நோய்களுக்கு எதிரான ஓா் அம்பு… “ஜம்பு”

பழங்கள் உண்பது ஆரோக்கியத்துக்கு நல்லது என்பது யாவரும் அறிந்ததே. இந்தப் பழங்களின் மகிமையை அறிந்ததாலேயே முருகக் கடவுள்கூட பழம் சம்பந்தமான ஒரு பிரச்சினை காரணமாக கோபம்கொண்டு பழனி மலைவரை போனதாக சொல்லப்படுகிறது.

பழங்கள் ஒவ்வொன்றுக்கும் பற்பல சிறப்பியல்புகள் இருக்கின்றன. ஆனால் மருத்துவச் சிறப்பியல்புகள் அனைத்தையும் ஒருங்கே தன்னகத்தே கொண்ட ஒரு மருத்துவப் பழமாக ஜம்புப் பழமே விளங்குகின்றது.

சுவைமிக்க இந்தப் பழம் கலோரி பெறுமானம் குறைந்தது. நிறை அதிகரிப்பை ஏற்படுத்தமாட்டாது. நீரிழிவு நோயாளரில் கூட குருதி வெல்லத்தின் அளவை அதிகரிக்கமாட்டாது. அதிகளவு நீா்த்தன்மையும் நார்த்தன்மையும் கொண்டது. தாகம் தணிக்கும். மலச்சிக்கலைத் தவிர்க்கும். ஊட்டச்சத்துக்கள் நிறைந்தவை.

பசியைப் போக்கும், குடிப்பதற்கான இயற்கையான ஆரோக்கிய பானம் தயாரிப்பதற்கு இது ஒரு சிறந்த பழமாகும். சிறுவா்களும் சுகதேகிகளும், சகலவிதமான நோயாளா்களும் உண்பதற்கு ஏற்ற ஒரு கனியாக இது விளங்குகிறது. அத்துடன் இது குருதி கொலஸ்ரோலின் அளவைக் குறைப்பதற்கு உதவுவதாகவும் நம்பப்படுகிறது.

ஜம்பு மரமானது நீண்டகாலம் பயன்தரக்கூடிய ஒரு பசுமையான மரமாகும். இது இலகுவில் நோய்த்தாக்கத்துக்கு உட்படமாட்டாது. இதனால் இதற்கு மருந்தடிக்கவேண்டிய தேவை இல்லை. எமது சூழலில் இலகுவிலே வளரக்கூடிய இந்த மரமானது தான் வளரும் சூழலுக்கு நல்ல குளிர்ச்சியைக் கொடுக்கும். வளா்ந்து 6 மாத காலத்திலேயே பயன்தரத்தொடங்கும் இந்த மரங்களைப் பராமரிப்து மிகவும் இலகுவானது.

எங்களையும் எமது சந்ததியினரையும் எமது சுற்றாடலையும் பாதுகாக்க இன்றே எமது வீடுகளில் இரண்டு ஜம்பு மரங்களை நடுவோம். உறவினா்களுக்கும் நண்பா்களுக்கும் ஜம்பு மரங்களைப் பரிசாக வழங்குவோம். எமது நிறுவனங்கள் மற்றும் பாடசாலைகள் தோறும் ஜம்பு மரங்களை நட்டு வளா்ப்போம். எதிர்காலத்தில் ஜம்புப் பழங்களைப் பிற பிரதேசங்களுக்கும் ஏற்றுமதிசெய்ய ஆரம்பிப்போம்.

thank you:-சி. சிவன்சுதன்
வைத்திய நிபுணர்
யாழ்.போதனா வைத்தியசாலை