆகியனவே. இவை பதினாறாம் நூற்றாண்டில், அதாவது 1582இல் இந்த நாட்காட்டியை ஏற்றுக்கொண்டு தமது நாட்டு நிர்வாக வழக்கங்களை இதன்படியே ஒழுகின.
ஆனால் ஆங்கில நாடுகள் என்று சொல்லக்கூடிய பிரித்தானியாவும் வட அமெரிக்காவும் இரண்டு நூற்றாண்டுகள் கழித்தே, அதாவது பதினெட்டாம் நூற்றாண்டின் 1752 ஆண்டளவிலேயே கிரெகோரியன் நாட்காட்டியை ஏற்றுக்கொண்டு அதன் தொடக்க நாளை புத்தாண்டாக கொண்டாடத் தொடங்கின.
இது இவ்வாறிருக்கையில் உரோமானிய பேரரசு, பைசாந்திய பேரரசு, ஓட்டொமன் பேரரசு ஆகிய பேரரசுகளின் தாக்கத்திலிருந்த பாரம்பரிய கிரேக்கம் அவைகளிலிருந்து விடுதலை பெறுவதற்காய் போராடி பின்னர் சுதந்திரப் பிரகடனம் செய்தபோதும் மேற்படி பேரரசுகளின் கலாசாரத்திலமைந்த பெரும்பாலானவற்றை ஏற்றுக்கொள்ளவில்லை என்றுதான் சொல்லமுடியும். கிரேக்கர்கள் கிரேக்கர்களாகவே வாழவிரும்புவர்கள். உரோமானிய பேரரசின் செல்வாக்குப் பெற்றிருந்த கிரெகோரியன் நாட்காட்டியை பல நாடுகள் ஏற்றுக்கொண்டபோதும் கிரேக்கம் பல நூற்றாண்டுகளாக ஏற்றுக்கொள்ளவில்லை. கடந்த இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பப் பகுதியில்தான் கிரேக்கம் கிரெகோரியன் நாட்காட்டியை ஏற்றுக்கொண்டது.
இதனிடையே பிரித்தானிய காலணித்துவம் பெற்றிருந்த நாடுகள் பிரித்தானிய ஆக்கிரமிப்பின் போது கிரெகோரியனை ஏற்றுக்கொண்டாலும் போர்த்துக்கேயர் ஒல்லாந்தர் ஆட்சியிலிருந்த இலங்கையில் அவர்களின் நிர்வாகத்தின்கீழிருந்த பகுதிகள் கிரெகோரியனைப் பின்பற்றத் தள்ளப்பட்டன. குறிப்பாக இலங்கையின் கரையோரப் பகுதி மக்களிடையே கத்தோலிக்க, புரொட்டஸ்தாந்து மதங்களுடன் கிரெகோரியன் திணிக்கப்பட்டது. ஆங்கிலோ ஆளுநர் நிர்வாக காலத்தில் அது முழு நாட்டுக்கும் பொதுவாக ஏற்றுக்கொள்ளப்பட்டு இன்றுவரை பின்பற்றப்பட்டுவருகிறது.
இது இவ்வாறிருந்தாலும் இலங்கையின் இனக் குழுமங்களிடையே புதுவருடம் தொடர்பான வேறுபட்ட நாட்கள் கடைப்பிடிக்கப்படுகின்றன. ஏப்ரல் மாதமளவில் இலங்கை சிங்களவர்களாலும் தமிழர்களாலும் புதுவருடம் கடைப்பிடிக்கப்பட்டாலும் தமிழ் தேசிய அலையில் சனவரி மாத நடுப்பகுதி, அதாவது தை மாத முதலாம் நாள் புதுவருடமாகக் கூறப்படுகிறது.
இவ்வாறான நிலையில் ஆங்கில மொழியைத் தாய்மொழியாகப் பேசும் மக்களால் ஆகப்பிந்திய காலத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு இலத்தீன் நாட்காட்டியான கிரெகோரியன் ஆண்டின் தொடக்க நாளை ஆங்கிலப் புத்தாண்டு என்று எவ்வாறு சொல்லமுடியும்? சிந்தனை நீள்கின்றதல்லவா? தமிழ் தேசியப் பார்வையில் நாம் எதிர்ப்பது என்ன? இந்த கிரெகோரியன் நாட்காட்டியையா? அல்லது ஆங்கிலத்தையா? அல்லது அந்த நாட்காட்டிப் புழக்கத்தைக் கொண்டுவந்த ஒரு தனிப்பட்ட மதத்தையா?
எதை எதிர்த்தாலும் இந்த இடத்தில் அந்த எதிர்ப்பலை என்பது தவறான முன்மாதிரியாகும். எமது அன்றாட கருமங்களுக்காக பின்பற்றும் ஒரு நாட்காட்டியின் தொடக்க நாளினை தொடர்பற்ற ஒரு மொழியுடன் கோர்த்து திசைதிருப்பிப் பார்ப்பது தவறான வாதம். சனவரி ஒன்று, அதாவது இன்றைய புத்தாண்டு சர்வதேசப் புத்தாண்டாக அழைப்பதுவே முறையானது. இது அநேக நாடுகளாலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு நிர்வாக நாட்காட்டியின் பின்புலத்தைக்கொண்டதாகையால் இவ்வாறு அழைப்பதே பொருத்தமானது.