தாராபுரத்தில் இரவு நேரம் உணவகத்துக்கு மதுபோதையில் வந்து “டேய், நானும் ரவுடிதான்“ என்று கூறி ரகளையில் ஈடுபட்டு பெண்ணால் பரபரப்பு ஏற்பட்டது.
மேலை நாட்டு கலாசார மோகத்தில் மூழ்கி கிடக்கும் நமக்கு, புத்தாண்டை எளிதில் கடந்துபோக விட்டு விடுவோமா என்ன! ஆணுக்கு பெண் நிகரில்லை என்று கூறும் இந்த 21–ம் நூற்றாண்டில் மார்தட்டி சமத்துவம் பேசும் உலகில், மதுவை குடிப்பதிலும் நாங்கள் சளைத்தவர்கள் மட்டுமல்ல இளைத்தவர்கள் இல்லை என்று ஆங்காங்கே பெண்கள் நிரூபித்து வருகிறார்கள்.
புத்தாண்டையொட்டி நேற்று முன்தினம் இரவு, திருப்பூர் மாவட்டம் தாராபுரம் பஸ் நிலையத்திற்கு அருகே இருந்த கடைகளில் வியாபாரம் களைகட்டியிருந்தது.
குறிப்பாக அங்கிருந்த உணவகங்களில் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. அப்போதுதான் பஸ் நிலையம் அருகே இருந்த ஒரு உணவகத்தில் 40 வயது மதிக்க பெண் ஒருவர் குடித்துவிட்டு ரகளையில் ஈடுபடுவதாக தாராபுரம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
உடனே போலீசார் சம்பந்தப்பட்ட உணவகத்திற்கு விரைந்து சென்றனர். அங்கு ரகளையில் ஈடுபட்டு கொண்டிருந்த பெண், ஆடை கலைந்த நிலையில் வாய்க்கு வந்தபடி வார்த்தைகளை பேசி ஆட்டம் போட்டுக்கொண்டிருந்தார்.
இதையடுத்து போலீசார் அந்த பெண்ணை சமாதானம் செய்ய முயன்றனர். ஆனால் அவர்களால் முடியவில்லை. அதன்பின்னர் அந்த பெண்ணை ஆம்புலன்ஸ் மூலம் தாராபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர்.
அப்போது அங்கு இருந்த டாக்டர்கள், அந்த பெண் அதிகமாக மது குடித்து இருப்பதாகவும், எனவே ஊசி எதுவும் போடவாய்ப்பு இல்லை என்றும் கூறி விட்டனர்.
இதனால் அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் தவித்த போலீசார், அந்த பெண்ணுக்கு மதுபோதை தெளியும் வரை காத்திருந்தனர். பின்னர் லேசாக போதை தெளிந்தவுடன் விசாரணையை தொடங்கினார்கள்.
முதலில் அந்த பெண் உளறினார். அதன்பின்னர் பேச ஆரம்பித்தான். அப்போதுதான் அந்த பெண் மதுரை ஆரப்பாளையத்தை சேர்ந்த சுகந்தி (வயது 43) என்றும் திருப்பூரில் கணவருடன் தங்கியிருந்து பழவியாபாரம் செய்து வருவதும் தெரியவந்தது.
சுகந்திக்கு ஏற்கனவே குடிப்பழக்கம் இருந்துள்ளது. இதனால் சுகந்திக்கும், அவருடைய கணவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் நேற்று முன்தினம் சுகந்தி குடித்துவிட்டு கணவரிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார். இதனால் கோபமடைந்த சுகந்தியின் கணவர், தனது குழந்தைகளை அழைத்து கொண்டு மதியம் பஸ் ஏறி மதுரைக்கு சென்றுவிட்டார்.
அதன் பிறகு வீட்டில் தனியாக இருந்த சுகந்திக்கு என்ன செய்வதென்று தெரியாமல், டாஸ்மாக் கடைக்கு சென்று மதுவாங்கி வந்து வீட்டில் வைத்து குடித்துள்ளார்.
அதன் பிறகு இரவு திருப்பூரில் இருந்து பஸ்சில் ஏறி மதுரைக்கு சென்றுள்ளார். பஸ் வந்து கொண்டிருக்கும்போதே சுகந்திக்கு போதை அதிகமாகி விட்டது.
