இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜூவ் காந்தி படுகொலை செய்யப்பட்ட பின்னர் விடுதலைப் புலிகளை பயங்கரவாத அமைப்பாக இந்தியா தடைசெய்திருந்தது என முன்னாள் பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்துள்ளார்.
கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய பிரத்தியேக செவ்வியில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்தும் பேசிய அவர்,
“ராஜூவ் காந்தி படுகொலை செய்யப்பட்டதையடுத்து பல்வேறு நாடுகளிலும் வழக்கு தொடரப்பட்டன. பின்னர் செப்டம்பர் 11 தாக்குதலை தொடர்ந்து உலகம் முழுவதிலும் உள்ள பயங்கரவாதத்தின் அனைத்து வடிவங்களையும் அழிப்பதற்கு முடிவு செய்யப்பட்டது.
உலக அரங்கின் இந்த நடவடிக்கையில் இருந்து விடுதலைப் புலிகளை காப்பாற்ற நினைத்தேன். இந்நிலையிலேயே, ஒஸ்லோவில் இடம்பெற்ற சமாதான பேச்சுவார்த்தையின் போது இரு தரப்பினருக்கும் பெடரல் தீர்வுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டது.
விடுதலைப் புலிகளின் பிரதிநிதிகள் இந்த ஆவணத்தில் கையொப்பமிட விரும்பவில்லை. தலைவர் பிரபாகரனின் அனுமதி இல்லாமல் புலிகளின் தலைமை பேச்சாளரான அன்ரன் பாலசிங்கம் கையெழுத்திட விரும்பவில்லை.
அந்த உடன்படிக்கையில் கையெழுத்திடுவதற்கு நான் ஊக்கப்படுத்தினேன். ஒஸ்லோவில் இருந்து தாயகம் திரும்பிய போது விடுதலைப் புலிகளின் தலைவர் அதனை ஏற்றுக்கொள்ளவில்லை.
நாம் ஒரு சமாதான தீர்வுக்கு உடன்படவில்லை என்று அவரிடம் சொல்ல முயன்றேன். ஆனாலும் இது முடியாமல் போனது. பின்னர் விடுதலைப் புலிகள் அமைப்பிலிருந்து வெளியேறிவிட்டேன்.
விடுதலைப் புலிகளின் தலைவரை எனக்கு நன்றாகவே தெரியும். அவர் எப்படி செயற்படுவார் என்பதும் நன்கு தெரியும். நான் எந்த நேரமும் இலக்கு வைக்கப்படலாம் என்பதும் தெரியும்.
விடுதலைப் புலிகள் அமைப்பிலிருந்து வெளியேறி மட்டக்களப்பிற்கு வந்தேன். என்னோடு வந்தவர்களை அவர்களின் பெற்றோர்களிடம் அனுப்பிவைத்தேன்.
பின்னர் அந்த நேரத்தில் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த அலி ஜஹிர் மவுலானாவுடன் கொழும்புக்கு சென்றேன். ஹில்டன் ஹோட்டலில் பத்து நாட்கள் தங்கியிருந்து அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்தியதாக” அவர் தனது செவ்வியில் குறிப்பிட்டுள்ளார்.