ஒரு பூர்வகுடி இனம் அழிந்த துயரக் கதை இது.
பசிபிக் பெருங்கடலில் தனித்து காணப்படும் தீவு அது. தனித்து என்றால்… மிகவும் தனித்து. அதைச் சுற்றி பல ஆயிரம் கிலோமீட்டர்களுக்கு எந்த நிலப்பரப்பையும், வேறு எதையும்கூட பார்த்திட முடியாது. நீலக் கடலின் நடுவே, பச்சை புள்ளியாய் இருக்கும் அந்தத் தீவு.
அந்தத் தீவின் வடக்கு மூலையில் “ராணா ரராக்கு” (Rana Raraku) எனும் அந்த எரிமலை எரிந்துகொண்டிருக்கிறது. கிட்டத்தட்ட முடியும் தருவாயில் இருந்தது. புகை மூட்டம் எங்கும். புகை இன்னும் முழுமையாக விலகாத நிலையில், சிலர் அந்த இடத்தை நோக்கிப் போய்க் கொண்டிருக்கிறார்கள்.
அவர்களின் உடல் மிகவும் வலிமையானதாக இருக்கிறது. அவர்கள் அந்த எரிமலையின் அருகே சென்று, சில கூடைகளில் சாம்பல்களை சேகரிக்கிறார்கள். அதை சுமந்துகொண்டு மீண்டும் மலையிலிருந்து இறங்குகிறார்கள். கால்களில் செருப்பு இருப்பதாகத் தெரியவில்லை.
அந்தக் காட்டில், மலையில் அவர்கள் வெறுங்கால்களோடு நடப்பது பெரும் ஆச்சர்யத்தைக் கொடுக்கிறது. சில மணி நேர நடைக்குப் பிறகு, ஒரு இடத்துக்கு வந்து சேர்கிறார்கள். அங்கு ஏற்கெனவே குழுமியிருக்கும், அந்தக் கூட்டம் ஏதேதோ கலவைகளைக் கலந்து சில வேலைகளைச் செய்துகொண்டிருக்கிறார்கள்.
உற்றுப்பார்த்தால், அவர்கள் சிலைகளை வடித்துக் கொண்டிருப்பது தெரிகிறது. அங்கிருந்து சற்று நகர்ந்து போனால், பலர் அந்த மண்ணில் விவசாயம் செய்துகொண்டிருக்கிறார்கள். சிலர் கடலில் மீன் பிடித்துக்கொண்டிருக்கிறார்கள்.
அந்த மொழி நமக்குப் பரிச்சயமானது அல்ல.
“எத்தனை மோவாய் (Moai) முடிந்தது?”
“கடைசி மோவாய் செய்துகொண்டிருக்கிறோம். கணக்குப் பார்த்தால், எப்படியும் 800க்கு மேல் இருக்கும்.” என்று அவர்கள் பேசிக் கொண்டிருந்தார்கள்.
அவர்கள் வாழ்க்கை அத்தனை மகிழ்ச்சியாக இருந்தது. கடலும், காடும், மலையும், எரிமலையும், சிற்பக்கலையும், மீன் உணவும் என அத்தனை ரம்மியமாக ஒரு வாழ்வை வாழ்ந்துகொண்டிருந்தார்கள்.
இந்தத் தீவை “ஈஸ்டர் தீவு” என்று இன்று அழைக்கிறார்கள். இந்தக் கதைகள் நடப்பது 13-லிருந்து 15-ம் நூற்றாண்டு காலகட்டமாக இருக்கலாம். ஐரோப்பியர்களின் கால்கள் இந்தத் தீவை கண்டடையும் வரை நிம்மதியாகத்தான் இருந்தார்கள்.
முதல் ஐரோப்பியன் அந்தத் தீவில் கால்வைத்த அந்த நொடி முதல் இவர்களின் அழிவு தொடங்கியது. அதுவரை அதிக வேற்று மனித இடையூறு இல்லாமல், இயற்கையை மட்டுமே நாடி வாழ்ந்து வந்த அந்த இனம் சூறையாடப்பட்டது.
பல நாடுகளுக்கு, அவர்கள் அடிமைகளாக இழுத்துச் செல்லப்பட்டனர். இது அந்த இனத்தின் எண்ணிக்கையைப் பாதியாகக் குறைத்தது. மிச்சமிருந்த மக்களையும் அந்த எலிகள் கடித்துக் குதற ஆரம்பித்தன. ஆம்…நிஜமான எலிகள் தான்.
பல வெளிநாட்டவர்கள் வரத் தொடங்கிய நிலையில், அவர்களின் கப்பல்களில் “பாலிநேசியன் எலி” (Polynesian rats) எனப்படும் அந்த எலிகள் தீவை ஆக்கிரமிக்கத் தொடங்கின. அது பலவித நோய்களை அவர்களுக்கு ஏற்படுத்தின. கொந்தளிக்கும் கடலிலும், கொதிக்கும் எரிமலைகளிலும் துள்ளி விளையாடிய அந்த இனம், பலவீனமடையத் தொடங்கியது.
வரலாற்றை ஆராய்ந்துப் பார்க்கும்போது, கிடைத்த முதல் தகவல்படி இந்தத் தீவில் 17,500 வரை வாழ்ந்துள்ளார்கள் என்பது நிரூபணம் ஆகிறது. 1700-களில் தொடக்கத்தில் இந்தத் தீவில் 3,000 பேர் வரை இருந்ததாகச் சொல்லப்படுகிறது. 1877-ன் கணக்குப்படி 111 பேர் இருந்திருக்கிறார்கள்.
