சென்னை: மாநிலத்தை ஆள்வதற்கு தமிழர்கள் தகுதி இல்லாதவர்களா என்று ரஜினியின் அரசியல் பிரவேசம் குறித்து ‘நாம் தமிழர்’ கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கருத்து தெரிவித்துள்ளார்.
புதிதாக அரசியல் கட்சி துவங்கி அடுத்த சட்டமன்றத் தேர்தலில் 234 தொகுதிகளிலும் போட்டியிடப் போவதாக நடிகர் ரஜினிகாந்த் அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக பலவேறு அரசியல் கட்சி தலைவர்களும் பல்வேறு விதமாக எதிர்வினை புரிந்து வருகிறார்கள்.
அந்த வரிசையில் சென்னையில் இன்று பத்திரிக்கையாளர்களை சந்தித்த ‘நாம் தமிழர்’ கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியதாவது:
இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் மட்டும் தான் எல்லா விதமான ஜனநாயகமும் பேசுவார்கள், யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம் என்று இங்கு மட்டும்தான் சொல்வார்கள்.
உலகிற்கே ஆளும் முறையை சொல்லிக் கொடுத்த பெருமை வாய்ந்த பாரம்பரியம் உடையவர்கள் நாம். அத்தகைய சிறப்பு வாய்ந்த மாநிலத்தை ஆள்வதற்கு தமிழர்கள் யாரும் தகுதி இல்லாதவர்களா? ஒருவரும் இங்கு இல்லையா?
காவிரிப் பிரச்னையின் போது சொந்த நாட்டிலேயே மக்கள் அகதிகள் போல தமிழர்கள் விரட்டி அடிக்கப்பட்டார்களே?
இப்போது அரசியல் பேசுபவர் அப்போது எங்கே போனார்? பொதுச் சொத்துக்களும் பேருத்துகளும் அடித்து நொறுக்கப்பட்டதோடு, ஆண்களும், பெண்களும் கடுமையாகத் தாக்கப்பட்டனர்.
அப்போதெல்லாம் ஒரே நாடு ஒரே தேசத்தில் ஏன் மக்கள் அடித்து விரட்டப்படுகிறார்கள் என்று யாருமே கேட்கவில்லையே ஏன்?
எனவே ரஜினி அரசியலுக்கு வந்தால் அவரை கடுமையாக எதிர்த்து அரசியல் செய்வோம். ரஜினிக்கு என்ன கொள்கை இருக்கிறது? மக்களிடம் கொண்டு செல்ல? ரஜினி சிஸ்டம் சரியில்லை என்கிறார்.
சிஸ்டம் என்றால் அமைப்பு என்று பொருள். எந்த சிஸ்டம் சரியில்லை என்று ரஜினியும் தெளிவாக சொல்ல வேண்டும்.
இவ்வாறு சீமான் தெரிவித்தார்.