பாகிஸ்தானுக்கு 33 பில்லியன் டாலர்களை வாரி வழங்கிய அமெரிக்க தலைவர்களை பாகிஸ்தான் முட்டாள்களாக நினைத்து விட்டது என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஆவேசமாக குறிப்பிட்டுள்ளார்.
தீவிரவாத ஒழிப்பு மற்றும் நாட்டின் உள்கட்டமைப்பு என்ற பெயரில் அமெரிக்காவிடம் இருந்து பாகிஸ்தான் ஏராளமான நிதி உதவிகளை பெற்று பயனடைந்து வந்துள்ளது.
ஆனால், தீவிரவாதிகளுக்கு எதிரான ஆக்கப்பூர்வமான நடவடிக்கை எதையும் பாகிஸ்தான் அரசு எடுக்கவில்லை என சமீபகாலமாக அமெரிக்க அரசு குற்றம்சாட்டி வருகிறது. பாகிஸ்தானுக்கு அளிக்கப்பட இருந்த சில நிதியுதவிகளும் சமீபத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், கடந்த 15 ஆண்டுகளில் பாகிஸ்தானுக்கு 33 பில்லியன் டாலர்களை வாரி வழங்கிய அமெரிக்க தலைவர்களை பாகிஸ்தான் முட்டாள்களாக நினைத்து விட்டது என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஆவேசமாக குறிப்பிட்டுள்ளார்.
இந்த ஆண்டில் முதன்முறையாக டுவிட்டர் பக்கத்தில் இன்று டிரம்ப் வெளியிட்டுள்ள முதல் பதிவில் தனது கருத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
’கடந்த 15 ஆண்டுகளாக பாகிஸ்தானுக்கு அமெரிக்கா முட்டாள்தனமாக 33 பில்லியன் டாலர்களுக்கு மேல் வழங்கியுள்ளது. ஆனால், நமது தலைவர்களை முட்டாள்களாக நினைக்கும் பாகிஸ்தான் பொய், வஞ்சகம் ஆகியவற்றை தவிர நமக்கு வேறு எதையும் அளித்ததில்லை.
ஆப்கானிஸ்தான் மண்ணில் நாம் வேட்டையாடிவரும் தீவிரவாதிகளுக்கு பாகிஸ்தான் அடைக்கலமும் அளித்து வருகிறது’ என அவர் தெரிவித்துள்ளார்.