இந்தத் தீவின் பூர்வகுடி இனத்தின் பெயர் “ரபா நுய்” (Rapa Nui). இன்று இந்த ஈஸ்டர் தீவு உலகின் சில ஆச்சர்யங்களில் ஒன்று. குறிப்பாக, இங்கிருக்கும் “மோவாய்” என்று சொல்லப்படும் அந்த சிலைகள்.
1. ஈஸ்டர் தீவு சிலி நாட்டின் ஆளுகைக்குள் வருகிறது. சிலியின் தலைநகரான சான்டியாகோவுக்கும் ஈஸ்டர் தீவுக்கும் 2,300 மைல்கள் தூரம். 5 மணி நேர விமானப் பயணம்.
2. இந்தத் தீவில் ஒரே ஒரு சிலை மட்டும் சற்று வித்தியாசமாக இருக்கும். அது முட்டியிட்டபடி உட்கார்ந்திருக்கும். அதன் முகம் சற்றே மேலே பார்த்தவாறு, குறுந்தாடியோடு இருக்கும். இது அந்தத் தீவின் “Red Puna Pua” எனும் கல்லைக் கொண்டு செதுக்கப்பட்டுள்ளது.
3. “ரபா நுயி” இனத்தின் வழிபாட்டுத் தலம் ஒன்று இந்தத் தீவிலிருக்கிறது. அதற்கு “அஹு அகிவி” (Ahu Akivi) என்று பெயர்.
அந்த ஒரேயொரு வித்தியாச சிலை…
நீளமான மூக்கு, அகலமான கன்னங்கள், அடர்த்தியான புருவம், ஆழமான கண்கள், செவ்வக வடிவிலான காதுகள், அந்த நாசி துவாரம் சற்றே வளைவாக காணப்பட்டது.
அதாவது ஒரு மீன் தூண்டிலைப் போல. இப்படித்தான் அந்த மோவாய்கள் இருக்கும். இதுபோன்ற சிலைகளை உலகின் வேறு எந்தப் பகுதியிலுமே பார்க்க முடியாது. 101 சதுரகிமீ பரப்பளவில் இருக்கும் ஈஸ்டர் தீவில் மொத்தம் 887 மோவாய்கள் இருக்கின்றன. இதில் பாதிக்கும் மேலான சிலைகள் கடலைப் பார்த்தும், மிச்சம் தீவைப் பார்த்த மாதிரியுமாக இருக்கின்றன.
இந்தத் தீவை ஆராய்ந்த ஆராய்ச்சியாளர்களுக்குப் பல ஆச்சர்யங்கள் இருந்தன. முதலில் இந்தச் சிலைகளை யார் செய்தார்கள் என்ற கேள்வி வந்தது. ஒருவேளை ஏலியன்களின் வேலையாக இருக்குமோ என்ற சந்தேகம் ஏற்பட்டது. பின்னர், அந்த சிலைகளை ஆராய்ந்தபோது அது அந்தத் தீவிலிருக்கும் பொருள்களைக் கொண்டே உருவாக்கப்பட்டிருக்கிறது என்பது தெரிந்தது.
குறிப்பாக 834 சிலைகள் “டஃப்” (Tuff) என்று சொல்லப்படும் எரிமலை சாம்பலைக் கொண்டு உருவாக்கப்பட்ட ஒரு மூலப்பொருளைக் கொண்டே உருவாக்கப்பட்டிருக்கிறது. எனவே, இதைக் கண்டிப்பாக ஏலியன்கள் செய்திருக்க முடியாது என்பது நிரூபணமாகிறது.
அடுத்ததாக இந்தப் பெரிய சிலைகளை எப்படி தீவு முழுக்க பல இடங்களுக்கு நகர்த்தியிருப்பார்கள் என்ற கேள்வி எழுந்தது. 1980-களின் ஆரம்பத்தில் சில அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள் உண்மையிலேயே அதே போன்ற சிலைகளைக் கொண்டு, நவீன தொழில்நுட்பங்கள் ஏதுமில்லாமல் அந்தக் காலகட்டத்திலிருந்த பொருள்களைக் கொண்டே அதை நகர்த்த முடியுமா என்று முயற்சி செய்து பார்த்தார்கள். ஆனால், அது முடியவில்லை. பின்னர், சில ஆராய்ச்சியாளர்கள் அதை சாத்தியப்படுத்திக் காட்டினார்கள்.
இப்படியாகத் தான் அவர்கள் சிலைகளை நகர்த்தியிருக்கக் கூடும்…
சிலைக்கு வலப்பக்கமும், இடப்பக்கமும் கயிறைக் கட்டி அசைத்து, அசைத்து இழுத்தார்கள். அதே சமயம், அது நிலையாக நிற்க வேண்டுமென்பதற்காக பின் பக்கமும் கயிற்றை கட்டிப் பிடித்துக்கொண்டனர்.
இப்படியாக முயற்சி செய்து பார்த்தபோது, சிலையை நகர்த்த முடிந்தது. இப்படியாக அந்தத் தீவு கொடுத்த பல ஆச்சர்யங்களுக்கு, பல வகைகளிலும் ஆராய்ச்சியாளர்கள் விடைகளைக் கண்டுபிடித்தனர். கண்டுபிடித்துக் கொண்டிருக்கின்றனர்.