ராகுல் பங்கேற்ற கூட்டத்தில் கூட்ட நெரிசல் ஏற்பட்ட போது உள்ளே வந்த காங்கிரஸ் எம்எல்ஏ ஆஷாவை கன்னத்தில் அறைந்தது பற்றி பெண் காவலர் விளக்கம் அளித்துள்ளார்.
ஹிமாசலப் பிரதேச மாநில காங்கிரஸ் எம்எல்ஏ ஆஷா குமாரியை பெண் காவலர் ஒருவர் கன்னத்தில் அறைவது போன்ற விடியோ சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவியது.
இது குறித்து விளக்கம் அளித்திருக்கும் பெண் காவலர், காங்கிரஸ் ஆலோசனைக் கூட்டத்தில் கூட்ட நெரிசலைக் கட்டுப்படுத்திக் கொண்டிருக்கும் போது உள்ளே வந்த எம்எல்ஏ ஆஷா குமாரி உள்ளே விடுமாறு கூறினார்.
முதலில் அவர் யார் என்று எனக்குத் தெரியாது. சற்று நேரம் காத்திருக்குமாறு கூறினேன். உடனே அவர் நான் யார் என்று தெரியுமா என்று சத்தம் போட்டவாறு என்னைத் தாக்கினார்.
என்னை மூன்று முறை கன்னத்தில் அறைந்தார். என்னைக் காத்துக் கொள்ளவே திருப்பி அறைந்தேன்.
ஆனால் அதற்குப் பிறகு தான் அவர் எம்எல்ஏ என்பதே எனக்குத் தெரியும். எனினும் அவர் செய்தது தவறு என்பதால் வழக்குத் தொடுத்துள்ளேன். நியாயம் கிடைக்கும் என்று நம்புகிறேன் என்றார்.
எம்எல்ஏவை, பெண் அறையும் அந்த விடியோவில் எம்எல்ஏ ஆஷா குமாரி, பெண் காவலர் இடையே வாக்குவாதம் நடைபெறுவது போலவும், ஒருகட்டத்தில் பெண் காவலரை அவர் கன்னத்தில் அறைகிறார்.
பெண் காவலரும் பதிலுக்கு 2 முறை ஆஷா குமாரியை அறைவதும் அந்த விடியோவில் இடம்பெற்றுள்ளது.
ஹிமாசலப் பிரதேச மாநிலம், சிம்லா நகருக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வெள்ளிக்கிழமை வந்தார். அவரது பாதுகாப்புக்காக காவலர்கள் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். அந்தக் கூட்டத்தில்தான் இந்த கைகலப்பு ஏற்பட்டது.
வருத்தம் தெரிவித்த எம்எல்ஏ: பின்னர், தனது செயலுக்கு ஆஷா குமாரி வருத்தம் தெரிவித்து மன்னிப்பு கோரினார்.
அவர் கூறுகையில், ‘அந்தப் பெண் காவலர் எனக்கு மரியாதை அளிக்கவில்லை. என்னை அடித்துவிட்டார். இருப்பினும், நான் அமைதி காத்தேன்’ என்றார்.
எனினும், ஆஷா குமாரிக்கு எதிராக அந்தப் பெண் காவலர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதனடிப்படையில், அவருக்கு எதிராக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.