வடமாகாண முதலமைச்சர் கூட்டமைப்பிலிருந்து வெளியேற காரணம்!

வடமாகாண முதலமைச்சர் எங்களுடன் இணைந்துகொள்ள முடியும் எனவும், அதற்கான கதவு இன்னுமும் திறந்தே இருக்கின்றது எனவும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி தெரிவித்துள்ளது.

அத்துடன், தமிழ் தேசியக் கூட்டமைப்பு தனது கொள்கையிலிருந்து முழுமையாக விலகிச் சென்ற காரணத்தினாலேயே 2010ஆம் ஆண்டு கூட்டமைப்பிலிருந்து வெளியேற நேர்ந்ததாகவும் அந்த கட்சியை சேர்ந்த க.சுகாஸ் தெரிவித்துள்ளார்.

downloadதமிழ்த் தேசிய மக்கள் பேரவையின் வேட்பாளர்கள் அறிமுக நிகழ்வு வட்டுக்கோட்டையிலுள்ள பேரவையின் அலுவலகத்தில் இடம்பெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

தொடர்ந்தும் பேசிய அவர், “கூட்டமைப்பு தொடர்பில் தமிழ் மக்கள் விழிப்படைய வேண்டும். கூட்டமைப்பிற்கு இணையாக நாம் பயணிக்க வேண்டியிருக்கின்றது. இதற்காக சில குழுக்களை இணைத்துக்கொண்டு செயற்படுகின்றோம்.

வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தேசியப் பாதையில் பயணிக்கின்றார். அவர் அங்கம் வகிக்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு தடம் மாறி செல்கின்றது என அண்மையிலும் கூட தெரிவித்திருந்தார்.

அத்துடன், தமிழ் மக்கள் பேரவையின் கொள்கைகளை மதிக்கின்றேன் எனவும் வடக்கு முதலமைச்சர் கூறியுள்ளார். நாமும் தமிழ் மக்கள் பேரவையின் கொள்கையை மதிக்கின்றோம்.

இவ்வாறான நிலையில், வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனை எம்முடன் இணைந்து செயற்பட வேண்டும் என்று மீண்டும் அழைக்கின்றோம்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.