இறந்த பெண்ணின் உடலுக்கு பதிலாக வேறொரு பெண்ணின் உடலை கொடுத்த ஊழியர்கள்!!

மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் விபத்தில் இறந்த பெண்ணின் சடலத்தை, பிணவறை ஊழியர்கள் மாற்றிக் கொடுத்தது மயானத்துக்கு சென்ற பின்னர் தெரியவந்ததால், சடலம் மீண்டும் பிணவறைக்கு கொண்டு வரப்பட்ட சம்பவம் திங்கள்கிழமை பரபரப்பை ஏற்படுத்தியது.

மதுரை திருமோகூர் ஊராட்சி புதுத்தாமரைப்பட்டி மங்களபுரத்தைச் சேர்ந்தவர் அன்னலட்சுமி (55). இவர், அப்பகுதியில் வீட்டு வேலை பார்த்து வந்தார்.

இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை இரவு புதுத்தாமரைப்பட்டி பகுதியில் அன்னலட்சுமி சாலையைக் கடக்க முயன்றபோது, அதிக வேகத்தில் வந்த இரு சக்கர வாகனம் அவர் மீது மோதியது.

இதில் பலத்த காயமடைந்த அன்னலட்சுமி, மதுரை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.

அதையடுத்து, அவரது சடலம் பிணவறைக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு, திங்கள்கிழமை பிற்பகலில் அவரது பிரேதம் பரிசோதனை செய்யப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

சடலத்தை வாங்கியவர்கள் முகம் வித்தியாசமாக இருப்பதைக் கண்டு பிணவறை ஊழியர்களிடம் தெரிவித்தபோது, அவர்கள் இதுதான் அன்னலட்சுமியின் சடலம் என்று கூறி ஒப்படைத்துள்ளனர்.

பின்னர், அன்னலட்சுமியின் சடலம் வாகனத்தின் மூலம் எடுத்துச் செல்லப்பட்டு, புதுத்தாமரைப்பட்டி மயானத்துக்கு அருகே வைக்கப்பட்டு இறுதிச் சடங்குகள் முடிந்ததும் மயானத்துக்கு கொண்டு சென்றுள்ளனர்.

இதனிடையே, சடலத்தின் மீது சந்தேகம் ஏற்பட்டதால் அன்னலட்சுமி இறப்பு வழக்கை விசாரித்த ஒத்தக்கடை காவல் நிலைய காவலர், பிணவறையில் இருந்த இதர சடலங்களின் விவரக் குறிப்பேட்டை பார்த்துள்ளார்.

அப்போது, அன்னலட்சுமியின் சடலத்துக்கு பதிலாக எம்.சத்திரப்பட்டி தேத்தாம்பட்டியில் குடும்பத் தகராறில் தீக்குளித்து தற்கொலை செய்துகொண்ட ராமர் மனைவி கற்பகவள்ளி (30) என்ற பெண்ணின் சடலத்தை ஊழியர்கள் மாற்றிக் கொடுத்தது தெரியவந்துள்ளது.

உடனே, காவலர் அன்னலட்சுமியின் உறவினர்களை தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்துள்ளார். அதன்பின்னர், மயான வாயிலில் வைக்கப்பட்டிருந்த சடலம் மீண்டும் அரசு மருத்துவமனை பிணவறைக்கு கொண்டு வரப்பட்டது.

அங்கு, சடலத்தை இறக்கிய ஊழியர்கள், அன்னலட்சுமியின் சடலத்தை ஏற்றி அனுப்பி உள்ளனர்.

இது தொடர்பாக அன்னலட்சுமியின் சடலத்தை பெற்றுச்சென்ற ராஜா என்பவர் கூறியது: அன்னலட்சுமி எனது வீடு உள்ளிட்ட பலரின் வீடுகளில் வேலை பார்த்து வந்ததால், அவரது சடலத்தை வாங்குவதற்காக அரசு மருத்துவமனைக்கு வந்தோம்.

பிணவறை ஊழியர்கள் என்னிடம் ரூ.1,450 பெற்றுக்கொண்டனர். அங்கிருந்த காவலாளியும் ரூ. 200 பெற்றுக்கொண்டார்.

அதன்பின்னர், சடலத்தை பார்க்கச் சென்றபோது, அங்கு ரூ.400 கேட்டதால் நாங்கள் தர மறுத்துவிட்டோம். இதனால், எங்களை சடலத்தை பார்க்க விடவில்லை.

பிரேதப் பரிசோதனைக்குப் பின் சடலத்தை அடையாளம் பார்க்க விடாமல், ஊழியர்கள் ஒரு சடலத்தை காண்பித்து அதுதான் அன்னலட்சுமியின் சடலம் எடுத்துச் செல்லுங்கள் எனக் கூறினர்.

ஆனால், சடலத்தின் முகம் வித்தியாசமாக இருந்ததால், அதை ஊழியர்களிடம் கூறினோம். ஆனால், அவர்கள் அதை ஏற்றுக்கொள்ள மறுத்து எங்களிடம் கேள்வி கேட்கக் கூடாது என்று தகராறில் ஈடுபட்டனர்.

இதனால் சந்தேகத்துடன்தான் சடலத்தை எடுத்துச் சென்றோம். ஆனால், எங்களுடன் வந்த காவலர் சந்தேகத்தின்பேரில் விசாரித்ததால், சடலம் மாறியது தெரியவந்தது. அவர் தகவல் தெரிவித்ததால்தான் மீண்டும் சடலத்தை மருத்துவமனைக்கு கொண்டு வந்தோம்.

சாவில் கூட பணம் சம்பாதிக்கும் இதுபோன்ற ஊழியர்களால் ஏழை மக்கள் கடுமையாகப் பாதிக்கப்படுகின்றனர். சடலத்தை வாங்குவதற்கு ரூ. 2 ஆயிரம் வரை ஊழியர்களுக்கு தர வேண்டியுள்ளது. பிணவறை வாயிலில் அனைத்தும் இலவசம் என்று அறிவிப்பு வைக்கப்பட்டுள்ளது.

ஆனால், அனைத்துக்கும் கட்டாயமாக பணம் வசூலிக்கப்படுகிறது. எனவே, தவறிழைத்த ஊழியர்கள் மீது மருத்துவமனை நிர்வாகம் கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றார்.

இது தொடர்பாக மருத்துவமனை டீன் மருதுபாண்டியன் கூறுகையில், உடற்கூறு பரிசோதனைக்குப் பின்பு சடலம் மாறியுள்ளது தெரியவந்ததை அடுத்து, அன்னலட்சுமியின் சடலம் அடையாளம் சரிபார்க்கப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. பிணவறை ஊழியர்கள் பணம் கேட்பதை ஆதாரங்களுடன் புகார் தெரிவித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.