இதனால் பஸ்சில் இருந்த மற்ற பயணிகளிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார். இதைப்பார்த்த பஸ் நடத்துனர் சுகந்தியின் நிலையை தெரிந்து கொண்டு, தாராபுரம் வந்ததும் பஸ் நிலையத்தில் சுகந்தியை இறக்கி விட்டுவிட்டு சென்றுவிட்டார்.
இதனால் தாராபுரம் பஸ் நிலையத்தில் படுத்து இருந்த சுகந்திக்கு பசி எடுத்து உள்ளது. உடனே அருகே இருந்த உணவகத்திற்கு சென்று, அங்கிருந்த உணவு பரிமாறுபவரிடம் ஒரு ரவா தோசை கொடு என்று கேட்டுள்ளார்.
உணவு பரிமாறுவர் ரவா தோசையை எடுத்துக் கொண்டு சுகந்தி அமர்ந்திருந்த மேசைக்கு வந்து பார்த்தபோது சுகந்தியை காணவில்லை. அதனால் அவர் ரவா தோசையை எடுத்து சென்றுவிட்டார்.
இந்த நிலையில் வேறொரு மேசையில் மாறி அமர்ந்திருந்த சுகந்தி, உணவு பரிமாறும் நபரை அழைத்து ‘‘ஏண்டா நான் தோசை கேட்டனே, ஏண்டா கொடுக்கலை ? என்று மரியாதை குறைவாக மிரட்டியுள்ளார். அதற்கு உணவு பரிமாறுகிறவர் நீங்கள் மேசை மாறி உட்கார்ந்தது எனக்கு தெரியவில்லை’’ என்று கூறியுள்ளார்.
இதனால் ஆத்திரம் அடைந்த சுகந்தி எழுந்து சென்று, அந்த நபரின் கன்னத்தில் ஓங்கி அடித்துள்ளார். இதில் நிலை தடுமாறி உணவு பரிமாறும் நபர் கீழே விழுந்ததால் உணவகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
உடனே உணவகத்தில் வேலை செய்த மற்ற ஊழியர்கள் சுகந்தியை நோக்கி ஓடிச்சென்று ‘‘ நீ எல்லாம் ஒரு பொம்பளையா? என கேட்டுள்ளனர்.
அதற்கு சுகந்தி ‘‘ டேய்..! நானும் ரவுடிதான்..! பாக்கிறியா.. பாக்கிறியா.. என்று அருகே வந்தவர்களை தள்ளிவிட்டு, அவர்களிடம் தகராறு செய்துள்ளார்.
அப்போது ரகளையில் ஈடுபடுவதைக் கண்டு, உணவகத்தில் சாப்பிட்டுக் கொண்டிருந்தவர்கள் தலைதெறிக்க வெளியே ஓட்டம் பிடித்தனர்.
பின்னர் சுகந்தி தான் உடுத்து இருந்த சேலையை உருவி வீசி விட்டு தரையில் படுத்து உருண்டு கத்தியபடி ரகளை செய்ததும், அதன்பின்னரே உணவகத்தில் உள்ளவர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்ததும் விசாரணையில் தெரியவந்தது.
இதையடுத்து சுகந்தியின் நிலைமை அறிந்த ஆஸ்பத்திரியில் இருந்து பெண்கள் சிலர், சுகந்தியை குளிப்பாட்டி, அவருக்கு புதுசேலை வாங்கி கொடுத்து, உடுத்தினார்கள்.
பின்னர் அவரை ஆஸ்பத்திரியில் இருந்து தாராபுரம் பஸ் நிலையத்திற்கு ஆட்டோவில் அழைத்து சென்றனர். பின்னர் அவருக்கு பஸ் கட்டணத்திற்கு பணம் கொடுத்து, அங்கிருந்து மதுரை செல்லும் பஸ்சில் ஏற்றி விட்டனர்.
அதன்பின்னரே ஆஸ்பத்திரி ஊழியர்களும், உணவக உரிமையாளரும், போலீசாரும் நிம்மதி அடைந்தனர். அதுவும் புத்தாண்டு அன்று உணவகத்தில் பெண் ஒருவர் குடித்துவிட்டு ரகளையில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.